அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் தற்(கொலை) நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. MBBS படித்து மருத்துவர் ஆகவேண்டும் எனும் அனிதாவின் கனவை நீட் தேர்வு மூலம் பாஜக அரசு பறித்ததே அவரின் உயிரிழப்புக்குக் காரணம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் அவருக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை அனிதாவின் தனிப்பட்ட பிரச்னையாக நாம் குறுக்கிவிட முடியாது. இனிமேல் ஏழை எளிய, அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு அனிதாவின் இறப்பு நம்முன் இரத்த சாட்சி.
நீட் தேர்வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 80 மட்டுமே. CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதே இதற்குக் காரணம். அந்தப் பாடத்திட்டத்தில் படிப்பதற்கான வாய்ப்புள்ள மேல்தட்டு, உயர்சாதி, நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும். மாநில கல்வி வாரியத்தில் (State Board) படித்தவர்களால் அது முடியாது.
நீட் திணிப்பிலுள்ள சாதிய, வர்க்க மேலாதிக்க அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அத்தோடு, மொழி, வாழும் நிலப்பகுதி, நகர்ப்புறம் × கிராமப்புறம் எனும் முரண் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒதுக்கல்களையும் சிந்திக்கவேண்டும். இந்தி பேசாத மாநிலத்தவர்களை நீட் திணிப்பு கடுமையாக பாதிக்கும். தமிழ் உள்ளிட்ட தேசிய அடையாளங்களைச் சிதைக்கும் முயற்சியாகவும் இது இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, அஸ்ஸாம், மேற்குவங்கம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பதை இந்தப் பின்னணியிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
மத்திய பாஜக அரசையும் அதற்கு எடுபிடியாகச் செயல்பட்டுவரும் மாநில அதிமுக அரசையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, நீட் திணிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும் அனிதாவுக்கு நீதி கோரியும் தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சமூகநீதிப் போராட்டத்தில் நமது குரலையும் வலுவாகப் பதிவுசெய்வோம்.