அந்தக் காலையும் விடிந்தது(!) 38 வருடங்களுக்கு முன் பிப்.18, 1983ம் ஆண்டு மத்திய அஸ்ஸாமின் நெல்லி உட்பட்ட பகுதிகளில் ஆறு மணிநேர இடைவெளியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை 2191 முஸ்லிம்களின் உயிரைப் பறித்தது (கணக்கில் வராதவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம்). அலிசிங்கா, குலாபதார், பசுந்தரி, பகுபா பீல், புக்துபா ஹபி, பர்ஜோலா, புதினி, தங்காபோரி, இந்துர்மாரி, மாட்டி பார்பத், முலாதாரி, சில்பேட்டா, போர்புரி மற்றும் நெல்லி என நாகயோன் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பகுதிகளில் சிலமணி நேரங்களுக்குள் மிருகத்தனமான வன்முறை நிகழ்த்தப்பட்டது. பயங்கரமான ஆயுதங்களுடன் அதிகளவில் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வாக இது இருக்கும்.
‘அஸ்ஸாமிய அனைத்து மாணவர் அமைப்பு'(AASU) இந்த படுகொலையில் முக்கிய பங்காற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. நெல்லி படுகொலையில் ஆர்எஸ்எஸ் சக்திகளின் தொடர்பை மறுக்க முடியாது. அதேநேரத்தில் அஸ்ஸாமிய இயக்க கிளர்ச்சியாளர்கள் ஆர்எஸ்எஸ்-வுடன் இணக்கமான உறவைத் தொடர்ந்தனர்.
படுகொலை தொடர்பாக மொத்தம் 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், வெறும் 310 வழக்குகளில் மட்டுமே காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதுவும் ஏதுமில்லாமல் போனது. 1985ம் ஆண்டு அசாமின் விதியின்படி அனைத்து வழக்குகளும் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இறுதியாக எந்தவொரு நபரும்கூட தண்டனையை அனுபவிக்கவில்லை.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவரிடம் பேட்டி கண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிரூபர் ஹேமேந்திரா நாராயண், ‘என்னால் விவரிக்க முடியாத கொடூரம் அது. எத்தணை கொலைகளைப் பற்றிச் சொல்வேன்’ என்று கூறியதாகக் குறிப்பிடுகிறார். அவரின் முழு வாக்குமூலத்தைப் பின்வருமாறு காண்போம்.
ஜாகிரோட், நவ்காங்.
‘அது நிச்சயமாகக் கொடூர நிகழ்வு. அதை என்னால் விவரிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவு முயல்கிறேன். இன்று, இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அதிகளவிலான குடியேறி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் பல்வேறு பழங்குடியின மற்றும் தீவிரவாத இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. அவர்கள் நாட்டுரக ஆயுதங்களையும் சிலர் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
வடக்கு கௌஹாத்தி-நவகாங் நெடுஞ்சாலையிலிருந்து ஐந்து கிமீ தொலைவிலுள்ள தெமோல்கோனில் முஸ்லீம் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. முன்னதாக நெல்லி மொகாரியாவில் கூடிய நூற்றுக்கணக்கான இந்து பழங்குடியினர் ‘Jai Aaee Assom Aaee Assom’ என்ற போர் முழக்கத்தை முழங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். வில், அம்பு, ஈட்டி மற்றும் குருவால் போன்ற ஆயுதங்களுடன் கட்டுக்கடங்காமல் முஸ்லீம் பகுதிகளை நோக்கி ஓடினர். முதலாவதாக, மொகாரியாவில் ஊருக்கு வெளியே உள்ள மூன்று வீடுகள் கொளுத்தப்பட்டன. இதில் தங்கள் வேலையை நிறைவேற்றிய திருப்தியோடு, மேலும் தாக்குதலில் முன்னேறிச் செல்ல அவர்களை தூண்டியது. வீடுகளைச் சாம்பலாக்கி வெளியேறிய பிறகு ஆவாரத்தோடு கூச்சலிட்டு மற்றவர்களையும் அழைத்தனர். ‘நாங்கள் இந்த அனைத்து பிதேசிகளையும் (அந்நியர்) கொல்லப் போகிறோம். அவர்கள் நமது சொந்த நாட்டிலேயே நம்மை பிதேசியாக மாற்றியுள்ளார்கள்.’
நான் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்தேன். தெமோல்கோனின் ஒவ்வொரு வீடும் எரிக்கப்பட்டன. அங்கு முதலில் வெள்ளையாக வெளியேறிய புகை சிறிது நேரத்தில் அடர் கருப்பாக உமிழ்ந்தது. பிறகு, ஐந்து நிமிடத்திற்குள் அதில் சிகப்பு சாயல் தோன்றியது. மீதமிருந்த வீடுகள் எலும்புக்கூடுகள் போல் நிர்வாணமாகக் காட்சியளித்தன. மற்றொரு நாற்பது வீடுகளுக்கும் இதே சுழற்சி தொடர்ந்தது. தப்பியதோ கான்கிரீட் வீடு ஒன்று மட்டுமே. வீடுகளை எரிக்க அவர்களுக்கு எரிபொருள் தேவைப்படவில்லை. ஏனெனில், எளிதில் பற்றி எரியும் நிலையிலிருந்த மேற்கூரைகளும், மத்திய நாளில் வீசிய தென்கிழக்கு காற்றும் அவர்களின் தேவைக்கு போதுமானதாக இருந்தது.
