“தாவீதின் மரணத்திற்குப் பின் அவருடைய மகன் சாலொமோன் எருசலேமில் பிரமாண்ட ஆலயத்தைக் கட்டினார். ஆசாரரிப்புக் கூடாரத்திற்கு மாற்றாக இது அமைந்தது. அரசாட்சி தாவீதின் பரம்பரையில் மாத்திரமே என்றென்றும் நிலைத்திருக்கும், என கடவுள் அவரோடு உடன் படிக்கை செய்திருந்தார். ஆகவே அபிஷேகம் செய்யப்பட்ட அரசரான மேசியா அவருடைய வம்சாவளியில் தோன்றுவார்.” பழைய ஏற்பாடு – ஆதியாகம் 22:18 இந்த மேசியா ராஜாவின் மூலம் இஸ்ரவேல் தேசத்தாரும் மற்ற எல்லா தேசத்தாரும் பரிபூரண ஆட்சியை அனுபவித்து மகிழ்வர் என்பதை தீர்க்கதரிசனம் சுட்டிக் காட்டுவதாகவே யூதர்கள் நம்புகிறார்கள்.
இதன் அடிப்படையில்தான் அவர்களின் பயணம் இன்று வரையில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்த தண்டனை முடிவுற்றதாகவே யூதர்கள் கருதுகிறார்கள். ‘காலப் போக்கில் யூதர்கள் தங்களின் கடவுள்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை மீறினர். ஆனாலும் அவர்கள் திருந்துவதற்காக யெகோவா ஆகிய இறைவன் தொடர்ந்து பல தீர்க்கதரிசனங்களை அனுப்பினார்’ ஏசாயா 11. 1-10. ‘நவீனயுகம் என்பது இஸ்ரவேலர்களுக்கான யுகம், தங்களுக்கு என்று தனி நாடு, தனி ராஜ்ஜியம் உருவாகிவிட்டது. இனிமேல் மேசியா வருவார், யூதர்களையும் இவ்வுலகையும் ஆட்சி செய்வார்’ என்பது- தான் உலகில் பரந்துபட்டு வாழும் இஸ்ரவேலர்களின் திடமான நம்பிக்கை.
இயேசுதான் மேசியாவாக வருவார் என்ற நம்பிக்கையில் யூதர்கள் இல்லை, தங்களின் யூத இனத்தில் மேசியாவுக்குப் பொருந்துகின்ற தீர்க்கதரிசனங்களுக்கான ஒருவர் வருவார், அவர் யூதராக இருப்பார். ஏசு யூதர்தான் என்றாலும் எபிரேய வேதாகமத்தில் சொல்லப்படும் அடை-யாளங்களுடன் உள்ள மேசியாவையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மேசியா எப்போது வருவார் என்பது யூதர்களுக்கு இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய யூதர்களும் இதைத்தான் நம்புகிறார்கள். எருசலேமை திரும்ப புதுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளையை நிறைவேற்றி அகண்ட இஸ்ரேல் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் யூதர்களின் மேசியா வருவார், அவர் வரும்போது உலகில் வாழும் அனைத்து இஸ்ரவேலர்களும் இஸ்ரேலை நோக்கி விரைந்து வருவார்கள் என்பது யூதர்- களின் நம்பிக்கை.
ஆனால் கிறித்தவர்கள் சொல்லும் மேசியாவை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. யூதர்கள் எதிர்பார்ப்பது அரசியல் ஆளுமையுள்ள மேசியாவை…! அதாவது மேசியா இஸ்ரவேலின் ராஜாவாக இவ்வுலகை ஆளும் அதிபராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அரசியலிலோ, உலக வாழ்விலோ எந்த நாட்டத்தையும் காண்பிக்காத இந்த நசரேயனை, கழுமரத்தில் அவமானமாக மரித்தபின்பு அவர் எவ்விதம் மேசியாவாக இருக்க முடியும்? என்பதுதான் யூதர்களின் கேள்வியாக இருக்கிறது. இறைவனால் அனுப்பப்பட்டவர் கொல்லப்பட்டால் அந்தச் சமூகத்தை இறைவன் அழித்துவிடுவான் என்ற நிலையில், சிலுவையில்- அறையப்பட்டு, இழிவுபடுத்திக் கொல்லப்பட்ட ஏசு எங்ஙனம் மேசியாவாக இருக்க முடியும் என்பதுதான் ஏசுவின் மேல் யூதர்களுக்கு நம்பிக்கை இல்லாததன் காரணம். ஏசு நபியாக இருந்திருப்பாரேயானால் அந்த இறைவன் அவரைக் கொன்ற ரோமர்களை ஏன் அழிக்கவில்லை? இங்குதான் இஸ்லாமியர்கள் வேறுபடுகிறார்கள்.
ஏசு என்கிற ஈசா கொல்லப்படவில்லை, அவரை இறைவன் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். அவர் இவ்வுலகின் இறுதி நாளில் மீண்டும் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. ஆனால் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை 1400 ஆண்டுகளாகவே யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூதர்கள் தங்களின் எபிரேய மொழியை மறந்து, பரந்துபட்ட இவ்வுலகில் பரவினார்கள். பல மொழிகளைக் கற்று பேசத் தொடங்கினார்கள். காலம் பல நூற்றாண்டுகளாக வேகமாகக் கழிந்தது. எபிரேய மொழியைவிட கிரேக்க மொழி பேசும் யூதர்கள் பல்கிப் பெருகினர். இந்தியாவில் குறைந்த நபர்கள் பேசும் சமஸ்கிருதம் போல எபிரேய மொழியும் எழுத்தற்ற மொழியாகவே இன்றும் இருக்கிறது.
