இந்தியாவுக்கென தனி மொழியோ, மதமோ, கலாச்சாரமோ கிடையாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட இந்தியா பன்முகத் தன்மையைக் கொண்டுள்ள பல மாநிலங்களின் ஒன்றியமே தவிர ஓர் நாடாக பதிவிடப்படவில்லை. மேலும், அதே தன்மையுடன்தான் இன்றளவும் இந்நாடு விளங்கி வருகிறது.
கடந்த சில காலங்களாகவே இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் சில பாசிச குழுக்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர். ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கருத்தாடலின் அடிப்படையில், இந்து ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று இந்துக்களின் பெயரைக் கொண்டு சங்பரிவார் போன்ற மதவெறிக் கூட்டம் விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சாதியைக் கூட ஒழிக்க முடியாத இந்த கூட்டம் ஒரே தேசக் கொள்கையை முன்வைத்து என்ன நாட்டப் போகிறது என்று புரியவில்லை.
அந்நிய ஆங்கிலேயனை விரட்ட தங்கள் உயிரைக் கொடுத்து போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தவர்களின் தியாகங்களை பாதுகாக்கவும், இந்திய குடியுரிமையையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற பெரியார், அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத் போன்ற பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தியாவை மீட்டெடுக்க பல மாணவர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதே பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை (PPAF) என்ற அமைப்பு. இந்த பாசிசவாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்து, இவர்களை நாட்டைவிட்டு துரத்தியடித்து, சமநீதிமிக்க சமூகமாக இந்தியாவை கட்டமைக்க வேண்டி, அதன் முதல் நிகழ்வாக தமிழ்நாடு முழுதும் விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர். மார்ச் 21 சென்னையில் துவங்கி மார்ச் 30 கன்னியாகுமரி வரை பேரணி தொடர் 10 நாட்கள் நடக்கவிருந்தது.
பல உயிர்களை காவுவாங்கி, நாட்டின் அமைதியை சீர்குலைத்த அத்வானியின் ரதயாத்திரை போலவே சில தினங்களுக்கு முன்பு சங்பரிவார் அமைப்பு மீண்டும் ஒரு ராம ராஜ்ய யாத்திரையை நாடுமுழுதும் நடத்த திட்டமிட்டது. தமிழகத்தில் அடிவைத்த அவர்களை எதிர்ப்பு குரலின் வாயிலாக விரட்டியடித்தது தமிழகம். கலவரத்தை தூண்டும் ராம யாத்திரைக்கு ஓடோடி அனுமதி வழங்கிய பாசிசத்தின் கைக்கூலியாக விளங்கும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், PPAF ஏற்பாடு செய்திருந்த “மதச்சார்பின்மைக்கான பேரணி” யை திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்தினம் காவல்துறை மூலம் அனுமதியையும், பாதுக்காப்பையும் மறுத்தது. உடனே PPAF அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் நீதிமன்றமும் காலம் கடத்திய நிலையில் நீதிபதி M. S. ரமேஷ் பார்வைக்கு வந்த வழக்கில், அனுமதி மறுக்கப்பட்டதின் காரணத்தை டிஜிபியிடம் அறிக்கையாக விரிவாக கேட்டறிந்தார். இப்பேரணியால் மாநிலத்தில் அமைதி சீர்குலையும் என்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுவர் என சாக்குபோக்கான காரணத்தை கூறியது சென்னை காவல்துறை.
கலவரம் தூண்டும் சங்பரிவாருக்கு கிடைத்த அனுமதி, ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாடுபடும் எம்நாட்டு இளம்படைகளுக்கு மறுக்கப்பட்டதே இந்த பாசிச கொள்கையின் ஊடுருவலை படம் பிடித்துக் காட்டுகிறது. PPAF ன் கடும் முயற்சிக்கு பின் மார்ச் 28 ல் காவல் துறையின் பாதுகாப்புடன் கூடிய பேரணிக்கான அனுமதியும், கிடைத்தது. திட்டமிட்டபடி 10 நாட்கள் ஏப்ரல் 1 சென்னையில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஐயாவின் கொடியசைவில் துவங்கப்பட்ட பேரணி ஏப்ரல் 2 ம் தேதி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, சோசியல் டெமாகிரெடிக் கட்சி, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற தோழமைக் இயக்கங்களின் தொண்டர்களோடு காஞ்சிபுரம், வாணியம்பாடி, கோவையைக் கடந்தது.
இந்த நாட்டின் தனித்துவத்தை காக்க பல சட்டப் போராட்டங்களுக்குப்பின் இந்த பேரணி நடைபெற்றுவருகிறது. இந்தியா எந்த இனத்தவருக்கும் சொந்தமானது கிடையாது. இந்த நாட்டிற்கே உண்டான மொழியை, கலாச்சாரத்தை, இறையாண்மையை, மதச்சாரபின்மையை, வாழ்வியல் உரிமையை காக்க கரம் கோர்ப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி தற்போது நடந்து வருகிறது.
நாட்டைத் துண்டாக்க ஒன்றிணையும் கூட்டத்திற்கு எதிராக, கரம் கோர்ப்போம்! அறம் செய்ய!
–முஹம்மது சர்ஜுன்.S, (B.A.,)