”தேசியக் குடியுரிமைப் பதிவேடும் (NRC)”. “தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் (NPR)”
National Citizenship Register (NPR) and National Population Register
மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பதும் அவரே நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதும் அறிந்ததே. கேரளத்தைப் போல மார்க்சிஸ்ட் கட்சி ஒரே மேடையில் நின்று முக்கிய எதிர்க்கட்சியுடன் இணைந்து தன் எதிர்ப்பை அங்கு காட்டாவிட்டாலும் அங்கும் மார்க்சிஸ்ட் கட்சி அதை ஆதரிக்கிறது. இது பா.ஜ.கவுக்கு மிகவும் கடுப்பேத்தி உள்ளது.
மம்தா பேனர்ஜி அத்தோடு நிறுத்தவில்லை. அங்கே இப்போது நடைபெற்றுக்கொண்டுள்ள “தேசிய மக்கள்தொகைப் பதிவேடு” (NPR) தயாரிக்கும் வேலையை நிறுத்துவதற்கு ஆணையிட்டு. அந்த வேலை இப்போது நிறுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் எந்தச் சலசலப்பும் ஏற்படாத நிலையில் மே.வங்கத்தில் இவ்வாறு ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக Scroll.in தளம் ஒரு கள ஆய்வைச் செய்து இது வேறொன்றும் இல்லை; குடியுரிமைப் பதிவேட்டின் முன்னோடிதான் இது எனக் கூறியுள்ளது. சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இணையத் தளத்தில் மத்திய அரசு இந்த ‘NPR’ன் குறிக்கோளாகச் சொல்வது: “இந்த நாட்டில் வழமையாக வசித்து வரும் ஒவ்வொருவரின் தொகுப்பான அடையாளத் தரவுகளை (a comprehensive identity database of every usual resident in the country) உருவாக்குவது”- என்பதுதான்.
இந்த தரவுத்தொகுப்பு “மக்கள் தொகை விவரங்களோடு உடல் மற்றும் நடத்தை, பண்பாடு” (demographic as well as biometric particulars) ஆகியன குறித்த விவரங்களையும் உள்ளடக்குமாம்.
14 கேள்விகளை உங்கள் முன் வைத்து அதன் அடிப்படையில் உங்களின் தரவுத் தொகுப்பு உருவாக்கப்படும். அந்தப் பதிநாலு கேள்விகள் மூலம் தொகுக்கப்படும் உங்கள் அடையாளங்கள் ஆவன:
பெயர், வயது, பாலினம், குடும்பத்தில் உங்கள் உறவு, தேசியம், கல்வித் தகுதி, வேலை, பிறந்த தேதி, இருப்பிட முகவரி, தாய்மொழி (name, age, sex, relationship in household, nationality, educational qualifications, occupation, date of birth, marital status, residential address, birthplace and mother tongue) ஆகிய வழக்கமாகக் கேட்கப்படும் பன்னிரண்டு தரவுகளோடு இப்போது கூடுதலாகக் கேட்கப்படும் கேள்வி “பெற்றோர்கள் எங்கே பிறந்தனர்” என்பது.
இவை மட்டுமல்ல இந்த தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உங்களின் ஆதார் விவரங்களையும், ஓட்டுநர் உரிமம், மொபைல் தொலைபேசி எண் ஆகியவற்றையும் கோருகிறது. ஆனால் அது கட்டாயம் அல்லவாம். “இருந்தால்” கொடுக்கலாமாம்.
ஆனால் என்ன நடக்கும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பொதுவாக யாரும் ஆழமாக யோசிக்காமல் இந்தத் தரவுகளைத் தந்துவிடுவார்கள். அதுதான் எல்லாத்துக்கும் ஆதார் கேட்குறானே, இதில மட்டும் கொடுத்தா என்ன என்கித்ற ‘லாஜிக்’ ஒருபுறம்: மற்றது இப்போது கூட ஆதார் கட்டாயம் இல்லை என்றாலும் ஒரு ரயில் டிக்கட் வாங்குவதற்குக் கூட இன்று ஆதார் தேவைப்படும்போது எல்லோரும் இன்று அந்த அட்டையைப் பெற்று பத்திரமாகச் சட்டைப்பையில் வைத்துக் கொள்கிறோம் அல்லவா, அதேபோல மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் கட்டாயப்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு.
ஆக நமது இந்த ‘பயோ மெற்றிக்’ விவரங்களும், நமது மூதாதைகளின் பிறப்பு விவரங்களும் மத்திய அரசின் கைகளுக்குப் போகின்றன.
(தொடரும்)
-அ.மார்க்ஸ்