பல்லாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த மணிப்பூரில் மெய்தேயி சமூகத்துக்கும், குக்கி கிறித்தவச் சமூகத்துக்கும் இடையே கடந்த மே 3ம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை கட்டுப்படுத்தப்படாமல் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவே இந்தியாவில் 2000க்குப் பிறகு அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ள மூன்றாவது பெரும் வன்முறை வெறியாட்டமாகும்.
இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் எனக் கூறப்படுகிறது). 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து 350க்கு மேற்பட்ட முகாம்களிலும், வனப்பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான குழந்தைகள், மாணவர்கள் கல்வியை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், தேவாலயங்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் 70க்கும் மேற்பட்ட கட்டடங்கள், பள்ளிகள் தீயிடப்பட்டுள்ளன என்றும், நாற்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு இனக் கலவரங்களுக்கு மத வழிபாட்டுத் தலங்கள் இரையாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
மணிப்பூர் மாநிலம்
மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மியான்மார் எல்லைக்கு அருகிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய மாநிலம். (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) இதன் மொத்த மக்கள்தொகையே 30 லட்சத்திற்கும் குறைவு (28.56 லட்சம்) தான். அதில் 41.39% இந்துக்கள், 41.29% பழங்குடியின கிறித்தவர்கள். 8.40% சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், மதமற்றவர்கள். மொத்த மக்கள்தொகையில் 53% மெய்தேயினர். இவர்கள் மணிப்பூரின் ஆதிக்க சாதியினர். இவர்களில் 10% மதம் மாறிய கிறித்தவர்கள் மீதமுள்ளவர்கள் இந்துக்கள்.
எதற்காக இந்த வன்முறை?
மணிப்பூர் மாநிலம் 75% அடர்ந்த காடுகளையுடைய மலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமதளப் பகுதிகள் 10% மட்டுமே இருக்கிறது. மெய்தேயி சமூகத்தினர்கள் சமதளப் பகுதி(நகரங்)களில் வாழ்ந்து வருகின்றனர். அம்மாநிலச் சட்டப்படி மெய்தேயி சமூகத்தினரால் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியாது.
அதற்காகத் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டி மெய்தேயி சமூகத்தினர் ஏறத்தாழ 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அதற்குக் குக்கி சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். மணிப்பூரின் முன்னாள் முதல்வர்கள் பலரும் மெய்தேயி சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்த நிலையிலும் இந்தக் கோரிக்கையின் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இதைப் பெரிதளவு கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர்.
இந்நிலையில், அதுவரை மணிப்பூரின் ஆட்சிக் கட்டிலில் ஏறவியலாத பாஜக தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்தது. 2022 தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் மெய்தேயி மக்களைப் பழங்குடியினரின் பட்டியலில் இணைப்போம் என வாக்களித்தது. பின் அதனாலேயே ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்தது. அதன் பிறகு மெய்தேயிக்களின் இக்கோரிக்கையும் அதற்கான பழங்குடியினரின் எதிர்ப்பும் வலுக்கத் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் 19 அன்று மெய்தேயிக்கள் தொடர்ந்த வழக்கிற்குத் தீர்ப்பளித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் மாநில அரசை நான்கு வாரத்திற்குள் மெய்தேயி மக்களைப் பழங்குடியினரில் சேர்ப்பதைப் பரிசீலிக்கவும் அதை ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக அனுப்பவும் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து கடந்த மே 3 அன்று மாநிலம் முழுவதும் பல இடங்களில் குக்கி பழங்குடியின மாணவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஒற்றுமை அணிவகுப்புப் பேரணியை நடத்தினர். அதில் சுராச்சங்பூர் மாவட்டத்தின் டோர்பாங் பகுதியில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் வெடித்த வன்முறை அம்மாநிலம் முழுவதும் பரவியது. இதுவே மணிப்பூர் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி.
மற்றொரு கோணம்
ஏன் மணிப்பூரின் 75% நிலப்பரப்பை வெறும் 41% மட்டுமே இருக்கக்கூடிய பழங்குடியினர் மட்டும் பயன்படுத்தும் நிலை இருக்கிறது. அதனை அனைவரும் பகிர்ந்து பயன்படுத்திக் கொண்டாலே இந்த பிரச்சினைக்கான அவசியமே இருக்காதே என நீங்கள் கருதலாம்.
மலைப்பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகள்தான் அந்த 75% நிலப்பரப்பு. அதில் பல இடங்களில் சிதறி வாழும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலைதான் இருந்து வந்துள்ளது.
