1968ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேலைச் சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளுடன் ஆறு நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் யுத்தம் முடிவடைந்திருந்தது. நடந்து முடிந்த போரில் இஸ்ரேலிய அரசு பெண்களையும், குழந்தைகளையும் அரக்ககத்தனமாகக் குண்டுவீசிக் கொன்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகள் தனித் தனியாக புகார் கொடுத்திருந்தன. இத்தனை நாடுகள் சேர்ந்தும் இஸ்ரேலை துவம்சம் செய்ய முடிய- வில்லையே என்ற வருத்தம் அரபு நாடுகளுக்கு முதன்முறையாக ஏற்பட்டிருந்தது. உதுமானிய கிலாஃபத்தை விட்டு வெளியேறிய பின்பு சுமார் 43 ஆண்டுகள் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கிடையே பெரிதாக எந்தவித ஒற்றுமையும் புரிதலும் இல்லை. அரபு நாடுகள் எதிர்பார்க்காத சட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் தங்களின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
மூன்று மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் அந்தப் புண்ணிய மலைத் தோட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் எக்காலத்திலும் இடிக்க முயற்சி செய்யாது. இஸ்ரேல் இயற்றிய சட்டத்தின் ஷரத்து இதுதான். உண்மையாகவே அரபு நாடுகள் எதிர்பார்க்காத சட்டம்தான். எந்தவித எதிர்ப் பும் இல்லாமல் சுமூகமாகவே இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது. யூதர்களின் திட்டம் என்னவாக இருக்கும் என்று உலக நாடுகளுக்குப் பிடிபடவில்லை. யூதர்களின் நம்பிக் கைக்கும், விருப்பத்திற்கும் எதிரான இச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அமெரிக்காவில் இருக்கும் யூத அமைப்புகளால் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனப் பேரணியும் நடத்தப்பட்டது. யூதர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றார் அப்போதைய எகிப்து அதிபர் அன்வர் சதாத். ஆப்பிரிக்காவின் வாயில் எகிப்து. ஆனால் புவியியல் ரீதியாக எகிப்து ஆப்ரிக்க தேசமாக இருந்தாலும், எகிப்தை மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியலில் சேர்த்துப் பேசுவதே வழக்கமாக இருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளுடன் எகிப்துக்கு இருக்கும் நேசத்தைவிட, மத்திய கிழக்கு நாடுகளுடன்தான் மிக நெருக்கமான உறவு. எகிப்தின் வடகிழக்கு மாநிலம் சினாய். இஸ்ரேலிய எல்லையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாநிலம். எகிப்து சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இஸ்ரேலின் ஒரு பகுதி போன்றே சினாய் செயல்பட்டு வந்தது. அன்வர் சதாத் நினைத்தது போல இஸ்ரேல் இயற்றிய அச்சட்டத்தின் பின்னே ஒரு மதரீ- தியான உத்தியும் ஒட்டிக் கொண்டிருந்தது. பழைய ஏற்பாட்டின் 18ஆவது அத்தியாயம்தான் யூதர்களுக்கு இச்சட்டம் இயற்றிடக் காரணம் எனப் புரிந்து கொண்டார்கள். ‘அந்தப் புனித மலை தானாகவே பூகம்பத்தால் இடிந்துவிழும். அதுவரையில் இஸ்ரவேலர்கள் காத்திருப்பர்’ என்ற பழைய ஏற்பாட்டின் வசனம் அவர்கள் தாங்களாகவே இடிப்பதற்குத் தடையாக இருந்தது.
யூத குருமார்கள் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு உத்தரவாகவே கொடுத்தார்கள் என்ற செய்தியும் பின்னாளில் பத்திரிகையில் கசிந்தது. வேறொரு காரணமும் சொல்கிறார்கள். கிபி 70இல் ரோமர்களின் தளபதி தித்தூஸ் ஜெருசலம் நகரை முற்றுகையிட்டு, அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினான். யூதர்களின் இறை இல்லத்தை முழுதாக இடிக்காமல் கோவிலின் மேற்குச் சுவற்றை மட்டும் விட்டு வைத்தான். இதை எதிர்கால யூத சந்ததியினருக்கு ஒரு ஆதாரமாகவே அவன் விட்டு வைத்தான். மிச்சமிருக்கும் அச்சுவற்றைத் தாங்களாகவே இடிப்பதற்கும் இஸ்ரேலிய அரசாங்கம் அஞ்சுகிறது. புனித சுவரை இடிப்பது குற்றம் என்ற சிந்தனை சியோனிச யூதர்களைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அது தானாகவே இடிந்து விழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதோடு சேர்ந்து அந்தப் பாறை குவிமாடமும், கிறித்தவர்களின் கல்லறை தேவாலயமும் சேர்ந்தே இடிந்து விழ வேண்டும் என்று யூதர்கள் அந்த மேற்கு சுவரைத் தங்கள் நெற்றியால் முட்டி மோதி அழுது பிரார்த்திக்கிறார்கள்.
