எழுதியவர் : பேராசிரியர்.மு.நாகநாதன் (முன்னாள் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் )
அதிகாரக் குவிப்பு, ஆணவம், குழப்பங்கள் ஒரு சேர இருப்பதுதான் இன்றைய பாஜக ஒன்றிய அரசு.
500,1000, உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஏழை எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வில் பட்ட துயர்களை எளிதாக மறந்து விட முடியுமா?
எந்த நாட்டிலாவது வங்கிகளின் வாயில்களில், சாலைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று நூற்றுக் கணக்கில் மடிந்த கொடுமையைக் கண்டதுண்டா?
சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது உரிய கலந்துரையாடல்களை, மாநில முதல்வர்களிடம், வணிகர்களிடம், வரி வல்லுநர்களிடம் நடத்தியதுண்டா?
இதன் காரணமாக பொருளாதாரமே நொறுங்கி வருவதை அறிந்த பிறகும் பிரதமரும் ஒன்றிய அரசும் கவலைப்பட்டு நல்ல தீர்வுகளை எட்டாமல் இருப்பது எவ்வளவு கொடுமை?
நீட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறித்து, சமூகநீதியைப் புறந்தள்ளும் போக்கினை எந்தக் கூட்டாட்சி நாட்டிலாவது காணமுடியுமா?
புது டெல்லியின் “உண்மையான, நிரந்தர அதிகாரிகள்”- காங்கிரஸ் ஆட்சியின் போதும், இன்றைய பாஜக ஆட்சியின்போதும், ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடித்தார்கள்.
யார் அந்த உண்மையான ஆட்சியாளர்கள் என்பதை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர் நாரயணனின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தாலே அறிந்து கொள்ளமுடியும்.
ஏழைக் குடும்பத்தில் பல உடன்பிறப்புகளோடு பிறந்தவர். பள்ளிச் செல்வதற்குப் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்றவர்.
இத்தகைய பின்னணியோடு படித்து, இறுதி பள்ளித்தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றார்.
ஊர்ப்புறத்திலிருந்து நாள்தோறும் 7கிலோமீட்டர் நடந்துதான் கல்லூரி படிப்பையும் தொடர்ந்தார். அப்போது எதிர் வீட்டுக்காரர் ஆங்கில நாளிதழான இந்து ஏட்டினை வாங்கிவரச் சொல்வார்.
நகரில் மட்டும் இந்து நாளிதழ் விற்கப்படும்.
கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது இந்து ஏட்டினைப் படித்துத் தனது அறிவையும், ஆங்கில மொழிப் புலமையையும் வளர்த்துக் கொண்டார்.
திருவாங்கூர் சமஸ்தானம் நடத்திய கல்லூரியில் அரசியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றார்
மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். சமஸ்தானம் நடத்திய கல்லூரியின் விதியின்படி, கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவர்க்கு அக்கல்லூரியிலேயே ஆசிரியர் பதவி வழங்கப்படும்.
அப்போது சமஸ்தானத்தின் ஆலோசகராக சர்.சி.பி.ராமசாமி ஐயர் பணியாற்றி வந்தார்.
திரு .கே.ஆர்.நாரயணன் தனது தகுதியைக் காட்டி, கல்லூரியில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தார். நேரில் கே.ஆர்.நாரயணனை அழைத்த சர்.சி.பி. ராமசாமி அய்யர், நீ தலித் என்பதால் ஆசிரியர் பதவி வழங்க முடியாது என்று அவமதித்தார். எழுத்தர் பதவியில் சேர்ந்து விடு என்றார்.
மனம் தளராத கே.ஆர்.என் அன்றைய இந்து நாளிதழில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், டாட்டா கல்வி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்கான விண்ணப்பத்தைத் தன் கையால் எழுதினார். அஞ்சல் செலவிற்கு மட்டுமே பணம் வைத்திருந்தார். விண்ணப்பம் செய்வதற்கு அஞ்சல் அலுவலகத்தில் கசக்கித் தூக்கி எறிந்த ஒரு தாளை எடுத்துத்தான் பயன்படுத்தினார்.
மும்பாயில் நடைப்பெற்ற நேர்முகத் தேர்வில், டாட்டா –
“சிறந்த கல்வித் தகுதியையும், திறமையையும் பெற்ற நீங்கள் கசங்கிய தாளில் விண்ணப்பம் செய்யலாமா? என்று கேட்டார். புதிய தாள் வாங்குவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை என்றார் கே.ஆர்.என்.
தேர்ந்தெடுக்கப்பட்டால், கடும் குளிரைத் தாங்கக் கூடிய ஆடைகள் இல்லை என்றும் கூறினார். டாட்டா முழுப் பொறுப்பையும் ஏற்றார். இங்கிலாந்தில் புகழ் பெற்ற பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கியிடம் அரசியல் பாடங்களைக் கற்றார். கே.ஆர்.என் லாஸ்கியால் சிறந்த மாணவர் என்று பாராட்டப்பட்டார்.
நேரு இங்கிலாந்தில் மாணவராகயிருக்கும் போது பல முறை லாஸ்கியைச் சந்திப்பதில் பேரார்வம் காட்டியவர்.
மேற்படிப்பை முடித்து இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய நேரத்தில் கே.ஆர்.நாரயணனை நேரடியாக இந்திய ஆட்சிப் பணியில் அமர்த்துமாறு பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி பிரதமர் நேருவிற்கு கைப்பட பரிந்துரை மடல் எழுதினார்.
இம் மடலுடன் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்ற கே.ஆர் .நாராயணனை அங்கிருந்த “நந்திகள் ” நேருவைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
லாஸ்கியின் மடலைச் சிறிது நேரத்திற்குப் பிறகு பார்த்த பிரதமர் நேரு பதறிப் போனார்.
உயர் அதிகாரிகள் கே.ஆர்.நாரயணனைத் தேடிச் சென்று, பின்பு நேருவிடம் அழைத்துச் சென்றனர். இந்திய ஆட்சிப் பணிப் பதவியில் சேர்ந்த கே.ஆர்.நாரயணன் பின்னாளில். குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.
கே.ஆர்.என். ஒன்றிய அரசில் சிறிது காலம் திட்ட அமைச்சராகப் பணியாற்றியபோது அவர் பெற்ற பட்டறிவை சுமித் சக்கரவர்த்தி என்ற ஏட்டாளரிடம் பதிவு செய்ததை Outlook 2005-November 21–ஏடு வெளியிட்டது.
“சாதாரண மக்கள் அனைவருக்கும் கல்வி அளித்துவிட்டால், அவர்கள் அரசிடம் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற ஓர் அச்சம் இருப்பதாகத் தன்னிடம் திட்டத்தை உருவாக்குபவர்கள் ஒரு சந்தேகத்தை தெரிவித்தார்கள்” என்று சொன்னார் கே.ஆர்.என்.
இப்போது புரிகிறதா? டெல்லி ஏகாதிபத்திய உயர் சாதியினர் நீதித்துறையில் இருந்தாலும், நிர்வாகத்துறையில் இருந்தாலும் அனிதாக்களை மருத்துவத் துறையில் அனுமதிப்பார்களா?
புதுடெல்லியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால் ஏழை எளியோர் அடிமைகளாகத்தான் இருப்பார்கள்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! மாநிலங்களுக்கு முழு சுயாட்சியை வழங்கு!! இவைகள் வெற்று முழக்கங்களாக அமையாமல் இருப்பதற்கு அரசியல் களத்தில், தளத்தில் தொடர் மக்கள் போராட்டங்கள் நடத்துவதே நிரந்தர தீர்வாகும்.