நாம் தமிழர் இயக்கம் கலாச்சார அரசியலால் மையம் கொண்டது. தமிழ் மொழியும் தமிழ் இன மேலாண்மையும் அதன் ஆதார வடிவம். எதார்த்த களத்தில் அதன் தர்க்கம் இதனை உள்ளடக்கியே பயணப்படும். தமிழர் அல்லவென்றால் பெரியாரையே புறம் தள்ளுவது, தமிழர் என்றே ஒரே காரணத்திற்காக வைகுண்ட ராஜன், பச்சமுத்து, அன்புச்செழியன் போன்றவர்களை உள்ளிழுத்துப் பரிந்து பேசுவது என்பது அக்கட்சி கடைப்பிடிக்கும் இனவாதத்தின் அறம். அப்படியிருக்கையில் இஸ்லாம், கிறிஸ்துவம், நாத்திகம் போன்ற மதத் தொடர்புடையவற்றையும், பெண்ணியம், இடதுசாரியம், தனிநபர் ஈடுபாடு போன்ற சிந்தனைகளையும், அவை தமிழ் கலாச்சார சூழலில் நேரடி தாக்கம் செலுத்தும்போது அல்லது தமிழியம் என்று சொல்லப்படும் பழமைவாத மதிப்பீடுகளிலிருந்து மாறுபடும்போது அக்கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதில் அதன் எதார்த்த முகம் வெளிப்படுகிறது.
சாதியின் அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுப்பது தொடங்கி வரலாற்று இயங்கியலை மறுத்து தமிழ் பழமைவாதங்களை முழுவதுமாக வியந்தோதுவது வரையிலான வெளிப்படையான அக்கட்சியின் குறைபாடுகள் அனைத்தும் பார்ப்பனியத்தால் தூண்டுதல் பெற்றது. நாம் தமிழர் கடைப்பிடிக்கும் தமிழ் தேசியத்தில் தூய தமிழியம் என்பது என்றும் இருந்ததில்லை. அயோத்திதாச பண்டிதர் தன் தமிழ் உணர்வைப் பௌத்தம் வழி மீட்டெடுத்தார். பாரதிதாசன், பெரியார், அண்ணா போன்றவர்கள் திராவிட இன கருத்தியலை கையாண்டனர். இதன் மூலம் பிற்போக்கு பழமைவாதங்கள், பார்ப்பனிய இடைச்செருகல்கள் போன்றவைகளை மறுத்தனர். மாறாக, ஆதித்தமிழர் வாழ்வியல் என்ற வரலாற்றின் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை அடைந்தனர். ஆனால், தமிழ் மொழியை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தியர்கள் அதனை இந்துவயப்படுத்தினர். தமிழர் இந்துவல்ல என்று சிலர் சொன்னாலும், அவர்கள் தமிழியத்தை இந்து மதிப்பீட்டில்தான் கண்டனர். சைவத்தைத் தமிழ் மதமாக ஏற்பவர்கள், சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவில் ஏற்ற வேண்டும் என்பார்கள். திருநாவுக்கரசரைத் தமிழ்ப் புலவனாகக் கொண்டாடும் இவர்கள், பௌத்த துறவி போதி தர்மரைப் பற்றி மூச்சுவிடமாட்டார்கள். சங்க நூல்கள் இருட்டடிப்பு, சமணர்கள், சித்தர்கள் கழுவேற்றம், பழங்குடியினர்கள் மீதான வல்லாதிக்க சுரண்டல், குடிகள் மீதான அடிமை வர்த்தகம் போன்ற தமிழ்நில பயங்கரவாதங்களைப் பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில் இவையனைத்தும் பார்ப்பனியம் நிகழ்த்திய பயங்கரவாதங்கள்.
அடிப்படையிலேயே பார்ப்பனிய வழி இயங்கும் வலதுசாரி அல்லது வெளி நிறுத்தும் தமிழ் தேசியர்கள் பார்ப்பனியம் ஏற்பவற்றையும் எதிர்ப்பவனவற்றையும் அப்படியே அடிபணிவார்கள். கடைச்சங்க இருநூற்றாண்டுகளை உட்கொண்ட களப்பிரர்கள் ஆட்சிக்காலம் பார்ப்பனர்களுக்கு எதிராக இருந்தாலேயே இவர்களுக்கும் இருண்ட காலமாக இருக்கிறது. சிவனுக்குச் சித்தர் மரபையும், முருகனுக்கு முன்னோர் என்றால் சாதாரண அடையாள மரபையும் மட்டும் கடைப்பிடிக்கவில்லை. மாறாகப் பார்ப்பனியம் முன்னிறுத்தும் வைதீக மரபையும் இத்தமிழ் தேசியர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இத்தகைய பார்ப்பனிய அடிபணிதல் இனவாத அரசியலாக உருவெடுக்கும்போது நிகழ்காலத்து அதன் வெறுப்பையும் மென்மையாகக் கடைப்பிடிக்கிறது.
