ஈஸா நபியை ‘ஈஸப்னு மர்யம்’ என அழைக்கிறது குர்ஆன். ‘மர்யமுடைய மகன் ஈசாவே’ என்பதுதான் அதன் பொருள். வானவர்கள் கூறினார்கள். ‘மர்யமே..! நிச்சயமாக அல்லாஹ் தன்னிலிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு மகன் வரவிருப்பதைப் பற்றி நற்செய்தி கூறுகிறான். அவருடைய பெயர் அல் மஸீஹ்’. ‘எங்கு அவர் உயர்த்தப்பட்டாரோ அங்கிருந்து இறங்கி வருவார், அவர் இறைவனிடம் மிக கண்ணியமிக்கவர். அவர் இறங்கி வராமல் இந்த உலகம் தன் இறுதி மூச்சை விடாது’ என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.
யூதர்களின் நம்பிக்கை வேறு விதமாக இருக்கிறது. கிருஸ்து வருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆண்டி க்ரைஸ்ட் வருவார். அதுவும் தங்களின் யூத இனத்தில் வருவார், ஆண்டி க்ரைஸ்ட் என்றால் கிருஸ்துவுக்கு எதிரானவர் என்று பொருள். ஆண்டி க்ரைஸ்டை முஸ்லிம்கள் ‘தஜ்ஜால்’என்கிறார்கள். கிறித்தவர்களுமே ஆண்டி க்ரைஸ்ட் ‘இறைவனின் விரோதி’ எனச் சொல்கின்றனர். ஆண்டி க்ரைஸ்டைப் பற்றி ஏகப்பட்ட ஹாலிவுட் படங்கள் வந்துவிட்டன. ஆனால் யூதர்கள் அவனே தங்களின் இனத்திலிருந்து வரப்போகின்ற இறைத்தூதர் என்கிறார்கள். ராப்சர் என்பது இலத்தீன் மொழியில் மேலே தூக்கிச் செல்லுதல் என பொருள்படும் ஒரு வார்த்தை. கிறித்தவ விசுவாசிகள் அதை ‘சபை எடுத்துக் கொள்ளுதல்’என்கிறார்கள்.‘தேவன் மரித்த தன் எல்லா விசுவாசிகளையும் மகிமையான சரீரத்தைக் கொடுத்து அனைவரையும் விண்ணுலகம் அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்த பிறகே மீண்டும் கெட்டவர்களை அழிப்பதற்கு வானிலிருந்து இறங்கி வருவார்’ என்பது இன்றைய கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை.
சபை எடுத்துக் கொள்ளப்படுதல் பற்றியே அவர்கள் தங்களின் உரைகளில் அதிகம் பேசுகிறார்கள். ‘தேவன் எக்காளத்தோடு வானத்திலிருந்து இறங்கி வருவார். தன் விசுவாசிகளை வானத்திற்கு அதாவது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்’. வானத்திலிருந்து ஏசு இறங்கி வருவார் என்பதில் இஸ்லாமும் கிறித்தவமும் ஒத்துப்போகின்றன. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமும் கிறித்தவமும்தானே உறவோடு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் யூத கிறித்தவ உறவு மேலோங்கி இருக்கிறதே, ஏன்? முஸ்லிம்கள் ஈசாவின் வருகைக்காகக் காத்திருக்கவில்லை. ஆனால் அவர் இந்த உலகின் இறுதிக் காலத்தில் வானிலிருந்து இறங்கி வருவார் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் திருக்குர்ஆன் உறுதிப்படுத்துவதால் நம்பிக்கை கொள்கிறார்கள். மூன்று மதத்துக்கான அடிப்படை நம்பிக்கை வேறு வேறாக இருக்கிறது. யூதர்கள் வரவேற்கப் போவது ஆண்டி க்ரைஸ்டை அல்ல.. அவர்தான் தேவன் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்பிக்கையோடு பேசுகிறார்கள் கிறித்தவ நம்பிக்கையாளர்கள்.
