23 மார்ச் 2003, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் சுக்குநூறாக உடைத்த நாட்களில் ஒன்றாகும். அன்று ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் 140 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து, ஒரு பில்லியன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்கினார். சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் மக்களிடையே ஒரு வதந்தி பரவத் தொடங்கியது, அது உண்மை என்ற பதத்தை ஏற்படுத்தியது.
அந்த வதந்தி என்னவென்றால்: பாண்டிங்கின் பேட்டில் ஒரு ஸ்பிரிங் (Spring) இருந்தது, அது அவருக்கு அதிக ரன்கள் அடிக்க உதவியது, இதுவே இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது என்ற கூற்று காட்டுத்தனமாகப் பரவியது, ஆனால் இந்தியா தோற்றுவிட்டதற்கான காரணத்தை ஜீரணிக்க முடியாமல் சிக்கித் தவித்த பல ரசிகர்களுக்கு இந்த வதந்தி குறிப்பிட்ட சில காலங்களுக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கக் கூடும். இது 90களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மாயை மட்டுமே ஒரே தீர்வு என்பதாக நீங்கா இடத்தை பெற்றிருக்கலாம்.
எனவே இந்தியர்கள் தமது அணி தோல்வியடையும் போது எப்படி அந்த காயத்தைச் சமாளிக்க வேண்டும்? எதிரணியினரின் செயல்திறனைப் பாராட்டுவது ஏன் ஒரு தடையாகக் கருதப்படுகிறது? இந்திய ரசிகர்கள் தங்கள் அணி வெற்றியைப் பார்க்க மட்டுமே வருகிறார்களா?, ஆட்டத்தின் நுணுக்கங்களைப் பாராட்டுவதில்லையே ஏன்?
இந்தியாவில் விளையாட்டு பார்வையாளர்களின் கலாச்சாரத்தை இங்கு நாம் ஆராய்வோம், அது பல்வேறு திருப்பங்களைக் கொண்டதாகவும், சமூக ஊடக உலகில் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஆராய்வோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் காணச் சென்ற பார்வையாளர்கள், இந்திய அணி சிறப்பாகச் செயல்படாதபோது மிகவும் அமைதியாகவும், மந்தமாகவும் இருந்ததாகப் பலரால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், அம்மக்களுக்கு மும்பை, கொல்கத்தா, சென்னை மக்களிடம் உள்ள விளையாட்டுக் கலாச்சாரம் இல்லை என்று வாதிடப்படுகிறது. உண்மையான விளையாட்டு கலாச்சாரத்தை கட்டியெழுப்புவது உலகின் மிகப்பெரிய மைதானத்தைக் கட்டியெழுப்பவதை விடக் கடினமாக இருக்கலாம்.
உண்மையில், நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் மிகவும் அமைதியாக இருந்தது, எந்த ஒரு ஆன்மீக நபரும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் அமைதியான முறையில் தியானம் செய்ய முடியும். உங்கள் அணி தோற்கும்போது, எதிரணியினரை பாராட்டுவதும், கைதட்டுவதும் மோசமான நடத்தையாக இருக்கலாம். ஒருவேளை, இது இறுதிச் சடங்கில் குத்துப் பாடலைப் பாடுவது போன்றதாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
இது எதிர்த்து விளையாடும் அணிகளைப் பற்றியது மட்டுமல்ல; இந்திய அணியின் நிலை கடினமான சூழ்நிலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கூட்டம் மந்தமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அங்குக் குழுமியிருந்த கூட்டம் குறைந்தபட்சம் தங்கள் அணியின் மன உறுதியை உயர்த்தியிருக்க வேண்டும் எனப் பல சமூக ஊடக பயனர்கள் X (twitter) தளத்தில் இடுகையிட்டனர்.