நாம் தமிழர் இயக்கம் பார்ப்பனிய மரபுக்குத் துளியும் தொடர்பில்லாத, அதற்கு நேர்மாறான இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களை எவ்வாறு பார்க்கிறது என்பதில் அதன் அரசியல் வெளிப்படையாகப் புலப்படும். நாம் தமிழரின் கொள்கை திட்டம் இவ்வாறு கூறுகிறது, ‘இஸ்லாமும் கிறிஸ்துவமும் கடந்த காலத்தில் நம் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தியவை. அதன் சர்வதேச நிதி ஆதாரங்கள் போன்றவை நமக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். அவர்கள் நம்மோடு உடன்பட்டுப் போகையில் பகை முரணின்றி நட்பு முரண் அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்’. இஸ்லாமும் கிறிஸ்துவமும் சீமான் வரையறுக்கும் தமிழியத்தோடு முரண்பட்டது, அவர்கள் வேறு என்ற அளவில் எதிர்நிலையில் இருப்பது என்பதை அவரே உறுதிப்படுத்துகிறார். அதனைத் தவிர்த்து மேற்கூறிய மூன்று கருத்துக்களும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள் தொடர்ந்து வைக்கும் அவதூறு தவிர வேறல்ல. அதையே நாம் ‘தமிழர்’ இயக்கமும் வாந்தி எடுத்து வைத்துள்ளதால், நாங்களும் ஆர்எஸ்ஸும் வேறு வேறானவர்கள் அல்ல அல்லது பார்ப்பனியத்தின் பார்வையில்தான் நாங்களும் உங்களைக் காண்போம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மேற்கூறிய மூன்று அபத்த கருத்துக்களை முன்பு சகோதரன் தளத்தில் விரிவாக விளக்கி எழுதியுள்ளேன்.
இதுமட்டுமல்ல, நாம் தமிழர் கொள்கை திட்டம் முழுவதும் திராவிட வெறுப்பை எதிர்நிலையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. திராவிட அரசியலை விடாமல் வசைப்பாடும் அப்புத்தகத்தில், தமிழ், இந்திய நிலத்தை ஆயிரமாயிரம் காலம் அடிமைப்படுத்திய ‘ஆரியம்’ என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை. இதுதான் அவர்கள் அரசியல் என்ன என்ற அச்சத்தையும் எச்சரிக்கையையும் நமக்குத் தருகிறது.
இதன் மூலம் நாம் தமிழரில் இணையும் இஸ்லாமியர்களைச் சுலபமாக அடையாளம் காணலாம். அவர்கள் பெரும்பாலும் அரசியல் புரிதலற்ற, உணர்ச்சி வேகம் கொண்ட இளம் தலைமுறையினர். பெரும்பாலும், வரலாற்று அறிவும் நடப்பு அரசியல் பற்றியும் அறவே தெளிவில்லாதவர்கள். ‘இப்பல்லாம் யாரு சார் நல்லது பண்றா, யாராவது புதுசா வந்தா நல்லாயிருக்கும்’ என்று அரசியல் சலிப்பு கொண்ட ஏதுமரியா அவர்களுக்குச் சீமான் புரட்சியாளனாக தோன்றினார். அவரின் வசீகரமான பேச்சு மற்றவர்களைப் போலவே இந்த இஸ்லாமியர்கள் மத்தியிலும் பெரியளவில் தாக்கம் பெற்றது.
சீமானின் கலாச்சார அம்சத்தோடு இஸ்லாமியர்கள் ஈர்க்கப்பட்ட முக்கிய இடம் நீங்களும் தமிழரே! என்ற வார்த்தைதான். இதுவரையிலான அரசியல் கட்சிகள் உங்களைச் சிறுபான்மையினர் என்று ஒதுக்கி வைத்தது, ஆனால், நீங்கள் தமிழர்கள் என்ற பதம், ‘சிறுபான்மை’ என்ற அரசியல் சொல்லாடலுக்கும், தமிழன் என்ற இன சொல்லாடலுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவிகளைச் சீமானோடு முழுவதுமாக உடன்பட வைத்தது. நா…ம் தமிழர் என்று கொடிப்பிடிக்க தொடங்கினார்கள்.
இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. தமிழன் என்ற ‘தகுதியில்’ இஸ்லாமியன் இடம்பெற சில வரம்புகள் விதிக்கப்பட்டது. அரபு பெயர்களைத் தவிர்த்தல், முன்பு முருகன் மட்டும், இன்று சிவன், கிருஷ்ணன் (மாயோன்) போன்ற கடவுள்களை ஏற்றுக்கொள்ளுதல், அடையாள மீட்டெடுப்பு என்ற பெயரில் பழைய சாதியைக் கண்டடைதல் போன்ற பயங்கரமான முன்னெடுப்புக்கள் இன்று மிதமாகக் கையாளப்பட்டாலும், பிற்காலத்தில் கட்டாயமாக வற்புறுத்தப்படும். ஏனெனில், இதை ஏற்பவனே மானத் தமிழனாகிறான்.
இவையனைத்திற்கும் இஸ்லாமியர்கள் உடன்படுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பெரும்பாலானவர்கள் தமிழியம் என்ற உணர்வினாலேயே செய்கிறார்கள். ஆர்எஸ்ஸ் கூறும் தாய்மதம் திரும்புதலுக்கும், சீமான் கூறும் பழைய இன அடையாளத்தை மீட்டெடுங்கள் என்பதற்கும் துளி வித்தியாசமும் இல்லை என்பதை உணராதவர்கள் அவர்கள். பார்ப்பனியம் தன் வருண ஏற்றதாழ்வின் எதிரியாக நினைக்கும் இஸ்லாமியச் சமத்துவத்தைச் சாதி ரீதியாக கூறுபோடுதல் என்ற கொடூர அரசியலுக்குப் பலியாகுகிறார்கள்.
இன்று இந்துமத பெரும் அடையாளங்களை தன் வணக்கத்திற்குரியதாக மாற்றச் சொன்னால் ஏற்பது முறையற்றது, அபத்தமானதும் கூட. ஆனால், அவை தமிழிய போர்வையில் மேற்கொள்ளப்படுகிறது. முருகனை முன்னோராக ஏற்பது தவறில்லை. ஆனால், அவை அநாவசியமானது என்பதுதான் இன்றைய வாதம். அதே முருகனை வணங்குதல் பாத்திரமாக நிறுவனப்படுத்தும்போது, ஒரு கற்பனை பாத்திரத்தை, அல்லது புலனாகாத லட்சியப் பாத்திரத்தைச் சாதாரண தமிழரே பலரும் ஏற்கமாட்டார்கள். அப்படியிருக்கையில் இஸ்லாமியர்களுக்கு வற்புறுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது முழுக்க முழுக்க இயலாமையின் விளைவே. தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தான் தமிழன் இல்லை என்ற உளவியல் அவனுக்குப் புகட்டப்பட்டுள்ளது. தன் வாழ்க்கை மற்றும் கலாச்சார அறிவில் போதாமை கொண்ட இவர்களுக்கு அடிப்படை விஷயங்களைப் போதிப்பது என்பதே முக்கிய வேலையாக இருக்க வேண்டும்.
நாம் தமிழர் இயக்கம்தான் இஸ்லாமியர்களை முதன்முதலில் ‘தமிழர்’ என்று அங்கீகரித்ததா என்ற கேள்வியிலிருந்து தொடங்கினால் மொத்தத்தையும் கட்டுடைக்கலாம். நாம் தமிழர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இங்குள்ள இஸ்லாமியர்கள் தமிழர்கள். ஆனால், அவர்களைச் சிறுபான்மை என்றே திராவிட கட்சிகள் முத்திரை குத்துவதாகச் சீமான் அவதூறு பரப்புகிறார். சீமான் சொற்பொழிவைத் தாண்டி வெளியுலகம் அறியாதவர்கள் இதில் இணைந்துகொள்கிறார்கள். ‘சிறுபான்மை’ என்பது அரசியல் உரிமைக்கான சொல்லாடல். இட ஒதுக்கீடு தொடங்கி அரசியல் களத்தில் அதன் அவசியம் இன்றும் தேவை. சீமானின் வகையினத்திலேயே பார்த்தல் ஒரு ஆதிக்கச் சாதி தமிழரும், ஒரு இஸ்லாமியத் தமிழரும் என்றும் ஒரே விதமான பொருளாதாரம், அரசியல் அதிகாரம், சமூக அந்தஸ்தில் இருப்பதில்லை. ஆனால், பார்ப்பனிய மனோபாவம் கொண்டவர்கள் இந்த ஏற்றத்தாழ்வை மறுத்து இந்துக்களாக ஒன்றிணைவோம் என்று சொல்வதைப் போலச் சீமான் தமிழர்களாக ஒன்றிணைவோம் என்கிறார். இட ஒதுக்கீட்டில் அடிப்படையிலேயே ஒவ்வாமை கொண்ட சீமான் தலித் என்ற சொல்லையும் ஏற்பதில்லை. அதுபோல்தான் சிறுபான்மை என்ற சொல்லாடலுக்கு எதிராக நிறுவும் அரசியல்.
