இனியும் வேண்டாம் உயிர் துறப்பு – நாம் நமக்கானவர்கள் அல்ல,சமூகத்திற்கானவர்கள்
திருச்சியில் நீட் அரக்கன் மற்றுமொரு படுகொலையை நிகழ்த்திவிட்டான்.நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவி தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 907 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் நீட் தகுதி தேர்வு அவரை அவ்வாறு செய்ய வைத்து விட்டது. சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த சுபஸ்ரீ நீட் தேர்வு காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பை அதிக கவனம் செலுத்தி படிக்காமல் நீட் தேர்விற்கான தயாரிப்பில் ஈடுபட்டு இருந்து வந்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பை கவனம் செலுத்தி படிக்காவிட்டாலும் அவர் 907 மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.ஆனால் நீட் தகுதி தேர்வை அவரால் வெல்ல முடியவில்லை.
ஒரு வேளை நீட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக பயின்று நல்ல மதிப்பெண் பெற்று அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பார்.அவ்வாறு தமிழக மாணவர்கள் எளிதாக சேர்ந்து விட கூடாது என்கிற வஞ்சக எண்ணத்தில் தான் மத்திய அரசு தமிழக மாணவர்கள் மீது நீட்டை புகுத்தியது.இதனால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் அனிதாவும்,பிரதீபாவும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சுபஸ்ரீயும் தன் இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
நம்முடைய லட்சியத்தை அடைய முடியாமல் போகும் போது மனம் விரக்தி அடையும் என்பது இயற்கையானதே,ஆனால் அதே நேரத்தில் அவற்றிலிருந்து மீண்டு வந்து நம்முடைய பாதையை தீர்மானித்துக் கொண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும். அதை விடுத்து தற்கொலை செய்து கொள்வது என்பது எந்த வித தீர்வையும் ஏற்ப்படுத்தாது.
நாம் நம் எதிர்ப்பை சர்வாதிகாரத்திற்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும். நம் கனவை நசுக்கியவர்களை துணிவோடு எதிர்க்க வேண்டும். இந்த சமூகத்தில் நீட் மட்டும் பிரச்சனையில்லை மாறாக அதையும் தாண்டி பல்வேறு பிரச்சனைகள் உழன்று கொண்டும்,உருவாகிக் கொண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன பாசிசவாதிகளால்.எனவே அவற்றையும் எதிர்த்து போராடி மக்களுடன் நாம் இருக்க வேண்டும்.
இந்த பாசிச நீட்டை திணித்தவர்களின் நோக்கம் தமிழக மாணவர்கள் மருத்துவராக கூடாது என்பது மட்டுமல்ல,அவர்கள் படிக்கவே கூடாது என்பது தான்.அவர்களுடைய எண்ணத்தை தவிடுபொடியாக்கும் விதத்தில் சிறந்த முறையில் கல்வி கற்று அந்த கல்வியை மக்களுக்காக செயல்முறை படுத்தினாலே நம்மை தகுதி இல்லாதவர்கள் என கூறுபவர்கள் முகத்தில் கரியை பூசி அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடலாம்.நாம் நமக்கானவர்கள் அல்ல இந்த சமூகத்திற்க்கானவர்கள் என்கிற சிந்தனையை மனதிற்குள் விதைத்து கொண்டு நம் எதிர்கால தலைமுறையினரான இன்றைய மாணவர்கள் செயல்பட வேண்டும். அதுவே சமூகத்தில் நிலவும் அத்துனை பிரச்சனைகளுக்கும் தீர்வை தேடித் தர வழி வகுக்கும்.
அனிதா,பிரதீபா,சுபஸ்ரீ யோடு நீட் மரணம் நின்று விடட்டும்.இனி அத்தகைய தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ளாமல் களத்தில் துணிந்து நின்று போராடுவோம்,தமிழகத்தையும் மக்களையும் காப்போம்.எதிர்காலம் நம் கைகளில் நம்முடைய கைகளில் மட்டுமே.