ஒன்றிய அரசின் ‘மக்கள் விரோத – ஜனநாயக விரோத’ செயல்பாடுகளுக்கு எதிராக ராகுல் காந்தியின் தலைமையிலான நாடு தழுவிய ‘பாரத் ஜோடோ யாத்ரா – மக்கள் ஒற்றுமை பயணம்’ கன்னியாகுமரியில் செப்டம்பர் 7 ந்தேதி ஆரம்பித்துள்ளது. ‘மிலே கதம், ஜோடோ வதன் – பாதைகள் ஒருங்கிணையட்டும், நாடு ஒன்றாகட்டும்’ என்ற முழக்கத்தோடு ஆரம்பித்துள்ள இந்த போராட்ட எழுச்சிப் பயணம் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள மிகப்பெரும் அரசியல் நிகழ்வாகும்.
கன்னியாகுமரியில் ஆரம்பித்து 150 நாட்கள், 3570 கிலோமீட்டர் நடந்து பயணித்து காஷ்மீரைச் சென்றடையும் இந்த மக்கள் ஒற்றுமை பயணம் 12 மாநிலங்களையும் இரண்டு யூனியன் பகுதிகளையும் கடந்து செல்கிறது. இப்பயணம் முழுவதும் ராகுல் காந்தியுடன் 118 பேர் பங்கெடுக்கின்றனர். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை இப்பயணத்திற்காக காங்கிரஸ் செய்துள்ளது. அச்சத்தையும் வெறுப்பையும் பரப்பி ஒன்றிய அரசால் இக்கட்டான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கக்கூடிய, கவலைகளை சுமந்து நிற்கக்கூடிய இந்தியாவின் வழிகளின் ஊடாக நாட்டை மீட்டெடுக்க ராகுல் காந்தியும் அவரது குழுவும் புறப்பட்டு விட்டார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார். சமகால இந்தியாவில் மிகவும் அவசியமாக தேவைப்படும் போராட்டத்திற்கு பெரிய அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரசுடன் அரசியல் முரண்பாடு உள்ள நிலையிலும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்தப் பயணத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் செய்வதற்காக வேண்டித்தான் இவ்வாறான ஒரு பயணத்தை ராகுல் காந்தி துவங்கியுள்ளார் என விமர்சனம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதை புறந்தள்ளி உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத ஆட்சியையும் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய அவர்கள் அரசியலையும் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இந்த மக்கள் ஒற்றுமையை பயணத்தை கட்சி நடத்துகிறது என அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அரசின் ஆசிர்வாதத்தோடு நாட்டை பாசிசத்தின் பக்கம் இழுத்துக் கொண்டு செல்லும் இந்த அதி முக்கியமான காலகட்டத்தில் அதற்கு எதிராக யார் களமிறங்கினாலும் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். காலம் கடந்தாலும், வலு குறைந்தாலும் இன்னமும் இந்த நாட்டின் கிராமங்களில் வேர்கள் உள்ள ஒரு அரசியல் இயக்கம் இதற்கு முன் வந்துள்ளது எதிர்பார்ப்பை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, மிதவாத இந்துத்துவாவை பின்பற்றி தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்குண்டான ஒரு வாய்ப்பாகவும் கூட இப்பயணம் அமையலாம்.
இப்பயணத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம் தேர்தல் களங்களிலும் எதிரொலிக்கலாம். மக்கள் பயணத்தின் மூலம் கிடைக்க பெறும் அரசியல் லாபத்திற்கு அப்பால் அவர்களது கட்சி கட்டமைப்பை இதன் மூலம் வலுப்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கலாம்.
