ஹிந்துத்துவத்திற்கு எதிராக திரைப்படத்திலோ, பாடல்களிலோ, கவிதை வழியாகவோ, கட்டுரை வழியாகவோ தமது கருத்தை வெளிப்படுத்தி விட்டால் போதும் அந்த இயக்குனர்களையோ அல்லது பாடல் ஆசிரியர்களையோ, கவிஞனையோ, எழுத்தாளரையோ தமது நாவிற்கு ஏற்ப வசைப்பாடி தாக்கி துரத்தப்படும் நிலை நிலைநாட்டப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில் 2500 முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்த ஆட்சியாளர்களுக்கு முழுமையான நீதி கிடைத்து விடும் என்று எவ்வாறு கூற முடியும்?
“இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா சிறுபான்மையானதாக இருந்து பாதிக்கப்படுகிறார்கள்? சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் கூடத்தான் இந்த சமூகத்தில் கொல்லப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்தலாமே! ஏன் திரும்பத் திரும்ப இந்த முடிந்து போன விஷயத்தையே பேசிக் கொண்டு அரசியல் செய்கிறீர்கள்” என்று நல்லவர்களைப் போல வியாக்கியானம் பேசிக்கொண்டு வரும் மனிதர்களும் அங்கு இருக்கிறார்கள். இவர்களது நோக்கம் எல்லாம் “நடந்தது, நடந்து முடிந்து விட்டது, இனி மாற்றத்தை நோக்கி செல்லலாம்” என்பதுதான், ஏனெனில் இனக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இவர்களது ஆட்கள் இல்லையே.
வெறும் தலித் களும், கீழ் சாதியினரும் தானே பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இங்கு ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையினர், அவர்களது கையிலேயே யாருக்கு ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற பிரம்மாஸ்திரம் இருக்கிறது, முஸ்லிம்கள் இந்நாட்டில் பிறந்தாலும் இரண்டாம் தர குடிமக்கள் தான் என்ற கருத்தோட்டம் அம் மக்களிடையே வேகமாக பரவி இருக்க வேண்டும். அதனால் தான் இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும் அடுத்தடுத்த ஆட்சி வாய்ப்புகள் பாஜக ஆர் எஸ் எஸ் நபர்களுக்கு கிடைத்திருக்கிறது.
தன்மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தனது மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களாக மாற்றி அமைக்கும் சக்தி அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு கிடைத்திருக்கிறது. சூப்பர் ஹைவே என்று அழைக்கப்படும் நவீன சாலைகளும் குஜராத்தில் உண்டு, அதேசமயம் சுங்கவரி செலுத்த கூட பணம் இல்லாமல் சாலையோரத்தில் தலீத் மக்கள் நடந்து செல்லும் அவலநிலையும் அங்கு உண்டு.
ஹிந்துத்துவத்தை விடுங்கள், காந்தியத்தை பற்றி பேசினாலும் அம் மாநில மக்கள் மாறுவார்கள் என்று தோன்றவில்லை. அதற்காக முழு மாநில மக்களையும் குறை கூறுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள், அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரை பொறுத்தவரை தமிழ்நாட்டில் வாழக்கூடியவர்கள் தமிழர்கள். ஆனால் குஜராத்தில் வாழக்கூடியவர்கள் இந்துக்கள். ஏனெனில் குஜராத்தி என்ற பதத்தையே அவர்கள் மாற்றிவிட்டார்கள், குஜராத்தி = ஹிந்து என்பதுதான் மாநில அரசாங்கத்தின் இப்போதைய நிலை. அப்படி என்றால் முஸ்லிம்கள் யார்? முஸ்லிம் = பயங்கரவாதி தான் வேறென்ன? ஏனென்றால் குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் பாகிஸ்தான் எல்லைகளை கொண்டுள்ளன. இது மட்டுமா 2002 முஸ்லிம் படுகொலைக்கு பின் நடந்த போலி என்கவுண்டர் வழக்குகளில் எல்லாம் பெரும்பாலும் அடிபட்ட பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் தான்.
இதற்கு சோராபுதீன் ஷேக் மற்றும் ஹிஜ்ரத் ஜஹான் ஆகியோரின் வழக்குகளை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுத கடத்தல் பேர்வழி தாவூத் இப்ராஹீமின் கூட்டாளி என்றெல்லாம் இந்து மத வெறி கும்பலால் குற்றம் சுமத்தப்பட்டவர் சோராபுதீன் ஷேக். நரேந்திர மோடி குஜராத்திற்கு முதல்வராக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே இவர் சுரங்க அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர். ஆனால் 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு இவரை முஸ்லிம் தீவிரவாதியாகவும் நரேந்திர மோடியை கொல்லும் நோக்கத்தோடு சோராபுதின் குஜராத்திற்குள் நுழைந்ததாக இந்து மத வெறியர்களால் கதை பின்னப்பட்டது.
அவ்வாறே சோராபுதின் ஷேக் குஜராத் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு போலி மோதல் வழக்கில் கொல்லப்பட்டார். அவரது மனைவியும் அவர் போலவே விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டிருந்தார்.