மேலை நாடுகளின் ஜெபக்கூடங்கள் மீண்டும் மீண்டும் இச்செய்தியைப் பேசுகின்றன. யூதர்களும் உண்மையை அறிந்திடவே காத்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் முடிவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இப்போது ரேசில் இருப்பது யூதர்களும், கிறித்தவர்களும் மட்டுமே. இங்குதான் யூத, கிறித்தவ நெருக்கம் வெளிப்படுகிறது. பைபிளின் பழைய ஏற்பாடு அத்தியாயம் 15இல் சொல்லப்படுவது போல, யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏழு யுத்தங்கள் நடக்காத வரையில் ஏசு வானத்தில் இருந்து இறங்கி வரமாட்டார். இதுவே ஆபிரஹாமுக்கு இறைவன் கொடுத்த வாக்கு என்பது கிறித்தவ உலகத்தின் நம்பிக்கை. முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் யுத்தங்களுக்கு கிறித்தவ மேலை நாடுகள் கொடுக்கும் ஆதரவின் பின்புலம் இதுதான். அந்த ஏழு யுத்தங்களும் யூதர்கள் நடத்தும் யுத்தமாக இருக்க வேண்டும் அதுவும் அரேபிய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் யுத்தமாக இருக்க வேண்டும்.
1948இல் முதல் யுத்தம் நடந்தது, இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திய ஆண்டும் அதுதான். ஜோர்டான், அதன் சார்புடைய நாடுகளுடன் நடந்த எல்லை யுத்தம். 1952ஆம் ஆண்டும் பின் மூன்றாவதாக 1967இல் மிகப் பெரும் யுத்தம் நடந்தது. சிரியா, எகிப்து, ஈராக், ஜோர்டான் என அத்தனை எல்லைப்புற நாடுகளும் ஒரே நேரத்தில் இஸ்ரேலைத் தாக்கின. பாலஸ்தீனத்து மக்களை வெளியேற்றிவிட்டு நடந்த கடுமையான பாலைவன யுத்தம். ‘பாலஸ்தீனத்து மக்களே..! நீங்கள் வெளியேறிவிடுங்கள். நாங்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்டியவுடன் பின் மீண்டும் வந்து மகிழ்ச்சியாகக் குடியேறுங்கள்’ என அரபு நாடுகள் அம்மக்களுக்கு வாக்குறுதியைக் கொடுத்தன. அரபு நாடுகளின் எண்ணம் பொய்த்துப்போனது. இஸ்ரேல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையையும், காஸாவின் பெரும் பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. ஜெருசலம் இஸ்ரேலின் வசம் முழுமையாக வந்தது.
1968இல் ஒரு யுத்தம், 1970இல் ஒரு யுத்தம் என இரு யுத்தங்களால் பெரும் சேதங்களை அம்மக்கள் சந்தித்தார்கள். 2006ஆம் ஆண்டு லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக் குழுவினரின் நாற்பது நாள்கள் யுத்தம். இஸ்ரேல் இன்னும் அதிகமாக ஆயுத உற்பத்தியை வலுப்படுத்தும் முகாந்திரத்தை உண்டு பண்ணியது. இஸ்ரேலின் பட்ஜெட்டில் பெரும் பகுதி ஆயுத உற்பத்திக்கும், இராணுவத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. ஆண் பெண் என்ற பாகுபாடின்றி இராணுவப் பயிற்சி அவசியம் என்று சட்டம் இயற்றிய முதல் நாடு இஸ்ரேல். ஆறு யுத்தங்கள் முடிந்துவிட்டன. இதை நான் சொல்லவில்லை, கிறித்தவ விசுவாசிகள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இறுதி யுத்தம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அது மிகக் கடுமையான யுத்தமாகவே இருக்கும். இஸ்ரேலின் தலைமையில் நடக்கப் போகும் மூன்றாவது உலக யுத்தமாகக் கூட இருக்கலாம். அது நீண்ட காலம் நடக்கும் யுத்தமாக இருக்கும். இறுதி யுத்தத்திற்கு முன்பே மேசியா வந்து விடுவாரா? அல்லது யுத்தம் முடிந்த பின்பு மேசியா வருவாரா? மேலை நாடுகளில் கிறித்தவ விசுவாசிகளால் இப்படியொரு விவாதம் நடத்தப்படுகிறது.