பல கிரிக்கெட் போட்டிகளை, குறிப்பாக ஆஸ்திரேலியாவின் போட்டிகளைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது, அங்குக் கூட்டம் நிதானமாக மைதானத்தில் எதையெல்லாம் களத்தில் காண்கிறார்களோ அதையெல்லாம் பாராட்டுவார்கள். அவர்கள் செய்தித்தாள்களைப் படிப்பதையோ, புல்வெளியில் படுத்திருப்பதையோ, பீர் வைத்திருப்பதையோ, அல்லது அவர்களது அன்றாட வாழ்க்கை செயல்களையே அவற்றில் பார்க்க முடிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, விளையாட்டு என்பது செய் அல்லது செத்து மடி என்ற சூழ்நிலைதான், அதை எந்த விலை கொடுத்தாவது வெல்ல வேண்டும். உண்மையில் இறுதிப்போட்டியில், பல ரசிகர்கள் மந்திரம் சொல்வதிலும் மூடநம்பிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள், அது தங்கள் அணி வெற்றிபெற உதவும் என்று நம்புகிறார்கள். ஒரு அங்குலம் நகர்வது கூட இப்பிரபஞ்சத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைத் தொந்தரவு செய்யக்கூடும் என்று நினைப்பதால் சிலர் மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்த நிலையில் உறைந்திருக்கிறார்கள். ஆம் ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கும் பேட்டிங் வரிசையில் மற்றொரு விக்கெட்டையும் இதன் மூலம் இழக்க நேரிடலாம் என்பதால்.
அமிதாப் பச்சன், இந்திய அணி விளையாடும் போட்டியைப் பார்க்காத போதெல்லாம், அணி வெற்றி பெறும் என்று ட்வீட் செய்திருந்தார். இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன், X (twitter) இல் ரசிகர்கள் அமிதாப் பச்சனை இறுதிப்போட்டி பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இப்போது, பச்சன் ரகசியமாக ஆட்டத்தைப் பார்த்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை விளையாட்டின் மீதான மேற்கத்திய மக்களின் மனப்பான்மை ஆர்வமின்மை என்ற நிலையில் காணப்படலாம்; அவர்களை பொறுத்தவரை இது வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கவும் மட்டுமே. இழப்பதற்கு அதிகம் இல்லை. எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பதன் அழகான விஷயம் என்னவென்றால், விளையாட்டின் முடிவு உங்களுக்கு எந்த கவலையையும் தராது. கால்பந்து, ஃபார்முலா ஒன் மீதான அவர்களின் நிலைப்பாட்டில் இது தெளிவாகத் தெரிகிறது, இது மற்றொரு கதையைச் சொல்கிறது.
பெருமையைத் தேடும் வேளையில்: இந்தியர்கள் உலகத்திற்கு மத்தியில் தங்கள் இடத்தை நிரூபிக்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். காலனித்துவ பாதுகாப்பின்மையின் எச்சங்கள் அதற்குப் பங்களிக்கின்றன. விளையாட்டு, குறிப்பாக, மிகை தேசியவாதத்தின் கண்ணோட்டத்தின் மூலம் பார்க்கப்படுகிறது, அங்கு இந்தியர்கள் ஏதேனும் கேள்விகள் கேட்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை என்றாலும், பதில்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஒரு சில நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் கிரிக்கெட்டை உலகம் உண்மையில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், பெருமையின் சாராம்சம் நம்மைப் பற்றி உயர்வாகப் பேசும் நபர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இவ்வகை மக்களிடையே உள்ளது.
சமூக ஊடகங்களில் நாம் பார்க்கும் போது, வெளிநாட்டினர் தங்களது சமூகவலைத்தளங்களில் இந்திய உணவுகளைச் சமைக்கும் படங்களை இடுகையிடும்போது, இந்த தேசியவாதத்தைப் போற்றும் மக்கள் பொதுவான அணுகுமுறையாக தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற அவநம்பிக்கையை வெளிப்படுத்தவதை காணலாம். ‘இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்பதாக அமெரிக்கர் ஒருவரின் ஆலு கோபி சமைக்கும் காணொளியில் இந்தியர் ஒருவர் இவ்வாறாகக் கருத்து தெரிவித்தது சிறந்த உதாரணங்களில் ஒன்று.
இந்த அர்த்தத்தில், எந்தவொரு சர்வதேச விளையாட்டும் ஒரு போட்டி மட்டுமல்ல, ஒரு தேசத்தின் அன்பின் வெளிப்பாட்டிற்கான ஒரு பாத்திரமாகும். இத்தகைய போட்டி, பரீட்சை வெறி கொண்ட தேசத்தில், நாம் எப்படியும் ‘தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என்பதில் அதிக கவனம் செலுத்தும் வகையில் மக்களது ஆன்மா வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் அழகு அல்லது அதன் நுணுக்கங்களைப் பேசும் எந்தவொரு பாராட்டும் குப்பைப் பேச்சாக நிராகரிக்கப்படும்.
