கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் வெறும் ஒன்பது முஸ்லிம் பிரதிநிதிகள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2023 தேர்தலில், கூடுதலாக 2 முஸ்லிம்கள் வெற்றி பெற்று, மொத்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியுள்ளனர், இருப்பினும் இது 1978 இல் இருந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகபட்ச முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை விடக் இது குறைவான எண்ணிக்கையே!
இதில் காங்கிரஸ் 15 முஸ்லிம் வேட்பாளர்களையும், ஜனதா தளம் 21 முஸ்லிம் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 15 முஸ்லிம் வேட்பாளர்களையும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) 11 முஸ்லிம் வேட்பாளர்களையும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தி இருந்தது.
வெற்றியாளர்கள்:
குல்பர்கா உத்தர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சந்திரகாந்த் பாட்டீலை தோற்கடித்து வெற்றி பெற்ற ஒரே முஸ்லிம் பெண் கனீஸ் பாத்திமா. அவர் 2018 தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் அவரது கணவர் மறைந்த கமர் உல் இஸ்லாம் 2013 இல் வெற்றி பெற்றார்.
பெங்களூரு நகரின் சாம்ராஜ்பேட் தொகுதியில் பாஜகவின் பாஸ்கர் ராவை தோற்கடித்து மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் BZ ஜமீர் அகமது கான் வெற்றி பெற்றார்.
நரசிம்மராஜா தொகுதியில் பாஜகவின் எஸ்.சதீஷ் சந்தேஷ் சுவாமியை தோற்கடித்து, தன்வீர் சேட் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றார். தன்வீர் சேட் 83480 வாக்குகளும், சதீஷ் சந்தேஷ் சுவாமி 52360 வாக்குகளும் பெற்றனர்.
மங்களூர் தொகுதியில் பாஜகவின் சதீஷ் கும்பாலாவை தோற்கடித்து UT அப்துல் காதர் வெற்றி பெற்றார். காதர் 83,219 வாக்குகளும், கும்பாலா 60,429 வாக்குகளும் பெற்றனர்.
சாந்திநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவகுமாரை தோற்கடித்து என்.ஏ.ஹரீஸ் வெற்றி பெற்றார். ஹரீஸ் 61,030 வாக்குகளும், சிவகுமார் 53,905 வாக்குகளும் பெற்றனர்.
2019 ஆம் ஆண்டு சிவாஜிநகர் இடைத்தேர்தலின் போது முதன்முறையாக எம்எல்ஏவான ரிஸ்வான் அர்ஷத், 64913 வாக்குகள் பெற்று அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் N சந்திரா 41719 வாக்குகள் பெற்றார்.
ரஹீம் கான், பிதார் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த சூர்யகாந்த் நாக்மார்பல்லியை தோற்கடித்தார். கான் 69165 வாக்குகளும், நாக்மார்பள்ளி 58385 வாக்குகளும் பெற்றனர்.
ராமநகரா தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் ஹெவிவெயிட் வேட்பாளர் நிகில் குமாரசாமியை தோற்கடித்தார் இக்பால் ஹுசைன். உசேன் 87690 வாக்குகளும், நிகில் 76975 வாக்குகளும் பெற்றனர். நிகில் குமாரசாமியின் தாய், தந்தை மற்றும் தாத்தா அனைவரும் இந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மேலும் அவர் ஒரு கன்னட திரைப்பட நடிகரும் கூட.
பெல்காம் உத்திரத்தைச் சேர்ந்த ஆசிப் (ராஜூ) சேட் 55939 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் டாக்டர் ரவி பி.பாட்டீல் 50898 வாக்குகள் பெற்றார்.
மாநிலத்தில் குறைந்தபட்சம் 19 தொகுதிகளில் முஸ்லிம்கள் 30% க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டிருந்தாலும், சட்டமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் இதற்கு முன்பு நான்கு முறை மட்டுமே இரட்டை இலக்கத்திலிருந்திருக்கிறது. ஹரேஸ் சித்திக் போன்ற அரசியல் ஆர்வலர்கள், மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் முஸ்லிம்கள் குறைந்தபட்சம் 34 பிரதிநிதிகளை சட்டமன்றத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். எனினும், அரசியல் கட்சிகளால் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
11 முஸ்லிம்கள் மற்றும் 5 முஸ்லீம் அல்லாதவர்கள் உட்பட 16 வேட்பாளர்களுக்குச் சீட்டு வழங்கிய போதிலும், SDPI தேர்தலில் எந்த இடத்தையும் பெறவில்லை. நரசிம்மராஜா, புலகேசிநகர், மங்களூரு ஆகிய தொகுதிகளில் அவர்கள் கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள் என்று அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் வேட்பாளர்கள் யாரும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறவில்லை, மேலும் அவர்கள் இந்தத் தொகுதிகளில் மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் கணிசமான சதவீதத்திலிருந்தும், சட்டமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது, இது சமூகத் தலைவர்களிடையே கவலையை எழுப்புகிறது. மாநிலத்தின் பன்முகத்தன்மையைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(உதவி: The Cognate)