வரலாற்றை மாற்றுவதில் வகுப்பு வாதிகள் என் அவ்வளவு குறியாக உள்ளார்கள்?
வரலாற்றை அழிப்பதன் வாயிலாக ஒரு சமுதாயத்தின் பெரும் தியாகத்தையும், உழைப்பையும் அழித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். வட மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களிலிருந்து மொகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆரியர்கள் வருகை முஸ்லிம்கள் படையெடுப்பு என்ற வாக்கிய அமைப்பே எவ்வளவு திட்டமிட்டு வரலாற்றைப் புரட்டுகிறார்கள் என்பதற்கான உதாரணம். இனி புராணங்களின் அடிப்படையில்தான் வரலாறு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகின்றார்கள். இன்னொரு தலைமுறையினரிடம் உண்மை வரலாற்றுக்கு பதிலாகப் பொய்யான வரலாற்றைக் கொண்டு சேர்க்க பெரும் முயற்சி செய்கின்றார்கள். அதனால்தான் பாடப்புத்தகங்களிலிருந்து திரிபு வேலையைத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இத்தனை வரலாறு எழுதியும் பாபரி மஸ்ஜித் வரலாறு குறித்து செ.திவான் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லையே!
ஏ.ஜி.நூரானி, ரொமிலா தாப்பர் போன்றவர்களெல்லாம் பாபரி விவகாரம் குறித்து விரிவாக எழுதியுள்ளார்கள். ஏற்கனவே போதுமான அளவு பதிவாகியிருக்கும் வரலாறு அது என்பதால் நான் அதில் அதிகக் கவனம் செலுத்த விரும்பவில்லை. ஆனாலும் பாபரி மஸ்ஜித் குறித்து ‘அணைய வேண்டிய அயோத்’தீ’ என்ற ஒரு நூலையும் நான் எழுதியுள்ளேன்.
முன்மாதிரி வரலாற்று ஆய்வாளராக நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
வெ.சாமிநாத சர்மாவின் புத்தகங்கள் சிறப்பானதாக இருக்கும். அவருடைய ராஜதந்திர யுத்தகள பிரசங்கம், பண்டைய கிரேக்கம், ஃபாலஸ்தீன வரலாறு போன்ற பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து அவர் நிறைய எடுத் தாளுவார். வரலாற்றுச் செய்திக்கு ஆதாரம் கொடுப்பார். அதற்கு அடிக்குறிப்பும் தரு வார். அடிக்குறிப்பு எழுதும் பழக்கத்தை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
ஔரங்கசீபை நீங்கள் ஔரங்கஜேப் என்று எழுதுகிறீர்களே..!
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஜமாஅத்துல் உலமா மாத இதழின் ஆசிரியர் மாபெரும் அறிஞர் அபுல் ஹஸன் ஷாதலி ஹழரத்தைச் சந்தித்துப் பேசுவது வழக்கம், குர்ஆனின் குரலில் இந்து முஸ்லிம் ஒற்று மையை வலியுறுத்தி இருநூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். அப்போது ஷாதலி ஹழரத் அவர்கள் ஜமாஅத்துல் உலமா இதழில் தொடர் எழுதக் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து ஔரங்கஜேப் தொடரை எழுதினேன். முதலில் நானும் ஔரங்கசீப் என்றுதான் எழுதினேன். அப்போது வேலூர் மதரஸாவிலுள்ள ஒரு ஹழரத் ‘ஔரங்கசீப் அல்ல. ஔரங்கஜேப். ஔரங்கஜேப் என்றால் “அழகிய அரிய சிம்மாசனம்’ என்று விளக்கினார். அதன்பிறகு ஔரங்கஜேப் என்றுதான் எழுதி வருகிறேன். மஜூம்தார்தான் ஔரங்கஜேப் குறித்த விரிவான நூலை எழுதியுள்ளார். அவரே சொல்லாததையும்கூட நான் எழுதியுள்ளேன். ஒளரங்கஜேப் மீது சுமத்தப் பட்ட 11 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளேன். முதலில் இந்த நூலை எனது சொந்தப் பதிப்பாக வெளியிட்டேன். பின்னர் விகடன் பிரசுரம் மூன்று பதிப்புகள் கொண்டு வந்தது. இப்போது இந்த நூலை ஐ.எஃப்.டி மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
சமகால வரலாற்றைச் சொல்வதில் உங்களின் பங்களிப்பு என்ன? வரலாற்றைத் தாண்டி சமூகப் பிரச்சினைகள் எதையும் நீங்கள் எழுதியதில்லையா?