அதனால்தான் சில நேரங்களில் ரசிகர்கள் இந்திய வீரர்களைத் தோல்விக்காகவும், சர்வதேச வீரர்களை வெற்றிக்காகவும் திட்டுகிறார்கள். 2007 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் இந்தியா தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோணியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
சுமார் 200 ரசிகர்கள், தோனியின் கட்டுமானத்திலிருந்த வீட்டின் சுவர்கள், தூண்களை இடித்தனர். 2011 உலகக் கோப்பையில் தோனி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றபோது இதே ரசிகர்கள் தான் தோனியை ஹீரோ என்று கூறி தலையில் தூக்கிவைத்து நடனமாடிக் கொண்டாடினர்.
நீங்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தால், 13 மார்ச் 1996 அன்று நடந்த போட்டியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி அது. இந்தியா தனது எட்டாவது விக்கெட்டை இழந்த பிறகு, கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஸ்டாண்டுகளுக்கு தீ வைத்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். பழங்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசத் தொடங்கினர். போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கும் போது, கூட்டம் மீண்டும் பீல்டர்கள் மீது பாட்டில் தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டு, இயல்பாகவே வெற்றி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றளவும், பேட்டர் வினோத் காம்ப்ளி, டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிச் செல்லும்போது அழுதுகொண்டிருக்கும் படம், அந்தப் போட்டியின் மறக்கமுடியாத படங்களில் ஒன்றாகவே இருக்கிறது.
இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் எதிர்பாராத இடங்களில் விளையாட்டை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாகச் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் நியூசிலாந்து போட்டியை எடுத்துக்கொள்ளலாம். என்னதான் பாகிஸ்தான் எதிரிநாடு என்ற நிலையிலிருந்தாலும், அந்த போட்டியில் ஃபகார் ஸமானின் பேட்டிங்கை பாராட்டி குதூகலமாகப் போட்டியைக் கண்டுகளித்தது சென்னை ரசிகர்கள் தான். இதனைப் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரே தங்களது ஹோம் மைதானத்திலிருந்ததுபோல் ஒரு ஆதரவை நாங்கள் பெற்றோம் என்று மெய்சிலிர்த்துப் பாராட்டி விட்டுச் சென்றதும் இதே ரசிகர்களைத்தான்.
விளையாட்டரங்கங்களில் கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கும் விளையாட்டின் உண்மையான ரசிகர்களுக்கும் இடையே அப்பட்டமான வித்தியாசம் உள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டன, அவை புதிய உயரடுக்கினருக்கும் பணக்காரர்களுக்கு மட்டுமே மலிவு ஆகும்.
எல்லாமே சமூக ஊடக உள்ளடக்கமாக இருக்கும் உலகில், இந்த விளையாட்டே பணக்கார வாழ்க்கை முறையின் வெளிப்பாடாகவும் அறிவிப்பாகவும் மாறுகிறது – செல்ஃபிகள், இன்ஸ்டாகிராம் இடுகைகள் மூலம் அவர்கள் போட்டியைக் கண்டுகளிக்க வந்துவிட்டதை உலகுக்குக் காட்ட ஒரு அறிக்கை. அணி சிறப்பாகச் செயல்படாத போது, அது மைதானத்தில் இருக்கும் மகிழ்ச்சியைக் குறைக்கிறது. புகைப்படங்களில் உள்ள லைக்குகளும் இவர்களுக்கு ஒரு கெட்ட சகுனமாகத் தெரிகிறது.
ஒரு சமூக ஊடகத்தால் இயங்கும் உலகில், ஒரு போட்டியில் ஆட்டத்தின் செயல்திறனை வீரர்களுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அதில் பார்வையாளர்களும் ஒரு பாத்திரத்தை வகிக்கிறார்கள். வெற்றிபெறும் போது தங்கள் அணியினரைப் பாராட்டுவதும் அதே சமயம் தோல்வியடையும் போது அவர்களைத் திட்டுவதும் வசைபாடுவதும் எவ்வகையில் நியாயமாக இருக்கும் என்று தெரியவில்லை.
இதுமட்டுமின்றி வெற்றியடைந்த எதிரணியில் நன்றாக விளையாடிய வீரரை வசைபாடுவதும், போட்டியிலிருந்த நடுவர்களைத் திட்டுவதும் கொலை மிரட்டல் விடுவதும் மிகவும் கீழ்த்தரமான செயல் மட்டுமன்றி இந்திய அணியின் தோல்வியை இன்னும் மட்டமான நிலைக்குக் கொண்டு செல்வதாகவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு என்றில்லாமல் அதில் இரசிப்பதற்கு எவ்வளவோ உண்டு என்பதை எப்பொழுது தான் தங்களை ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?