மேற்கு சுவரே..! சீக்கிரம் இடிந்து விடு இடிக்கப்பட்டதன் சாட்சி நீ அதன் வேதனையை இன்றுவரை சுமக்கின்றோம் மேற்கு சுவரே..! சீக்கிரம் இடிந்து விடு. நாள்தோறும் சுவற்றிற்கு அருகே நின்று அழுது பிரார்த்திக்கிறார்கள். கண்ணீர் மல்க தங்களின் தலையைச் சுவரில் இடித்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். அண்மைக் காலமாக இஸ்ரேலிய அரசாங்கம் அந்த மலையைச் சுற்றிய பகுதிகளில் செயற்கையான பள்ளங்களைத் தோண்டி வருவதாக பத்திரிகையில் செய்திகள் வருகின்றன. செயற்கையான பூகம்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்வதாக எழும் குற்றச் சாட்டுகளை இஸ்ரேலிய அரசாங்கம் வழக்கம்போல கண்டு கொள்ளவில்லை. அங்கு புதிதாக தங்கக் கோவில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேலிய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. யூத குருமார்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் இஸ்ரேலிய அரசு பயப்பட்டே ஆக வேண்டும். 2012ஆம் ஆண்டு யூதர்களின் இறைஇல்லம் கட்டுவதற்கான பூர்வாங்க வேலையை இஸ்ரேல் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
அதைச் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதன் முதலாக இஸ்ரேலிய அகழாய்வுச் சான்றுகளின்படி சாலமன் கட்டிய முதல் இறை இல்லத்தின் நீள அகலங்களை வரைந்து இஸ்ரேலிய அகழாய்வு நிறுவனம் இறை இல்லத்துக்கான மாதிரி வடிவத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. இரண்டாவதாக இறை இல்லம் கட்டப்படும்போது தாவீதின் சந்ததியினர் அருகே இருப்பர் என்ற விவிலியத்தின் வாக்கின்படி, ஆரோனின் சந்ததி மரபணு சோதனைகள் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. ஆரோனின் சந்ததியினர் மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்கான மரபணு சோதனை நடைபெறுவதாக உறுதிப்படுத்தியிருக்கின்றன மேலை நாட்டு ஊடகங்கள். இஸ்ரேலுக்கு அடுத்து எகிப்திலும், ஜோர்டானிலும், ஈராக்கிலும் அதிகப்படியான யூதர்கள் வாழ்கிறார்கள்.
ஜெருசலம் அழிக்கப்பட்ட போது அங்கிருந்த யூதர்கள் பலரும் நாடோடிகளாக சினாய், ஜோர்டான் வழியாக ஈராக்கில் நுழைந்தனர். எகிப்தின் நைல் நதிக் கரையோரமும், ஈராக்கின் யூப்ரடீஸ் நதிக்கரையோரமும் இஸ்ரவேலர்கள் பல்கிப் பெருகினர். எகிப்தில் இருக்கும் யூதர்களையும், ஈராக்கில் இருக்கும் யூதர்களையும் அங்கேயே இருங்கள் என்று இஸ்ரேல் அரசு அண்மையில் அறிவுறுத்தியிருக்கிறது. எகிப்தின் சினாய் மாநிலத்தில் இருக்கும் முப்பதாயிரம் யூதர்களும் இஸ்ரேலுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று அன்வர் சதாத் சொல்லிக் கொண்டே இருந்தார். 1958இல் இருந்தே எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்னை இருக்கிறது. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் , செங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கைக் கால்வாய். கப்பல்கள் செல்லும் அளவிற்கு ஆழமும், நீளமும் கொண்ட கால்வாய். இக்கால்வாய் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் எளிதான கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. சூயஸ் இல்லையென்றால் ஐரோப்பாவிலிருந்து வரும் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றித்தான் ஆசிய நாடுகளுக்குச் செல்ல முடியும்.