இன்றைய நவீனக் காலத்தில் அன்றாட நிகழ்வுகள் உடனுக்குடன் பதியப்படுகின்றன. இன்றைய வரலாறு மிகவும் முக்கியம், அதை எழுதுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் பலர் இருக்கின்றார்கள். ஆனால் உண்மை வரலாற்றை எழுதுவதற்கான ஆய்வாளர்கள் நம்மிடம் மிகக் குறைவாக இருக்கின்றார்கள். வரலாற்றைத் திரித்தும், மறைத்தும் எழுதியுள்ளார்களே அதைச் சரி செய்யவில்லையெனில் நம் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். எனவே தான் பொய்யான வரலாற்றுத் தகவல்களைத் தோலுரித்து, உண்மையான வரலாற்றை எழுது வதில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். அதே நேரத்தில் இன்றைய வரலாறு மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகள் குறித்தும் எழுதியுள்ளேன்.
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற நூலை எழுதியுள்ளேன். 1994இல் ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் என்ற நூலை எழுதியுள்ளேன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி ஆதாரங்களுடன் எழுதிய அந்த நூல் ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. காரணம் என்ன தெரியுமா? அணுமின் நிலையத்தைச் சார்ந்தவர்களே மொத்த நூலையும் வாங்கிச் சென்றுவிட்டார்கள். அதை முடக்கிவிட்டார்கள். அந்த நூல் மக்களிடம் சென்று சேரவில்லை.
மலபார் முஸ்லிம்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளீர்கள் இல்லையா?
மலபார் முஸ்லிம்களின் மாப்பிள்ளா போராட்டம் விடுதலைக்கான போராட்டம். ஆனால் அதை இந்து முஸ்லிம் கலவரமாக எழுதியுள்ளார்கள். வரலாற்றாசிரியர் நீல கண்ட சாஸ்திரியே அப்படித்தான் எழுதியுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. 1921ஆம் ஆண்டு தனி நாடு, தனி ஆட்சி, தனி பாஸ்போர்ட், தனி காயின்ஸ் என்று இருந்தது. இந்தியாவில் முதல் விடுதலையடைந்த பகுதி மலபார். அதன்பிறகு பிரிட்டிஷ் ஆக்கிரமித்துக் கொண்டது தனி வரலாறு. இந்த விடுதலைப் போராட்டத்தில் பல முஸ்லிம்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள், அந்தமான் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். காடாகக் கிடந்த அந்தமான் தீவை நகராக்கியதே முஸ்லிம்கள்தான். முஸ்லிம்களுக்கு மட்டுமே மனைவி மக்களுடன் செல்வதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி வழங்கியது. அங்கு யாரெல்லாம் சென்றார்கள் என்று விரிவாக எழுதியுள்ளேன். விடுதலைக்காக உயிர் நீத்தவர்களின் அடக்கத்தலம் கோவையில் உள்ளது. ஆனால் இப்போது அவை அழிக்கப் பட்டு வருகின்றன. நான் அதற்கான புகைப் பட ஆதாரங்களை வைத்துள்ளேன்.
இலக்கிய ஆளுமைகளுடனான உங்களுடைய தொடர்பு குறித்துச் சொல்லுங்களேன்!
வல்லிக்கண்ணன் மிகவும் எனக்கு நெருக்கமாக இருந்தார். அவரைக் குறித்து இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். அவர் எனக்கு எழுதிய கடிதங்களையும் நூலாக வெளியிட்டிருக்கின்றேன். அவரும் என்னைக் குறித்து அவருடைய நூலில் எழுதியுள்ளார். அதுபோல் தி.க.சியும் எனக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அதையும் தொகுத்துள்ளேன். பொன்னீலன், சுந்தரராம சாமி, பிரபஞ்சன் ஆகியோரோடும் நான் நெருங்கிப் பழகியிருக்கின்றேன். தொ.மு.சி., கி.ரா. போன்ற ஆளுமைகள் அவர்களுடைய நூல்களில் என்னுடைய செய்திகளை பகிர்ந்துள்ளார்கள். தோப்பில் முஹம்மது மீரான். இந்திரா பார்த்தசாரதியுடன் கி.ராவைச் சந்தித்து நெடுநேரம் உரையாடியிருக்கின்றேன். கி.ரா குறித்து இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். என்னுடைய தந்தையின் நாள்குறிப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. மிகவும் ஏழ்மையில் வாழ்ந்த அவர் அவருடைய தாயாருடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து உடையாக அணிந்து பள்ளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நாள்குறிப்பை ‘சொல்லி முடிக்கப்படாத சுயசரிதை’ என்று நூலாகத் தொகுத்து வெளியிட்டேன். அதனைப் பார்த்த கி.ரா. என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டியதுடன் அவருடைய கதைசொல்லியில் இந்த நாள் குறிப்பை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
மருத நாயகம் கான்சாஹிப் முஸ்லிம்தான் என்பதை ஆய்வுப்பூர்வமாக எடுத்துரைத்ததில் உங்கள் பங்கு மிக முக்கியமானது. எப்படி இந்த ஆய்வை மேற்கொண்டீர்கள்?
