கடந்த ஆகஸ்ட் 6 – 7 ஆகிய நாட்களில் திருச்சி, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஹரியானா மாவட்டத்திலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவ சங்பரிவாரத்தினரை கண்டித்தும், RPF காவல் அதிகாரி ஓடும் ரயிலில் மூன்று முஸ்லிம்களையும் அவருடைய பழங்குடிஇன உயரதிகாரியையும் சுட்டு கொன்றதை கண்டித்தும், மூன்று மாதங்களுக்கும் மேலாக பழங்டியினருக்கு எதிராக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த வன்முறை அனைத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய நிவாரணம் வழங்கவும் குற்றவாளிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) #MuslimLivesMatter எனும் கருப்பொருளின் கீழ் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கான காரணம் இந்துப் பெரும்பான்மைவாதக் கருத்தியல் சமூக மட்டத்திலும் அதிகார மையங்களிலும் ஆழமாகக் குடிகொண்டுள்ளதே என்றும், கலவரத்தை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசே கலவரங்களை நடத்தி அதன் மூலம் அரசியல் லாபம் ஈட்டும் அவல நிலை உள்ளதாகவும், இந்துத்துவ ஃபாஸிச பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் கண்டன உரைகளையும் கோஷங்களையும் எழுப்பினர்.
SIOவின் பிரதான கோரிக்கைகள்
ஹரியானா, மணிப்பூரில் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டதிற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அக்கலவரங்களில் பாதிக்கபட்ட மக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், ஹரியானாவில் கொல்லப்பட்ட இமாம் சாத் (19), மஹாராஷ்ட்ரா இரயில் வன்முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்கள், பழங்குடியின அதிகாரியின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் 50 இலட்சம் நிவாரணமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தியாவில் தொடர்ச்சியாக நிகழும் சிறுபான்மையினருக்கு எதிரான நடக்கும் தொடர் வெறுப்புக் குற்றங்களையும் கலவரங்களையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
SIOவின் பத்திரிக்கைச் செய்தி