இந்தியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஒருநாளில் மட்டும் 3,30,000 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாளின் இறப்பு மட்டும் 2200 ஐ கடந்துவிட்டது. இந்த திடீர் நிகழ்வு இந்தியாவின் சுகாதார கட்டமைப்பையே நிர்மூலமாக்கிவிட்டது. ஒருபுறம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக போராடும் மக்கள் என்றால், மற்றொருபுறம் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காமல் வாசலிலேயே போராடிப் பலியாகும் மக்கள். சுடுகாட்டைத் தவிர நாடே சுடுகாடாய் எரிந்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.
இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தியாவைக் காக்கப் பாகிஸ்தான் தயாராக வேண்டும் என தமது பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள். #IndiaNeedsOxygen என்ற ஹாஸ்டாக் பாகிஸ்தான் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அரசியல் வித்தியாசங்களைக் கடந்து இந்த இடத்தில் இம்ரான் கான் உதவ வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ‘நாம் எவ்வளவு வேறுபாடுகளுடன் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் மனிதநேயத்திற்கானவர்கள். இந்தியாவில் வாழும் மக்கள் மீது கருணைக் கூற நாம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்’ எனப் பதிவிட்டுள்ளார் ஒருவர்.
மேலும், ‘இந்தியா மீண்டு வரட்டும், பாகிஸ்தான் உங்களோடு இருக்கிறது’, ‘மனிதம் அனைத்தையும் கடந்தது, துன்பப்படுவதற்கு யாரும் பிறக்கவில்லை’ போன்ற பதிவுகள் பாகிஸ்தான் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகப் பாகிஸ்தானின் பிரபல ‘இதி தொண்டு நிறுவனம்’ இந்தியாவிற்கு உதவ முன்வருவதாகத் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பைசல் இதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியாவின் கொரோனா நெருக்கடியை நாங்கள் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். தற்போதைய உங்களது விதிவிலக்கான நிலைக்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நிலையின் கடினத்தை எங்கள் நிறுவனம் நன்கு புரிந்து வைத்துள்ளது. ஆதலால், எங்களது மனிதநேய குழுக்களின் மூலம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவக் காத்திருக்கிறோம். 50 ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவல் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என உங்கள் பணியாளர்களுக்குத் தேவையானவர்களை அனுப்பி வைக்கிறோம். முக்கியமாக, அவர்களுக்கான எந்த தேவையையும் நாங்கள் கேட்க மாட்டோம். பெட்ரோல், உணவு, இருப்பிடம் என அனைத்திற்கும் நாங்களே பொறுப்பேற்கிறோம். எவ்வளவு விரைவாக இந்தியாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறதோ இதி குழு புறப்படத் தயாராக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். இதற்கு இந்திய அரசு இன்னும் எந்த பதிலும் கூறவில்லை.