மருத நாயகம் குறித்து ஏழெட்டு நூல்கள் தமிழில் வந்துள்ளன. நானும் எழுதியுள்ளேன். அந்தப் புத்தகங்களோடு என்னுடைய புத்தகங்களை ஒப்பாய்வு செய்து பார்த்தால் உங்களுக்குப் பல உண்மைகள் புரியும். அடிக்குறிப்புகளுடன், ஆதாரங்களுடன் நான் எழுதியுள்ளேன். 1857 சிப்பாய் கலகம் நடந்தது. சிப்பாய் கலகம் அல்ல. இந்தியா முழுவதும் நடைபெற்ற பெரும்போர் அது. அப்போது பிரிட்டிஷ்காரர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேனுவல் தயார் செய் தார்கள், 1858இல் எழுதப்பட்ட நெல்சன் மெஜ்ரா கன்ட்ரி மேனுவலில் மூன்றாம் ஆள் சொன்ன தகவலின் அடிப்படையில் எழுதப் பட்ட குறிப்பில் கான்சாஹிப் சைவ வேளாளர் என்று இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். கான்சாஹிப் தூக்கில் போடப்பட்டது 1764. நூறாண்டு கழித்து வாய்வழித் தகவலில் சொன்ன குறிப்பு அது. உண்மை அதுவல்ல. நாட்டுப்புறப் பாடல்களில் கான்சாஹிப் குறித்து ‘ஆலிம் குலம் காக்க வரு தீரன்” என்று எழுதப்பட்டுள்ளது.
1754 இல் ஆவணக் காப்பகத்தில் நீளமான லெட்ஜரில் மருத நாயகம் தூக்கிலிடப்பட்ட அன்று ‘அவன் தூக்கிலிடப்பட்டான்’ என்று இரண்டு வரி எழுதியுள்ளனர். பிரிட்டிஷ் இராணுவத்திலுள்ள ஒரு சிப்பாய் ஸ்காட்லாண்டில் உள்ள ஒரு நண்பனுக்குக் கடிதம் எழுதுகிறான். அதில் ‘நேற்று காலை ஒரு மூர் தூக்கிலிடப்பட்டான்’ என்று எழுதியுள்ளான். முஸ்லிம்களை Moor என்று குறிப்பிடுவார்கள். மருத நாயகத்தை முஸ்லிம் என்று குறிப்பிட்டு அன்று எழுதிய இந்தச் செய்திதான் உண்மையானது.
உங்கள் திருமணம் கலைஞரின் தலைமையில்தான் நடந்தது இல்லையா..!?
1985 ஏப்ரல் 5ஆம் நாள் என்னுடைய திருமணம் கலைஞர் தலைமையில் நடை பெற்றது. மிகவும் பாராட்டி, வாழ்த்திப் பேசிய அந்த நாள்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. கலைஞருடைய உதவியாளராகப் பணியாற்ற அண்ணன் தென்னரசு என்னை அழைத்துச் செல்ல இரண்டு முறை முயன்றார்கள் திருநெல்வேலியை விட்டு எனக்கு வெளியே செல்ல மனதில்லை. 1973இலிருந்தே வைகோவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அப்போது நான் நெல்லை மாவட்ட மாணவர் திமுக இணைச் செயலாளராக இருந்தேன். அப் போது வைகோ மாநில மாணவர் திமுக இணைச் செயலாளராக இருந்தார். இதுவும் ஒரு காரணமாக இருந்தது. கலைஞர் என்மீது தனிப்பட்ட முறையில் பெரிதும் அன்பு கொண்டிருந்தார். 1989ஆம் ஆண்டு திமுக வென்றபோது அறிவாலயத்தில் நான் இருந்தேன். என்னுடைய நூல்களைக் கலைஞர் விரும்பி வாசித்திருக்கின்றார். முரசொலியில் கரிகாலன் பகுதியில் நான் பல கேள்விகளும் அவரிடம் கேட்டுள்ளேன்.
நாகூர் ஹனீஃபாவுடன் உங்கள் நினைவுகள்..?
ஹனீஃபா அண்ணனுடன் எனக்கு நெருக்கம் அதிகம், ஒருநாள் அவருடன் வேனில் வந்து கொண்டிருக்கும்போது ஹனீஃபா அண்ணனிடம் ‘பெரியார் குறித்து ஏதேனும் பாடியுள்ளீர்களா?’ என்று கேட்டேன். உடனே அவர் ‘பேரறிவாளன் பெரியார் என்னும் ஈவேரா’ என்ற புலவர் ஆபிதீன் எழுதிய பாடலைப் பாடினார்.
