புகழ்பெற்ற அரசியலமைப்பு நிபுணர், வழக்கறிஞர் மற்றும் அரசியல் ஆய்வாளர் அப்துல் கஃபூர் நூரானி 29 ஆகஸ்ட் 2024 அன்று மதியம் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இஷா தொழுகைக்குப் பிறகு அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், உச்ச நீதிமன்றத்தின் பாபர் மசூதி தீர்ப்பு (2019) குறித்த புத்தக வேலைகளில் அயராது உழைத்து வந்ததாக அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, Frontline மற்றும் Dawn ஆகிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தவர், பிறகு நிலுவையில் உள்ள தனது படைப்புகளில் ஆற்றலைக் குவிக்க முடிவு செய்தார்.
அவரது இழப்பிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
“அரசியலமைப்பு கேள்விகள்” எனும் கட்டுரைகள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நூரானி அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்தன. Frontline இதழின் முன்னாள் ஆசிரியர் ரா. விஜயசங்கர், நூரானி அவர்களிடம் இருந்து வரும் கட்டுரைகளை இறுதி செய்வற்காக கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவருடன் உரையாடியுள்ளதாக தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ளார்.
கஃபூர் பாய் என்று தனது நண்பர்களால் அழைக்கப்பட்ட நூரானி, பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர் பிரச்சினையின் வரலாறு மற்றும் அரசியல், தீவிர வலதுசாரிகளின் அரசியல், இந்திய அரசியலமைப்பு கேள்விகள் மற்றும் இந்திய வரலாற்றில் அரசியல் வழக்குகள் பற்றிய ஒரு தொகுதி போன்ற முக்கிய தலைப்புகளில் விரிவான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார். தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியர் அவரை “பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர்” என்று அழைக்கிறார்.
தனது X தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, “ஏ.ஜி. நூரானி எனும் பெரும் அறிஞரை இழந்துவிட்டோம். நான் அவரிடமிருந்து அரசியலமைப்பு முதல் காஷ்மீர், சீனா பிரச்சினைகள் வரையும், அதுமட்டுமின்றி நல்ல உணவைப் பாராட்டும் பண்பு என நிறைய கற்றிருக்கிறேன். இறைவன் அவரை மன்னித்தருள்வானாக” என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு அஞ்சலிகள் குவிந்த வண்ணமிருக்க, நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. நூரானி, இந்திய ஊடகம் மற்றும் சட்டம் இரண்டிலும் அழிந்துவரும் ஒரு வகையினரை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதாவது, உண்மையை எடுத்துரைக்கக் கூடிய ஒருவராக இருந்தார். அதை நேர்த்தியாகவும், புரிந்துக் கொள்ளும் வகையிலும் எடுத்துரைத்தார். அது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சங்கடமானதாகவோ அல்லது விரும்பத்தகாததாகவோ இருந்தாலும் சரியே.
இவருடைய துல்லியமான தகவல்கள், ஆதாரங்கள், ஆவண காப்பகப் தரவுகள் போன்றவை மற்ற அறிஞர்களும் பின்பற்றும் வகையில் மிக உயர்ந்த தரத்தை கொண்டவை.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நூரானி, ஆவணக் காப்பகத் தரவுகளைக் கண்டறிந்ததனூடாக, வலதுசாரிகளால் பரப்பப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அகற்றுவதற்கான வழிகளை ஏற்படுத்தினார். குறிப்பாக, சட்டப்பிரிவு 370: ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு வரலாறு (Article 370: A Constitutional History of Jammu and Kashmir, Oxford University Press, 2011) எனும் இவரது ஆக்கம் சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற ஜனசங்க நிறுவனர்கள் கூட ஆரம்பத்தில் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டனர் என்பதை வெளிப்படுத்தியது. அதேபோன்று, பாபர் மசூதி இடிப்பில் பின்னணியில் உள்ள உயர்மட்ட அரசியல் அதிகாரத்தையும் அதன் முழுமையான செயல்திட்டத்தையும் அவரது பாபர் மசூதி சார்ந்த ஆக்கங்களில் முன்வைத்தார்.
பாபர் மசூதி இடிப்பு – ஒரு தேசிய அவமதிப்பு (Destruction of the Babri Masjid – A National Dishonour, Tulika Books, 2003) எனும் அவரது ஆக்கம், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை வரலாற்றை ஆராயும் வருங்கால அறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நூல், லிபர்ஹான் குழு அறிக்கை, 2010 சிவில் வழக்குகள் மீதான அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறுதியில் எந்தவித தண்டனையுமின்றி தப்பித்ததை குறித்தும் பகுப்பாய்வு செய்கிறது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் பாபர் மசூதி இடிப்பில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதையும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் எவ்வாறு இந்நிகழ்விற்கு உடந்தையாக இருந்தார் என்பதையும் எடுத்துக்காட்டியது.
பாபர் மசூதி குறித்த எந்த ஓர் ஆய்வும், இவருடைய இரண்டு தொகுதிகளைக் கொண்ட பாபர் மசூதி இடிப்பு – ஒரு தேசிய அவமதிப்பு என்ற மகத்தான படைப்பை குறிப்பிடாமல் முழுமையடைய முடியாது. இந்த புத்தகம் ஆவண காப்பகப் தரவுகளையும் அவருடைய சொந்த பகுப்பாய்வுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
நூரனியின் வாழ்வும் மரணமும், சிவில் சமூகத்தில் அவரது பங்களிப்பும் – விளிம்புநிலை மக்களாலும் அதிகாரத்திற்கும் ஒடுக்குதல்களுக்கும் எதிராக குரல் கொடுப்பவர்களாலும், நீதி மற்றும் அரசியலமைப்பின் இடைவிடாத பாதுகாவலராக அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் என்பதை நிரூபிக்கிறது. வாழ்க்கையின் பிற்பகுதியில் உயர் பதவிகளையோ அல்லது வெகுமதிகளையோ தேடிக்கொண்டிருப்போரிலிருந்து அவர் வேறுபட்டார். வாசகர்களாலும், பல தசாப்த கல்விப் பங்களிப்பில் அவருக்கு கடமைப்பட்டுள்ளவர்களாலும் கொண்டாடுவாராகவும் தனது மறைவின் மூலம் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியவராகவும் நூரானி இருக்கிறார்.
(ஆங்கில மூலம்: The Companion)
(தமிழாக்கம்: நேமத்துல்லா)