நடிகர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு, மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழாவை ரத்து செய்வதாக இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) அறிவித்துள்ளது.
முன்னர், இந்த விழாவானது இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகத்தில் (NMIC) ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா பாலஸ்தீன ஒற்றுமை மன்றம் இந்த புறக்கணிப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.
நடிகர்கள் நஸீருதீன் ஷா, ரத்னா பதக், சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ஜி. பரீக், ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் துஷார் காந்தி, இந்திய பாலஸ்தீன ஒற்றுமை மன்றத்தின் ஃபெரோஸ் மிதிபோர்வாலா ஆகியோர் இப்பிரச்சாரத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில், “NFDCஇன் இந்தத் திரையிடலானது, உலகம் முழுவதும் பார்க்க வெளிப்படையாக காஸாவில் படுகொலை மற்றும் இன அழிப்பு என இஸ்ரேல் போர்க்குற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் நடத்துவது வெட்கக்கேடானது” என்றும், பாலஸ்தீனத்தை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது என்பதை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) மற்றும் இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகம் (NMIC) ஆகியவற்றின் நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
NFDC, NMICஇன் இந்த இஸ்ரேலிய திரைப்பட திரையிடலை பற்றி குறைந்தபட்சம் சொல்வதானால் “மனிதகுல பொது வரலாற்றில் (Collective Human History) முற்றிலும் ஒழுக்கக்கேடான, அறமற்ற, மனசாட்சியற்ற, கேலிக் கூத்தாக்கப்பட்ட நீதி” என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை விசாரணைகளின் அடிப்படையில் “இஸ்ரேல் இனப்படுகொலை குற்றவாளி” என்ற உண்மையை அங்கீகரித்துள்ளன. மேலும், போர்க் குற்றங்களுக்கான விசாரணைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப் போவதாக ICC கூறியுள்ளது. “இதுபோன்ற வலுவான சான்றுகள் இருக்கும் நிலையில், NFDC உடனடியாக இஸ்ரேல் திரைப்பட விழாவை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.