பட்டுக்கோட்டை அழகிரி நாகூர் ஹனீஃபாவை அறிஞர் அண்ணா வருகின்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்று பாடச் சொன்னாராம். எதிரிகள் முட்டையை வீசி னார்கள். ஹனீஃபா அண்ணனின் முகத்தில் வழிந்த முட்டையை அண்ணா தனது வேட்டியால் துடைத்த நிகழ்வை ஹனீஃபா அண்ணன் என்னிடம் சொல்லும்போது ‘அது தாய்ப்பாசம்” என்று சொல்லியிருக்கின்றார். ஹனீஃபா அண்ணன் எம்.ஜி.ஆரைக் குறித்தும் அழகான பாடலைப் பாடியிருக்கின்றார். இறுதிக் காலத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அவருடைய மகனார் என்னை அனுமதிக்கவில்லை. காரணம் ஹனீஃபா அண்ணன் செவித்திறனை இழந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பின்னர் என்னைப் பற்றி அறிந்து அனுமதியளித் தார்கள். நான் எழுத அவர் பதிலுக்கு எழுதிக் காட்டினார். இப்படியே ஒரு டைரி முழுவதும் தீர்ந்துவிட்டது. வார்த்தைகளே இல்லாமல் அந்தளவு அளவளாவினோம். நாகூர் ஹனீஃபா வாழ்க்கை வரலாற்றை நான் விரிவாக எழுதி நூலாக வந்துள்ளது.
புத்தகங்களுக்கு மத்தியில் வாழ்கின்றீர்கள். எவ்வளவு புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
என் வீட்டில் விடிய விடியச் சோதனை நடத்தினாலும் நூறு ரூபாய் தேறாது. எங்குப் பார்த்தாலும் புத்தகங்கள்தான். அள்ளிக் கொடுத்தது போக என்னிடம் இப்போது ஒரு இலட்சம் புத்தகங்கள் இருக்கும். விட்டிலுள்ளவர்கள் என்னைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புத் தருகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு நான் இந்த நூல்களைச் சேகரித்துள்ளேன். என்னிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் அத்தனைக்கும் நூல்கள் வாங்கிவிடுவேன். பஸ் செலவுக்குக் காசு இருக்காது. மூர் மார்க்கெட்டில் புத்தகங்கள் வாங்கிவிட்டு பஸ்ஸுக்குப் பணம் இல்லாமல் எக்மோர் வரை நடந்தே போயிருக்கின்றேன். சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு பட்டினி கிடந்த நாள்களும் உண்டு. இப்படிச் சேர்த்த புத்தகங்களை வீட்டில் பார்ப்பவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலும் புத்தகங் கள் வாங்குபவர்கள் திரும்பத் தருவதில்லை. அதுபோல இலவசமாகக் கொடுக்கும்போது சிலர் பழைய புத்தகக் கடையில் போட்டுவிடுகிறார்கள். என் புத்தகத்தையே நான் பழைய புத்தகக் கடையில் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றேன். அதுபோல வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் எனக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. சாப்பிடுவதைப் போலத் தினமும் வாசித்துவிட வேண்டும் எனக்கு!
இப்போது நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நூல்கள்..?
ஔரங்கஜேப் 1707ஆம் ஆண்டு மறைந் தார். அதன்பிறகு கடைசி மொகலாய மன்னரான பகதூர்ஷா 1862இல் மறைந்தார். இவர்களுக்கு இடைப்பட்ட வரலாற்றை 1707-1862 உள்ள மொகலாய மன்னர்கள் என்ற நூல் அச்சுக்குத் தயாராகி விட்டது. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அஸ்ஃபாக்குல்லாகான், அந்த மானில் தன் கைகளாலேயே பிரிட்டிஷ் அதிகாரியை நெரித்துக் கொன்ற முஹம்மது ஷேர் அலீ ஆகியோரைக் குறித்த ‘சுதந்திரச் சிங்கங்கள்’ நூலும் தயாராகிவிட்டது. பாரசீகப் பேரரசி நாதிர்ஷா, இந்திய சுதந்திரப் போரில் பகதூர் ஷா, துலுக்க நாச்சியார், கச்சத்தீவு, கம்பனில் சைவம் நூல்கள் வர உள்ளன. உமர் கய்யாம், சிராஜுத் தௌலா ஆகியோர் குறித்த தவறான செய்திகளுக்கு மறுப்பளிக்கும் விதமாக உண்மை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கின்றேன். பொய்யான வரலாற்றுக்கெதிராக பேனா ஏந்திய என் போராட்டம் என்றும் தொடரும்.
நன்றி – சமரசம்