இப்பயணத்தின் ஊடாக காங்கிரஸ் முன்வைக்கும் முழக்கங்கள் ஒவ்வொன்றும் இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனநாயகவாதிகளும் கூறிச் சென்றவைகள்தான். வெறுப்பின், பகைமையின் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து நாட்டை பிளவுபடுத்துகின்ற, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை சீரழித்து விட்ட, அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தெறிந்த ஒரு ஆட்சியை மக்களிடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் போராட்டங்களில் நாம் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். ஆதரவு அளிக்க வேண்டும். 12 வருடம் முன்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார சிக்கல்கள் உருவான பொழுது அவற்றின் பாதிப்புகள் எதுவும் ஏற்படா வண்ணம் தற்காத்துக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
கார்ப்பரேட்மயமாக்களும் ஊழலும் நிறைந்து நின்ற பொழுதும் மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசு மிகச் சிறப்பாக பொருளாதார நிலைமையை கையாண்டது. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நரேந்திர மோடியின் ‘பொருளாதார சீர்திருத்த திட்டங்கள்’ எல்லாம் நாட்டை பட்டினியின் பக்கம் கொண்டு சேர்த்து விட்டது என புள்ளி விவரங்கள், அறிக்கைகள் நம்மை அச்சமூட்டுகிறது. கோவிட் கொள்ளை நோய் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு முன்பாகவே நமது நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கி பயணிக்க துவங்கிவிட்டது. இந்த நாட்டின் வரலாறு சந்திக்காத அளவிற்கு மிகப்பெரும் வேலை வாய்ப்பின்மையை இப்போது நாடு அடைந்துள்ளது. அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் காலடியில் அடகு வைத்தும் அதன் மூலம் மறைமுகமான பெறும் கொள்ளைகளையும் இந்த அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கேடு கெட்ட போக்கிற்கு முடிவு கட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள மிருகப் பெரும்பான்மையின் பலத்தில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அடாவடித்தனங்களுக்கு அளவே இல்லை. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்துத்துவ சனாதனம்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே சட்டத் திருத்தங்களின் மூலமாக இந்து ராஷ்டிரா என்ற தங்களது கனவை நோக்கி சங்பரிவார் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வெளியே வெறியூட்டப்பட்ட கும்பல்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது பெரும் தாக்குதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த எட்டு வருட காலகட்டத்தில் எத்தனையோ கும்பல் படுகொலைகளுக்கு இந்த நாடு சாட்சியாக இருந்துள்ளது. இந்தப் படுகொலைகளின் இரைகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் என்றாவது வாய் திறந்து உள்ளதா என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்கள் ஒற்றுமை பயணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் இதை குறிப்பிட்டுள்ளார்கள். எனினும், வெறும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதில் மட்டும் அது ஒதுங்கி விடுகிறது. பிரித்தாளும் சூழ்ச்சி என்பதற்கு அப்பால், சங்பரிவார் நடவடிக்கைகள் ஒரு இனப்படுகொலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும். இந்தப் பயணத்திலும் காங்கிரஸ் அதைப் பேச தயாராக இல்லை என்பதுதான் வேதனையான ஒன்று. அதுதான் அந்தக் கட்சியின் பலவீனமும். நாட்டில் உள்ள ஆதிக்க சமூகங்கள் அல்ல, சிறுபான்மை சமூகங்களும் தலித்துகளும் ஆதிவாசிகளும்தான் இன்றளவும் காங்கிரசின் ஆதரவு சக்திகளாக உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.
ராகுல் காந்தி பயணம் செல்லும் பாதைகள்தோறும் இப்படிப்பட்ட மக்களை நீங்கள் பார்ப்பீர்கள். சனாதன சங்பரிவார் சக்திகளின் வெறிகளுக்கு இரையான அவர்களின் ரத்தச் சுவடுகளை நீங்கள் பார்ப்பீர்கள். அந்தக் கும்பல்களின் பாலியல் வெறிகளுக்கு பலியான பில்கிஸ் பீவியின், ஹத்ராஸ் பெண் குழந்தையின், காஷ்மீர் சிறுமியின் கதறல்களை நீங்கள் கேட்பீர்கள். உங்கள் அரசால் கொண்டுவரப்பட்ட உபா சட்டத்தால் சிறைகளில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் நிரபராதிகளின் குடும்பங்களின் கண்ணீரை நீங்கள் பார்ப்பீர்கள். வளர்ச்சியின் பெயரால் தங்கள் இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட பழங்குடியினரின் பரிதாபங்களை நீங்கள் பார்ப்பீர்கள்.
சாதியின் பெயரால் இன்றளவும் ஆதிக்க வர்க்கங்களால் ஒடுக்கப்படும், சுட்டுக் கொல்லப்படும் தலித் சமூகங்களின் அவலங்களை நீங்கள் பார்ப்பீர்கள். தங்களது அரசியல் வெறிக்காக, வெற்றிக்காக இடித்து தள்ளப்பட்ட ஆலயங்களை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த சமூகங்களின் அவலங்களை, பரிதாபங்களை, கண்ணீரை சுமந்து கொண்டு இந்தப் பயணம் முன்னேறிச் செல்ல வேண்டும். அவர்களின் பிரதிநிதியாகவும் ராகுல் காந்தி முன்னேற வேண்டும். அவ்வாறு பயணப்படுகின்ற பொழுதுதான் ‘மக்கள் ஒற்றுமை பயணம்’ முன்வைக்கும் ஒற்றுமை செய்தி உண்மைப்படும். அந்த உண்மையான மாற்றத்தை நோக்கி இந்தப் பயணம் முன்னேறட்டும்., பாசிசம் முடிவுக்கு வரட்டும் என நெஞ்சார வாழ்த்துகிறோம்.
K.S. அப்துல் ரஹ்மான்.