தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் சென்சஸ் கணக்கெடுப்பையும் ஒன்றாக முன்னிறுத்துவது ஒரு மோசடி
தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் NRC க்கும் அஸ்சாமில் நடந்து முடிந்துள்ள NRC க்கும் ஒரு வேறுபாடு உண்டு. வாஜ்பேயீ ஆட்சியில் (2003) உருவாக்கப்பட்ட விதிகளிலிருந்து அஸ்சாமுக்கு ஒரு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டு இது நடந்து முடிந்துள்ளது. அது என்ன? 1951ம் ஆண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட NRC ஒன்றின் அடிப்படையில் அல்லது 1971 மார்ச் 24 வரை உள்ள வாக்குரிமைப் பட்டியல் அடிப்படையில் அஸ்சாமியர்கள் மட்டும் தமது குடியுரிமையைக் கோரலாம். இது இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது. பிற மாநிலத்தவரைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் (NPR) அடிப்படையிலேயே குடியுரிமை வழங்கப்படும்.
இந்த அடிப்படையில் அஸ்சாமின் குடியுரிமைப் பதிவேட்டிற்கும் (NRC), மற்ற மாநிலப் பதிவேடுகளுக்கும் என்ன வேறுபாடு?
அஸ்சாமில் ஒருவர் தன் குடியுரிமைத் தகுதியை விண்ணப்பித்துப் பெற வேண்டும் (application method).. பிறமாநிலங்களில் இது கணக்கெடுப்பின் (enumeration) மூலம் தீர்மானிக்கப்படும். அச்சாமில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் குடியமர்வுத் தேதி (cut off date) தெரியும். அதற்கான ஆவணங்களும் இருக்கும். அவர் இந்துவா இல்லையா என்பதும் அங்கு கேள்வி அல்ல. ஆனால் இங்கே எல்லா அடிப்படைகளும் அதிகாரவர்கத்தால் (enumerators) தீர்மானிக்கப்படும். யார் சந்தேகத்துக்குரியவர் என்பதை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். அரசு முடிவு செய்யும். இந்த வகையில் மற்ற மாநிலங்களில் இது மேலும் சிக்கலாகிறது.
தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை (NPR) ‘சென்சசின்’ ஒரு பகுதி என்றுதான் அரசு சொல்லுகிறது. சில நாட்கள் முன் மம்தா பேனர்ஜி தனது மாநிலத்தில் NPR பணியை நிறுத்தி ஆணையிட்டார். உடனே பா.ஜ.க எம்.பியான ஸ்வபன்தாஸ் குப்தா NPR என்பது 2021 சென்சஸ் தரவுகளுக்கானது அல்லவா, அதை ஏன் நிறுத்த வேண்டும் எனக் குற்றம் சாட்டினார்.
இது குறித்து ஒரு விளக்கம் சொல்ல வேண்டும். NPR என்பது 1955ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003ம் ஆண்டில் இயற்றப்பட்ட அது தொடர்பான விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சென்சஸ் என்பது 1948ம் ஆண்டு சென்சஸ் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது. சென்சஸ் விவரங்கள் இரகசியமானவை. வேறு எதற்கும் அதைப் பயன்படுத்தலாகாது. NPR தரவுகள் வெளிப்படையானவை. அவை பாதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டுக்கு உட்பட்டவை.
இரண்டின் சட்டங்களும் விதிகளும் வேறு வேறு. அதோடு இரண்டின் குறிக்கோள்களும் வேறு. NPR க்கும் சென்சசுக்கும் எந்த உறவும் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் செய்யப்படுவதாலேயே இரண்டும் ஒன்றாகி விடாது. ஸ்வபந்தாஸ் சொல்வது பச்சைப் பொய். ஏமாற்று.