தற்போதைய இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக, தேசிய மொழியாக எபிரேயம் என்றும் ஹீப்ரு என்றும் அழைக்கப்படும் யூதர்களின் மொழியை மீட்டுக் கொண்டுவர இன்றைய இஸ்ரேல் பெரும் முயற்சி செய்கிறது. மூன்றாம் நூற்றாண்டில் எபிரேய வேதாகமம் முதன் முதலாக கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதன் பின்பு யூத சமுதாயம் தோராவை புதிய கண்ணோட்டத்தில் கிரேக்க கலாச்சாரத்தின் வழியாகப் படிக்கத் தொடங்கினர். புதிய எழுச்சியும் பிறந்தது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகள் யூதர்களை தங்களின் நாட்டிலிருந்து வெளியேற்றம் செய்யும் வேலையைச் செய்தனர். ஏசுவை நம்பாத யூதர்கள் துரத்தி அடிக்கப்பட வேண்டும் என செய்தி பரவியது. கத்தோலிக்க சர்ச்சின் செல்வாக்கிற்கு அடி பணிந்த அத்தனை நாடுகளும் யூதர்களுக்கு அவமானத்தையே கொடுத்தனர். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குள் மேற்கு ஐரோப்பா முழுவதும் இருக்கும் நாடுகளிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டன அது தனி மனித துரத்தல் அல்ல, ஒரு சமூகத் துரத்தல்.
மத்திய தரைக்கடலைச் சுற்றி உள்ள நாடுகளில் யூதர்கள் தஞ்சம் புகுந்தனர். தங்களின் கஷ்டத்தைப் போக்கவும் தங்களைக் காப்பாற்றவும் தங்களின் மேசியா வரமாட்டாரா என யூதர்கள் ஏங்காத நாள்களே இல்லை. சமீபத்தில் கூட இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க விஜயம் செய்தபோது அவரைச் சந்தித்த யூத மதகுரு ஒருவர், எப்போது சாலமன் கோவிலின் வேலை முடிவடையும், எப்போது எங்கள் மேசி வருவார் என்று கேட்கிற வீடியோ உலகில் பெரும் வைரலாகப் பரவியது. காரணம், தற்போது இஸ்ரேலில் இருப்பவர்கள் உண்மையான பனி இஸ்ரவேலர்கள் அல்ல எனில் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் யூதர்கள் யார்?
18ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த மோசஸ் மென்டல்சான் என்கிற யூத தத்துவ ஞானி ஹாஸ்காலாவின் வழி என்கிற நவீனத்துவ யூத மதத்தைக் கட்டமைத்தார். அடிப்படைவாத யூத சித்தாந்தத்தை விட்டு சற்று விலகி மேற்கத்திய கலாச்சாரத்தை யூதர்கள் தழுவினால்தான் மற்றவர்கள் யூதர்களை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் அவர் சொன்ன நவீனத் தத்துவம். பல ஐரோப்பியர்கள் மோசஸ் மென்டல் சானின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு யூதர்களாக வலம்வரத் தொடங்கினார்கள். இந்த நவீனத்துவ யூதர்களால் 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் வன்முறை
கட்டமைக்கப்பட்டது. கிறித்தவ நாடான ரஷ்யாவில் இந்த நவீனத்துவ யூதர்கள் பெரும் வன்முறையைச் செய்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பனி இஸ்ரவேலர்களின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நவீனத்துவ யூதர்களை பழமைவாத யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் மேசியா வந்து அழைத்துச் செல்வதற்கான சூழ்நிலையை நாங்கள் கட்டமைத்துத் தருகிறோம் அதற்காக எங்களின் வாழ்க் கையை அர்ப்பணிக்கின்றோம் என்று நவீனத்துவ யூதர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள்.
அவர்களின் இந்தக் கூற்றிற்காக ஆபிரகாமையும், தாவீதையும், சாலமனையும், மோசசையும் வைத்து சத்தியம் செய்துள்ளார்கள். ‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்கென்று ஒரு புண்ணிய பூமியைக் கட்டமைக்கிறோம்’ என்ற சியோனிஸ்ட்களின் இந்த உத்தரவாதம்தான் பனி இஸ்ரவேலர்களைச் சாந்தப்படுத்தி வைத்திருக்கிறது. வலதுசாரி வெள்ளையர்கள் யூத மதத்தைத் தழுவிக் கொள்வதற்கு சியோனிச சித்தாந்தம் இடம் கொடுத்தது. இதனால் வெள்ளை இன யூதர்கள் இன்று பல்கிப் பெருகி இருக்கிறார்கள். தங்களை யூத சியோனிஸ்ட்கள் என்று அழைத்துக் கொண்டு இன வெறுப்பை, இஸ்லாமிய இன அழிப்பை, பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் இரக்கமற்ற வன்முறையை இன்றைய தேதி வரையில் இஸ்ரேலில் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் இந்த உலகம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நன்றி சமரசம்