சூயஸ் கால்வாயில் எகிப்திடம் பங்கு கேட்டு மல்லுக்கு நிற்கிறது இஸ்ரேல். அதற்கான காரணமும் இருக்கிறது. இஸ்ரேலுடைய ஏற்றுமதியும் சூயஸ் கால்வாயை நம்பித்தான் இருக்கிறது. எகிப்து, இஸ்ரேல், ஜோர்டன், சூடான் என அத்தனை நாடுகளின் ஏற்றுமதியும் இந்த வழித்தடத்தின் வழியாகத்தான் நடைபெற்றாக வேண்டும். அதுபோக ஐரோப்பிய, ஆசிய நாட்டு கப்பல்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை-யும் முக்கியம். எகிப்து, சூடான் வசம் இதன் உரிமை இன்று இருக்கிறது. பல ஆண்டுங்களுக்கு முன்பாக அதாவது 1948இல் சூயஸ் கால்வாய் இஸ்ரேல் வசம்தான் இருந்தது. அப்போது எகிப்து சுதந்திர நாடாக இல்லை. பிரிட்டன் இஸ்ரேலை விட்டு வெளியேறும் போது, சூயஸ் கால்வாய் நிர்வாகத்தை இஸ்ரேல் வசம்தான் ஒப்படைத்துவிட்டுச் சென்றது. தனக்கு சம்பந்தமே இல்லாத பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு என்று ஒரு நாடு உருவாக்கி தருவேன் என்று உறுதிமொழி கொடுத்ததும் பிரிட்டன்தான். ‘பிரிட்டன் என்ற நாடு, தனக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத அந்நிய தேசத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாவதற்குத் தந்த உறுதிமொழி என்பது, வரலாற்றில் ஒரு விசித்திரமான உறுதிமொழிதான்’ என்றகிறார் புகழ்பெற்ற ஆங்கில பத்திரிகையாளரான ஆர்த்தர் கோயெஸ்டலர் பிரிட்டன் அரசாங்கத்தின் சார்பில் ஃபால்பர் என்பவரால் கொடுக்கப்பட்ட இந்த உடன்படிக்கை தியோடரால் உருவாக்கப்பட்ட சியோனிஸ்ட் யூதர்களுக்கு, பிரிட்டன் கொடுத்த உறுதிமொழிப் பத்திரம். ஃபால்பர் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இஸ்ரேல் என்ற தேசம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஃபால்பர் உடன்படிக்கை உலகின் புவியியல், சீதோஸ்ன நிலையையே மாற்றி அமைத்துவிட்டது. நிச்சயமாக இது மிகப்பெரும் சீதோஸ்ன மாற்றம்தான்.
அந்த உடன்படிக்கையின் ஒரு பக்கம் வியப்புக்குரியது. பாலஸ்தீனத்தில் வசிக்கும் யூதர் அல்லாத சமூகத்தினரால் யூத சமுதாயத்திற்கு இடையூறு ஏற்படுமாயின் அதை பிரிட்டன் அரசு அனுமதிக்காது என்பதுதான் அதிலிருந்த வேடிக்கையான ஷரத்து. ஆனால் நடந்தது என்ன? 1947 – 1949ஆம் ஆண்டுக்குள் சுமார் 7,50,000 பாலஸ்தீனர்கள் அகதிகளாக பாலஸ்தீனத்தை விட்டு ஜோர்டானுக்கும், சிரியாவுக்கும் இடம் பெயர்ந்தனர். ஃபால்பர் உடன்படிக்கை போடப்பட்டு நூறு ஆண்டுகளாகிவிட்டன. 2017ஆம் ஆண்டு ஃபால்பரின் பிரகடனத்தை நூற்றாண்டாக கொண்டாடுவதற்கு பிரிட்டனும், இஸ்ரேலும் முடிவெடுத்த தருணத்தில் உலக முஸ்லிம் நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாலஸ்தீன அரசு அந்த ஆண்டை கருப்பு ஆண்டாக அறிவித்தது.
ஃபால்பர் தீர்மானத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாலஸ்தீனியர்கள், அரபு தீபகற்பத்தில் மிகப்பெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். கிட்டத்தட்ட எல்லா அரபு நாடுகளிலும் இந்த எதிர்ப்புப் பேரணி நடந்தது. இவ்விவகாரத்தில் பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்காது என 2017இன் அன்றைய பிரிட்டன் பிரதமர் தெரசாமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிரிட்டன் அரசாங்கம் எக்காலத்திலும் அதற்காக மன்னிப்பு கேட்காது. காரணம் பிரிட்டனின் அதிகார மையத்தில் மட்டுமல்ல பெரும்- பாலான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அதிகார மையங்களும் யூதர்களால் நீக்கமற நிரம்பியிருக்கின்றன.