‘இஸ்லாமியர்களும் திராவிடர்களே’ என்று இஸ்லாமியர்களை அரவணைத்தார் பெரியார். அதுமட்டுமல்லாமல், திராவிட சமூகத்தின் ஆதி வழிபாடாக உருவமற்ற ஒற்றை கடவுளாகத்தான் இருக்க முடியும். அதைக் கடைப்பிடிக்கும் முழுமுதர் திராவிடர்கள் இஸ்லாமியர்கள்தான் என்றார். நீங்கள் ஏன் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறீர்கள், அவர்கள் நிகழ்வில் கலந்துகொள்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘இனம் இனத்தோடுதான் சேரும்’ என்றார் அண்ணா. நாங்கள் திராவிட இனம் என்றார். இவர்கள், இஸ்லாமியர்களுக்குத் தகுதியோ, வரைமுறையோ விதிக்கவில்லை. நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர்களும் இந்த இனத்துக்காரர்கள்தான் என்று இருப்பில்லை விளக்கினார்கள். ஆனால், வரலாற்று அடிப்படை அறிவே இல்லாத நாம் தமிழர் இஸ்லாமியர்கள் சீமான் மட்டும்தான் நம்மைத் தமிழர் என்கிறார் என்று கூறுகிறார்கள்.
இதனைத் தவிரச் சீமானின் தேர்தல் அரசியலோடு உடன்படும் இஸ்லாமியர்கள்தான் அதிகம். அது அவரின் அரசியல் புரிதலைப் பொறுத்து அமைகிறது. நாம் தமிழர் கலாச்சார இசைவை ஒருவர் புரிதலோடு ஏற்றுக்கொண்டு உடன்பட்டால் அது அவர் தனிநபர் உரிமை. அதில் தலையிடுவது அறமல்ல. ஆனால், தமிழியம் போர்வையில் மீட்டெடுக்கப்படும் மதவியல் செயல்பாடுகளை இஸ்லாமிய மதப்பிடிப்பு கொண்டவர்கள் ஏற்பது மிகப்பெரிய முரணாக எழுகிறது. இதுவே பிற இஸ்லாமியர்களின் எதிர்ப்பிற்கும் காரணமாகிறது. நாம் தமிழரில் இணையும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தம் மதப்பிடிப்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு, தம் சமூகத்திற்கு நல்லது நடக்கும் என்பது அவர்களது எண்ணம். அதே நேரத்தில், இயல்பை பகுத்தாராய்வது அவசியமாக உள்ளது. தற்போதைய இஸ்லாமிய வாழ்வியலின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்ப்பனியமும், அதன் இயக்கங்களும் உள்ளது. அதனோடு உங்கள் கட்சி எந்தளவிற்குத் தொடர்புடையது, வேறுபட்டது, தீர்க்கமான கொள்கைகளைக் கொண்டுள்ளது என்ற தெளிவு அவசியம். அப்படியில்லாமல், மேடைப் பேச்சே சரணம் என்றிருந்தால், இழப்பின் முதல் பலியாக நீங்கள் இருப்பீர்கள். அடிப்படையாக, மேற்கூறிய நாம் தமிழர் இயக்கத்தின் கொள்கை திட்டத்தைப் படித்து அதைப்புரிந்து கொண்டிருந்தால் இஸ்லாமியர்களை அக்கட்சி எவ்வாறு பார்க்கிறது என்று புரிந்திருக்கும். அத்தகைய தமிழ், தமிழியம் சார்ந்த கலாச்சார அரசியல் புரிதல் பலருக்கும் போதாமையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, அதைப் பயிற்றுவிக்க மற்றவர்கள் தயாராக வேண்டும். மற்ற சில அரசியல் நிலைப்பாடுகளையெல்லாம் தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தத்தைப் பொருத்து அமைகிறது. அனைத்து வித்தியாசங்களையும் களைந்து தூய்மை வாதத்தை வற்புறுத்தும் நாம்தமிழரின் கலாச்சார அரசியல் ஹிட்லரின் மற்றொரு ஆரிய மேலாண்மையே தவிர வேறில்லை.
அப்துல்லா.மு