அதாவது கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும் அம்மக்கள் மெய்தேயிக்கள் வாழும் நகரப் பகுதிகளுக்கே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். விஷயம் என்னவென்றால் இத்தனை காலம், ஆட்சிகள் கடந்தும் அந்த குக்கி மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் இடத்திலேயேதான் வைக்கப்பட்டுள்ளனர். இதுவே அவர்கள் தங்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டான நில உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதன் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கு
மணிப்பூரில் மே 3ஆம் தேதி தொடங்கிய இந்த இனமோதல் பின் ஜாதி கலவரமாக மாறி தற்போது மதக்கலவரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்சனையின் ஆரம்பமான குக்கிகளின் அமைதி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தான் நடத்தப்பட்டது என்றும் அந்த அமைதிப் பேரணிக்குள் நுழைக்கப்பட்ட அடிப்படைவாதிகளாலேயே இந்த இனக்கலவரம் உருவாக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இக்கலவரத்தில் இரு பக்கமும் இழப்புகள் இருந்தாலும் குக்கி பழங்குடியினர் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வரலாற்றில் மிக அதிக நாள்கள் நடைபெற்றுள்ள மதக்கலவரங்களில் இந்த மணிப்பூர் கலவரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இதற்கு முன் நடைபெற்ற இதுபோன்ற பல கலவரங்களும் வெகு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. ஆனால் மாநில காவல்துறை, ராணுவப் படையினர், துணை ராணுவப் படையினர் என இவ்வளவு படைபலங்களை வைத்துக் கொண்டும் இந்தக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனச் சொல்வது அப்பட்டமான பொய்யாகவும் மத்தியிலும் அம்மாநிலத்திலும் நடைபெறும் மதவாத அரசினால் பழங்குடியின மக்களைப் படுகொலை செய்வதற்கான அரசின் அனுமதிச் சீட்டாகவே தெரிகிறது.
மணிப்பூர் பாஜக ஆட்சியின் முதல்வர் ஃபைரோன் சிங் கையறு நிலையில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது வெறும் கட்டமைக்கப்பட்ட பிம்பம் எனவும் முதல்வருக்கு இவ்வன்முறையைத் தடுப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லை எனவும் அவர் பழங்குடியினருக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டுள்ளவர் என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஒன்றிய அரசும் மாநில அரசும் நினைத்திருந்தால் இக்கலவரத்தை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் அக்கலவர நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டுருக்கின்றனர்.
இந்த இனக்கலவரத்தில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில் கூட அதைக் குறித்த எள்ளளவு கவலையும் இல்லாமல் ஆளும் ஒன்றிய அரசு தனது மொத்த ஆற்றலையும் கலவரத்தை அடக்கப் பயன்படுத்துவதற்கு மாறாகக் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்கே பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு ஒரு மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதைக் கண்டுகொள்ளாமல் மற்றொரு மாநிலத்தின் தேர்தல் பரப்புரைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?
கர்நாடகத் தேர்தலை முடித்துவிட்டு சாவகாசமாக மணிப்பூர் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கலவரம் உடனடியாக கட்டுக்குள் வந்துவிடும் எனச்சொல்வதற்கு மாறாகக் கலவரம் 15 நாள்களில் அமைதி நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இவ்வளவு பெரிய நாட்டில் மாபெரும் படைகளை வைத்துக் கொண்டு சிறிய மணிப்பூர் மாநிலத்தின் இனக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர 15 நாள்கள் ஆகும்! என அமித்ஷா சொன்னது அவர் கலவரத்தைக் கட்டுப்படுத்தச் சென்றதாகத் தெரியவில்லை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றவே சென்றிருக்கிறார் போலும்! என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். (ஆனால் அவர் சொன்ன பதினைந்து நாள்களையும் தாண்டி வன்முறை வெறியாட்டங்கள் தற்போது வரை (இரண்டு மாதங்களுக்கும் மேல்) நடந்து கொண்டிருக்கிறது என்பது வேறு!)
வன்முறைகள் இவ்வளவு நாள்களாக நடந்துள்ள நிலையில் துருக்கியின் நிலநடுக்கம், குஜராத்தின் புயல் உள்ளிட்ட பல விசயங்களை தன்னுடைய மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்த வன்முறையைப் பற்றி எங்கும் வாயைத் திறக்கவே இல்லை. மேலும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையைக் குறித்துப் பேச வேண்டி அனுமதி கோரிய நிலையில் அதைப் புறந்தள்ளிவிட்டு அமெரிக்காவிற்குப் பறந்திருக்கிறார். அவர் இன்னும் இந்த இனக் கலவரத்தைப் பற்றியும் அதைத் தடுப்பதைக் குறித்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆளுங்கட்சியையும், பிரதமரையும், ஒன்றிய அரசை விமர்சித்தும், காஷ்மீர் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றியும் வரக்கூடிய விஷயங்கள் அது உண்மையாக இருப்பினும் சரியே அவை அனைத்தும் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் பல அங்கீகரிக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள் உட்படப் பலர் தொடர்ந்து குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்துவரும் வெறுப்புப் பரப்புரைக்கு எதிராக எவ்வித தணிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஒன்றிய அரசிற்கு இவ்வெறுப்பு நெருப்பை அணைப்பதில் துளியளவும் ஆர்வம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே இந்நிகழ்வுகள் உள்ளன.
இன்னும் இந்தக் கலவரம் ஒன்றிய, மாநில அரசின் உதவியுடனே நடக்கிறது என்பதனை நிரூபிக்கும் விதமாகப் பல ஆதாரங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
மீண்டும் திரும்புமா அமைதி நிலை?
இந்தக் கலவரங்கள் இரு சமூகங்களுக்கிடையேயான நிரந்தர பகைமைக்கு வழிவகுத்துள்ளன. மணிப்பூர் மக்கள் தங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் உடனடியாக அரசிடமிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதன் விளைவுகள் எண்ணவியலாத அளவிற்கு இருக்கும் எனவும் சமூக வலைத்தளங்களில் கதறி வருகின்றனர். ஒன்றிய அரசும் அம்மாநில அரசும் இணைந்து உடனடியாக இக்கலவரத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.