அப்பகுதியின் மொத்த பசுமை சிகரங்களையும் கரும்புகை சூழ்ந்தது. அன்று சூரியனும் பிரகாசிக்கத் தவறியது. பகலில் இருள் சூழ்ந்தது. குடியேறி முஸ்லீம்கள் தேமல் கால்வாயைக் கடந்தது முலாதாரி கிராமத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். யாரும் வராதபடி கால்வாயில் சிறு மூங்கிலால் அமைக்கப்பட்ட பாலத்தை நீக்கினர். கரையிலிருந்த படகையும் எடுத்துவிட்டனர். வீடுகள் எரிக்கப்பட்ட பின் அனைத்து பழங்குடியினர்களும் கால்வாயின் கரையில் கூடினர். ஏற்கனவே அலிசிங்கா, சிச்சேரி, பிஹேத்தியிலிருந்து சென்றவர்கள் உட்பட முஸ்லீம்கள் மற்றொரு கரையில் கூடினர். அம்புகளும் கற்களும் அவர்கள் மீது பாய்ந்தன. அலறல் சத்தம் உச்சத்தைத் தொட்டது.
கலவரக்காரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் முஸ்லிம்களை அச்சுறுத்தியது. மறு முனையிலிருந்து எந்த ஆயுதமும் இல்லை. இருவர்களையும் கால்வாய் 45 நிமிடம் வரை பிரித்தது. பிறகு, முலாதாரி கிராமத்தின் கிழக்கு பக்கத்திலிருந்து கலவரக்காரர்களின் மற்றொரு கும்பல் படையெடுத்ததால் நிலைமை கைமீறிப் போனது. இந்த இரு கும்பல்களின் முஸ்லீம்கள் மீதான நீண்ட நேரத் தாக்குதலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இரண்டாவது கும்பல் முஸ்லிம்கள் அருகில் வந்த அதே வேளையில் முதல் கும்பல் கால்வாயை நீந்திக் கடக்கத் தொடங்கியது. சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். முலாதாரியின் வீடுகள் தீக்கிரையாகின.
எஞ்சியவர்களுக்கு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அவர்களும் பிடிபட்டனர். தேமல் ஆறு ஒருபுறம், வடக்கில் கோபில் ஆறு மற்றொரு புறம் என மாட்டிக்கொண்ட மக்கள் மேற்கு மலையடிவார புத்னிமாரா கிராமத்தை நோக்கி ஓடினர். உயிர்பிழைத்தலுக்கான போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஈடுகொடுத்து பெண்களாலும் சிறுவர்களாலும் ஓட முடியவில்லை. வெறிகொண்ட கலவரக்காரர்களால் ஒருவர் பின் ஒருவராகப் பிடிபட்டுக் கொல்லப்பட்டனர். கால்வாயின் மற்றொரு முனையிலிருந்து நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் 22 பெண்கள் கொல்லப்பட்டுக் கிடந்ததை என்னால் பார்க்க முடிந்தது. தேமலை கடக்க ஒரு பெண் முயன்று கொண்டிருந்தாள். அவளும் ஈட்டி எய்தி கொல்லப்பட்டால்.
தோட்டாக்களின் சத்தத்திற்கு நடுவே மூங்கில் காடுகள் எரிவதும், அலறல் சத்தங்களும் அழுகை ஓலங்களும் ஒரு சேர கேட்டன. நான் கரையில் ஓடிப்போய் பார்த்தேன். குடியேறிகள் தங்கள் உயிர்களைக் காக்க ஓடுகிறார்கள். ஆனால், வேட்டையாடிகள் வேகமாக இருந்தார்கள். தப்பி ஓடுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல. கலவரக்காரர்களின் வேகம் விரைவாகவோ அல்லது பின்னதாகவோ கூட மக்களைப் பிடித்துவிடும். எத்தனை படுகொலைகள் நிகழும் என்று கணக்கிடுவது கடினம். ஆனால் அது நிகழும்.
மனதை உலுக்கிய ரணத்துடன் நான் தளர்வாகத் திரும்பினேன். குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறது, காணமுடியவில்லை. அவர்கள் ஒருவேளை தங்கள் பெற்றோருக்கு அருகில் கிடக்கலாம். பேரழிவே முடிந்த பிறகு தாமதமாக வந்த சிஆர்பி ஜவான்கள் அழுகுரல்களின் பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கிருந்தவர்கள் அழும் குழந்தைகளுக்காக உதவி கேட்டனர். ‘இங்கு மொத்த கிராமமுமே கசாப்புக் கோலத்தில் இருக்கும்போது நீங்கள் ஒரு குழந்தைக்கு உதவிக் கேட்கிறீர்களா’ என்று ஒரு ஜவான் பதிலளித்தான்.
இந்த பெரும் சிதைவுக்கு மத்தியில் பிழைத்தவர்களும் இருந்தார்கள். நான் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, பச்சை சேலை அணிந்த பெண் ஒருத்தி மூன்று குழந்தைகளுடன் பயங்கரம் நிகழ்ந்த மேற்குப் பக்கம் ஓடுவதைக் கண்டேன். அவளது அழுகையின் சத்தம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அவள் எப்படி அழ வேண்டும் என்பதையே மறந்திருந்தாள்.
பிறகு, (சம்பவமெல்லாம் முடிந்த பிறகு) அதிர்ச்சியடைந்த மொகாரியாவின் உள்ளூர் வாசிகள் என்ன நடந்தது என்று விசாரித்தனர். தங்களுக்கு எதுவும் தெரியாததுபோல் அங்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள விரும்பினர். அந்தத் தேடலில் எந்த பரிவுணர்ச்சியும் இல்லை. அது தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளது…
- ‘Maktoob’ தளத்திலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது..
தமிழில்; அப்துல்லா.மு