பாலஸ்தீனின் காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண் செவிலி ரசான் அல் நஜ்ஜார் (21) இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். காசாவின் கான் யூனுஸ் நகரில் துப்பாக்கியால் சுட்டப்பட்டு அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறியுள்ளது.
காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இஸ்ரேல் இராணுவத்தினால் தாக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்யும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளை சீருடையுடன் அவர் இருந்ததாகவும், தன் கைகளை மேலே உயர்த்தியும் இஸ்ரேல் இராணுவம் அவரின் நெஞ்சில் சுட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பாலஸ்தீனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 30ல் இருந்து இப்போதுவரை 121 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 12,000 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனில் இருந்து இஸ்ரேலால் துரத்தப்பட்டு 70 ஆண்டுகளாக அகதிகளாய் அண்டை நாடுகளில் வாழும் பாலஸ்தீனர்கள், தங்களின் தாயகத்துக்குத் திரும்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 30ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த “கிரேட் ரிடர்ன் மார்ச்” போராட்டம் இப்போதும் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.