தவறு செய்பவர்களை தண்டிப்பது நியாயமான ஒன்றுதான் என்றாலும், அவர் முஸ்லிம் என்பதற்காக போலி மோதல் வழக்கில் கொல்லப்படுவதும் அவர் முஸ்லிம் பயங்கரவாதி எனவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயம் தான் எனவும், நியாயம் கற்பிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல. குறிப்பாக மேல் தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் போலி மோதல் மூலம் தான் முஸ்லிம் தீவிரவாதத்தையும் கிரிமினல்களையும் ஒழித்துக் கட்ட முடியும் என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த கருத்து தான் ஒவ்வொரு போலி மோதல் கொலைக்கும் சமூக அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.
இஸ்ரத் ஜஹானின் வழக்கை எடுத்து பார்த்தால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
மகாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி மாணவியான இஸ்ரத் ஜஹான் 19 வயதே ஆன இளம் பெண். இவர் மோடியை கொல்லும் நோக்கத்துடன் குஜராத்துக்கு வருவதாக குஜராத் அரசின் புலனாய்வு பிரிவு தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாக இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது நண்பர் ஜாவேத் சேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும் மைய உளவுத்துறையாளும் குற்றம் சாட்டப்பட்ட அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் 2004 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அன்று குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இந்நால்வரும் பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா அமைப்பினைச் செய்தவர்கள், அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்து கொண்டிருந்த பொழுது அகமதாபாத் நகர குற்றப் பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர், அப்பொழுது நடந்த மோதலில் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் மாநில அரசு அறிவித்தது.
ஆனால் பாருங்களேன்! “இது ஒரு போலி மோதல் கொலை, அந்நால்வரும் மோதல் நடந்ததாக சொல்லப்படும் நாளுக்கு முதல் நாளே மிகவும் அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று செப்டம்பர் 2009 இல் அகமதாபாத் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இறந்து போன அந்நால்வரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்து இருக்கிறது.
குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே இஸ்ரத் முஸ்லிம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு விட்டதால் அக்குடும்பம் சமூகத்திற்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டு விட்டது. இஸ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் அடுத்த ஏழு ஆண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. இஸ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர மற்ற யாவரும் பள்ளி படிப்பை கூட முடிக்க முடியாமல் இடையிலேயே நின்று விட்டவர்கள். அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை.
“தனது மகள் தீவிரவாதி கிடையாது, ஏழ்மையில் வாடிய போதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் என கனவு கண்ட பெண், குடும்பத்தின் வறுமை காரணமாக கல்லூரியில் படித்துக் கொண்டு வேலைக்கு போய்க்கொண்டிருந்த அப்பாவி பெண்” என அன்றே கதறினார் இஸ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.
என்ன செய்ய? அவர் முஸ்லிமாக இருந்து விட்டாரே. ஒரு முஸ்லிம், தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு விட்டால் போதும், அவர் உண்மையிலேயே தீவிரவாதியா? அல்லது அப்பாவி முஸ்லிமா? என்று அறிவதற்கு உள்ளாகவே அவரது குடும்பம், சமூகத்துக்கு மத்தியில் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசு அதிகாரிகள் செய்யக்கூடிய அனைத்து சோதனைகளுக்கும் உட்பட வேண்டும். தான் பிறந்த இந்த சொந்த நாட்டிலேயே அந்நியர்களைப் போல நடத்தப்படும் சூழ்நிலைகளை காண வேண்டும். மதவெறி கும்பல்களின் மத வெறி பேச்சுக்கு ஆளாக வேண்டும். அதுமட்டுமின்றி “இஸ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்தார்” என்ற முன்னாள் உள்துறை அமைச்சர் ஜிகே பிள்ளை போன்றோரின் தரக்குறைவான கருத்துக்களை அவரின் தாய் காதில் கேட்டு தனது 19 வயதேயான செல்லப் பெண் நடத்தைக் கெட்டவளாக சித்தரிக்கப்படுகிறாளே என்று மனதிற்குள்ளேயே மனம் நோக குமுற வேண்டும்.
இஸ்லாமியன் என்றால் எப்பொழுதும் சமூகத்துக்கு முக்கியமாக இந்(து)தியர்களுக்கு ஆபத்தானவர்கள், அவர்களை எச்சரிக்கையோடு தான் அணுக வேண்டும், அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயங்கரவாதத்தோடு தொடர்பு வைத்திருக்கக்கூடும் என்ற கருத்தோட்டத்தை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைப்பதில் ஆர்எஸ்எஸ் கும்பலும் நரேந்திர மோடியும் முஸ்லிம், ஹிந்து, ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமலேயே பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.
பாகிஸ்தானோடு நீளமான எல்லையை குஜராத் கொண்டிருப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மோடியின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருப்பதாக ஒரு மாயை ஏற்படுத்தி குஜராத்தில் நடக்கும் ஒவ்வொரு போலி மோதல் கொலைகள் மூலமாக முஸ்லிம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டி நாட்டையே காக்க வந்த ஆபத்பாந்தவனாக மோடியை சித்தரிப்பதற்காக சில மக்களின் உயிர்களை காவு வாங்கி விடுகின்றனர்.
ஏனெனில் ‘பாதுகாப்பு இல்லாமல் வளர்ச்சி எப்படி இருக்க முடியும்’ என்று கேட்கிறார் மோடி.
2002 குஜராத் இனப்படுகொலைக்கு மிக முக்கிய காரணமே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தான். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி 59 பேர் இறந்து போயினர்.
இதைப்பற்றிய முக்கிய நிகழ்வுகளை அடுத்த கட்டுரையில் காண்போம்…
– முகமது சாதிக்