தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும்.
‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா மூன்றாண்டு இடைவெளிக்குப் பின், 2019 தேர்தலை ஒட்டி இப்போது இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மசோதா போல் எல்லாக் கட்சிகளின் ஆதவோடும் இது இயற்றப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம், முஸ்லிம் லீக், AIMIM, AIUDF முதலான கட்சிகள் இதை எதிர்த்துள்ளன.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவை ஒட்டியுள்ள மூன்று நாடுகளிலிருந்தும் மத அடிப்படையிலான ஒதுக்கல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்து வந்திருந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்யும் மசோதா இது. டிசம்பர் 31,2014க்கு முன் இவ்வாறு இம்மூன்று நாடுகளில் இருந்தும் இடம் பெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் ஆகிய முஸ்லிம் அல்லாதவர்கள் இதனால் பயன்பெறுவர் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
இந்துக்கள் தவிர சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிற சமணர்கள், கிறிஸ்துவர்கள் முதலானவர்கள் இந்த மூன்று நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் யாரும் இல்லை என்பதை அறிவோம். ஆக நடைமுறையில் இந்துக்களுக்குப் பயனளிக்கும் சட்டம் இது. இதில் ஒதுக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டும்.
இஸ்ரேலின் ‘அலியாஹ்’ சட்டத்தின் மறு வடிவமே இது
உலகின் எப்பகுதியிலிருந்தும் வருகிற யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ எனப்படும் சியோனிசக் கொள்கையின் அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முகநூல் பக்கத்தில் நான் ஜுலை 31, 2017 அன்று எழுதியதை மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன்:
“2014 ல் நடைபெற்ற பதினாறாம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதை அறிவோம். அவர்களின் தேர்தல் அறிக்கையில், “அயல் உறவுகள் : தேசம் முதலில், அனைத்துலக அளவில் சகோதரத்துவம்” எனும் தலைப்பின் கீழ் தம் அயலுறவுக் கொள்கையைக் கோடிட்டு காட்டி இருந்தனர். அதில் இப்படி ஒரு வாசகம்:
“உலகெங்கிலும் துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஓர் இயற்கை இல்லமாக இந்தியா அமையும். அவர்கள் அடைக்கலம் புக இங்கே வரவேற்கப்படுவார்கள்”.
தங்களின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர்கள் இதை வலியுறுத்தத் தயங்கவில்லை. நரேந்திர மோடியே தன் தேர்தல் பிரச்சாரங்களில் வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்கள் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். இன்னொரு பக்கம் அவர் புலம் பெயர்ந்து வரும் வங்க முஸ்லிம்களை கொடூரமாகச் சித்திரிக்கவும், ஒட்டு மொத்தமாக அவர்களைத் திருப்பி அனுப்புவோம் எனச் சொல்லவும் தயங்கவில்லை.
எந்த அந்நிய நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டு இங்கு வந்தால் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் என அவர் சொல்லியிருந்தாரானால் நாம் அதை முழுமையாக வரவேற்கலாம். ஆனால் துன்புறுத்தப்படும் இந்துக்கள் இடம் பெயர்ந்தால் மட்டும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் எனச் சொல்வதன் பொருளென்ன? இது ஒரு இந்துக்களுக்கான தேசம். இங்குள்ள அரசு ஒரு இந்து அரசு என்பதுதானே.
இப்படியான ஒரு கருத்தாக்கத்தை அவர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கின்றனர்?
இஸ்ரேலின் ‘அலியாஹ்’ (aliyah) எனப்படும் ‘திரும்புதல் சட்டம்’ என்பதுதான் இப்படியான அவர்களின் பேச்சுக்களுக்கு மூலாதாரம். இந்தச் சட்டத்தின்படி யூதர்கள் உலகில் எந்த நாட்டிலிருந்து வந்தபோதிலும் இங்கு வந்து குடியேறலாம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
இஸ்ரேலுக்கு இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் நிறைந்த, ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க இந்தியத் துணைக் கண்டத்திற்கு எப்படிப் பொருந்தும்?” – ஜூலை 31, 2017 முகநூல் பதிவு
காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகள் இம் மசோதாவை எதிர்த்த போதிலும் நாடாளுமன்றத்தில் AIMIM கட்சியின் அசாதுதீன் உவைசி மட்டுமே இஸ்ரேலுடன் பொருத்தி இந்தச் சட்டத்தை விமர்சித்துள்ளார்.
(பேராசிரியர் மார்க்ஸ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து)