இதுபோன்ற விவாதங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. மூன்றாம் உலக யுத்தம் சிறிதும் பெரிதுமாக அரபு தேசங்களை நோக்கியே நடக்கும். அரபு தேசங்கள் அனைத்துமே அழிவைச் சந்திக்கும். இந்தக் கருத்தில் கிறித்தவர்களோடு யூதர்கள் கரிசனமாக ஒத்துப் போகிறார்கள். யுத்தங்களின் மூலம் மட்டுமே இஸ்ரேல் தன் எல்லையை விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறது. தாவூத்தின் ராஜ்ஜியத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தங்களிடம் இருப்பதாக யூதர்கள் நினைக்கிறார்கள். கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டையும், தோராவையும் இணைத்தே வாசிக்கிறார்கள் யூதர்கள். யூத கிறித்தவர்களின் ஒற்றுமையின் பின்னணியைச் சற்றே நம்மால் இப்போது விளங்கிக் கொள்ளமுடிகிறது.
1967 போருக்குப் பின் ஜெருசலத்தை முழுமையாக இஸ்ரேல் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி ஆதிக்கம் அன்றோடு முடிவுக்கு வந்தது. வெற்றிக்குப்பின் தங்களின் புனித ஆலயத்துக்குள் நுழைந்த அந்த யூத ராணுவ வீரன் முழங்காலிட்டவனாக சப்தமிட்டுச் சொன்னான். இறுதியாக ஜெருசலத்தை நாங்கள் கைப்பற்றி விட்டோம். உரத்த குரலில் அவன் சொன்னதை அங்கிருந்த அனைத்து வீரர்களும் கேட்டனர். தாவூதீன் நகரில் அந்த மலைக் கோவில் யூதர்களின் குருதியில் நனைந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. அங்குதான் முஸ்லிம்களின் புனிதப் பள்ளி அல்அக்சா இருக்கிறது. கிபி 691இல் அரபு தேசத்திலிருந்து ஒரு பெரும்படை பாலஸ்தீனத்து பாலைவனத்தைக் கடந்து ஜெருசலம் வந்தடைந்தது. விண்ணைத் தொடும் புழுதிப் படலத்துக்குள் ஜெருசலம் சிக்கிக் கொண்டதோ என திக்கித்துப் போனார்கள் பாலஸ்தீனவாசிகள்.
கலீபா அப்துல் மாலிக் பின் மர்வான், அல்-அக்சா பள்ளி வளாகத்தில் தம் படைத் தளபதிகளோடு உரையாடிக்கொண்டிருந்தார். பாலஸ்தீனம், மக்கத்து அரேபியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட காலகட்டம். கலீபா உமர் பின் கத்தாப் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசலின் மேல்புறம் ஒரு பாறை குவிமாடம் அமைக்கும் விவாதம் தான் அங்கு நடைபெபற்றுக் கொண்டிருந்தது. தங்கத்திலும் செம்பிலுமான ஒரு குவிமாடம். யூதர்களின் மேற்கு அழுகைச் சுவரும், கிறித்தவர்களின் கல்லறைத் தோட்டமும் அந்த 36 ஏக்கர் நிலப் பரப்புக்குள் தான் இருக்கிறது. முஸ்லிம் நாடுகளுடன் ஆயுத யுத்தங்கள் நடத்தும் இஸ்ரேல் இந்த 36 ஏக்கர் இடத்தையும் இடித்துத் தள்ளிவிட்டு அவர்களின் இறை இல்லத்தைக் கட்டுவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது? ஜெருசலம் அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என அத்தனை வளர்ந்த நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவென முடிவெடுத்த பிறகும் இஸ்ரேல் ஏன் தயங்குகிறது. அதன் இரகசியம் தான் என்ன? வரலாறு அதற்கான விடையையும் அதனூடேதான் வைத்திருக்கிறது.
நன்றி சமரசம்