சுதந்திர தாகம் இல்லாத அடிமை எண்ணம் கொண்ட ஒருவன் அடிபணிய வேண்டும் என்றே காத்திருப்பான். அதனால்தான் சாதியால் பிளவுபட்டு அடுக்கடுக்காகத் தங்களை அடிமைகளாகப் பாவித்தவர்களை அடிபணிய வைப்பது என்பது ஆங்கிலேயர்களுக்கு அவ்வளவு கடினமான காரியமாக தோன்றியிருக்காது. ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பற்றவைத்த சுதந்திர தீ ஆங்கிலேயர்களைத் திக்குமுக்காட செய்ததை வரலாறுகள் இன்றும் நினைவுகூறுகின்றன. தங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர்களைப் படுகொலை செய்தபிறகும், அவர்கள் சுதந்திரத்தின் மீது கொண்ட காதலின் மீதான பயத்தினால் அவர்களின் உடல்களைப் பல கூறுகளாகப் பிளந்து எங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று மக்களுக்குத் தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும் பல்வேறு போராட்டங்களை மதக்கலவரமாக, இனக்கலவரமாக பதிவு செய்தது ஆங்கிலேய அரசு ஆனால் அதையும் தாண்டி மதங்களையும் இனங்களையும் கடந்து ஒற்றுமையாகப் போராடி சுதந்திரத்தை இந்தியா சுவாசித்தது.
அப்படி சுதந்திரத்தை சுவாசிக்கப் போராடியவர்களைக் காற்றைக்கூட சுவாசிக்க அனுமதிக்காமல் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட மாப்பிள்ளாமார்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுத்து மாப்பிள்ளா புரட்சியின் நூறாவது ஆண்டை வெற்றிகரமாகக் கேரள மக்களிடம் பதிவு செய்திருக்கின்றது SIO கேரளா குழு.
“மலையாள கரைதனிலே ரத்த ஆறு ஓட்டம்; மாப்பிள்ளைமார் செய்தது வீரமிக்க தியாகம்.” என்று இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் பாடல் ஒன்றை நாம் கேட்டிருப்போம். ஆம் வீரமிக்க தியாகத்தின் நூறாவது ஆண்டு இது.
1921- ஆம் ஆண்டு மலபார் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடன் மலபாரின் முஸ்லிம் மார்க்க மேதைகள் மலபார் பகுதியை “தாருல் ஹர்ப் – போராடும் பகுதி” என்ற மார்க்க அறிவிப்பினை செய்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத் தாகத்தோடு போராடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு வல்ல அல்லாஹ்வால் சுவனம் பரிசாக வழங்கப்படும் என்றும் செய்யது அலி தங்கள், அவரது மகன் செய்யத் பைசல் மேலும் பரீகுட்டி முஸ்லியார் ஆகியோர் மார்க்கத் தீர்ப்பு வழங்கினர். இந்த மார்க்கத் தீர்ப்புகள் ஆங்கிலேயர்களைக் குலைநடுங்கச் செய்தது. மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்ட அந்த பத்வாக்களை தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த பத்வாக்களை யார் வைத்திருந்தாலும் அவர்களுக்கு எந்த விசாரணையுமின்றி 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மெட்ராஸ் கெஜட்டில் ஆங்கிலேயர்கள் அறிவித்தனர்.
இந்த நேரத்தில் மார்க்க அறிஞரான அலி முஸ்லியார் தலைமையில் கேரளாவில் தனி ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டு கிலாபத் ராஜ்யமாக அறிவிக்கப்பட்டது. தனிக்கொடி, தனி நாணயம் என கிலாபத் ராஜ்யம் வலுவானதாக உருவாக்கப்பட்டது. மலப்புரம், பொன்னானி, திரூரங்காடி, பெருந்தள்மனா போன்ற 22 ராஜ்ஜியங்கள் அலி முஸ்லியர் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்களை எதிர்க்க தனி ராணுவவம் அலி முஸ்லியார் அவர்களின் தலைமையில் தயார்செய்யப்பட்டது.
கிலாபத் ராணுவத்திடம் மோதிய ஆங்கிலேயப் படை பலமுறை தோல்வியைப் பரிசாகப் பெற்று அவமானமடைந்தனர். இதனால் நயவஞ்சமாக மதக்கலவரம் ஒன்றை நடத்தி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தினர். இதனால் கிலாபத் இயக்கத்திலிருந்து இந்துக்கள் வெளியேறினர். இதனைத் தடுக்க தமிழகத்தை சேர்ந்த ராஜாஜி, மௌலானா யாகூப் ஹாசன் ஆகியோர் கேரளா விரைந்தனர். ஆனால் அவர்கள் மலபார் வர தடை விதித்தது ஆங்கிலேய அரசு. அலி முஸ்லியார் ராணுவத்தை அடக்கிட “மாப்பிள்ளை அவுட்ரேஜ் சட்டம்” “மாப்பிள்ளா கத்திச்சட்டம்” என்ற இரண்டு கடுமையான சட்டங்களை ஆங்கிலேயே அரசு அமல்படுத்தியது.
இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் பேர் நாடு கடத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மாப்பிள்ளைமார்கள் பலர் திரூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த கூட்ஸ் ரயிலில் கொத்துக்கொத்தாக மூட்டைகள் போன்று அடைத்து கோவைக்கு அனுப்பப்பட்டனர். ரயிலுக்குள்ளே பசி, தூக்கம்மின்மை, மூச்சுத்திணறல், நெரிசல் எனப் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த மாப்பிள்ளைமார்கள் ரயிலுக்குள்ளேயே வீரமரணம் அடைந்தார்கள். சோகத்தை சுமந்து வந்த அந்த கூட்ஸ் ரயிலின் கதவுகள் திறக்கப்பட்டபோது கோவையில் ரத்த வாடையும், பிணங்களும் வெளியே விழுந்தன. பலர் உயிருக்குப் போராடினார்கள். ஷஹீதானவர்கள் கோவை ரயில் நிலையத்தின் அருகே உள்ள பள்ளிவாசல்களிலும், திருச்சி காஜாமலை கபர்ஸ்தானிலும் அடக்கம் செய்யப்பட்டனர்.
அலி முஸ்லியர் அவர்கள் கோவை சிறையில் 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று தூக்கிலிடப்பட்டார். அலி முஸ்லியார் அவர்கள் கைது செய்யப்பட்டதும், பள்ளிவாசல்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதும் வாரியம் குன்னது குஞ்சா முஹம்மது ஹாஜி என்ற இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரனைக் கோபமடையச் செய்தது. சுல்தான் வாரியம் குன்னத் அவர்கள் கிலாபத் ராஜ்ஜியத்தின் புதிய அடையாளமானார். மலபாரின் சில சிப்பாய்களின் உதவியோடு தனி ராணுவத்தையும், தனி கிலாபத் ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார்.
நீலம்பூரைத் தலைமையிடமாக கொண்டு மலபார் மாவட்டத்தின் பெரும்பகுதி சுல்தான் வாரியம் குன்னத்தின் கிலாபத் ஆட்சிக்குக் கீழ் வந்தது. இந்து, முஸ்லீம் ஒற்றுமையின் வலிமையை நன்கு உணர்ந்து இருந்த சுல்தான் அவர்கள் இந்துக்களையும் ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்ட படையை உருவாக்கினார். தனியே பாஸ்போர்ட், நாணயம், வரி விதிமுறை என தனி ராஜ்ஜியம் உருவானது. ஆனால் ஆறு மாதங்களே கிலாபத் ஆட்சி நிலைத்தது. நேராக சண்டையிட திராணியற்ற கோழை பிரிட்டிஷார், வஞ்சகமாக உன்யான் என்ற துரோகியின் மூலம் ஜனவரி 1922 ஆம் ஆண்டு சுல்தான் வாரியம் குன்னத் அவர்களைக் கைது செய்தது. பிரிட்டிஷ் நீதிபதி சுல்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.
சுல்தான் வாரியம் குன்னத் அவர்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கண்களைத் துணியால் மூட முற்பட்டபோது அதனை வேண்டாம் எனத் தடுத்து, தன்னைச் சுடுவதைத் தான் காண வேண்டும் எனக் கூறினார். சுடப்படும் பொழுது “லாயிலாஹ இல்லல்லாஹ்; முஹம்மது ரசூலுல்லாஹ்” என்ற புனிதமான வார்த்தைகளைக்கூறி ஷஹீத் என்னும் வீர மரணம் அடைந்தார். அவருடைய தோழர்களும் அதே இடத்தில் சுடப்பட்டனர். அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் சுதந்திரத்தின் அணையா வேள்வியாக மாறும் என்று அஞ்சி ரகசியமாக வைக்கப்பட்டது. கிலாபத் ராஜ்ஜியம் தொடர்பான அத்தனை தகவல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மக்களின் மனங்களில் இருந்தும் மறக்கடிக்கப்பட்டன.
மறைக்கப்பட்ட மாப்பிள்ளாமார்களின் வீர வரலாற்றினை நம் கண்முன்னே கொண்டு நிறுத்த SIO கேரளா தனியே மொபைல் ஆப் (செயலி) ஒன்றை தயார் செய்து வெளியிட்டு இருக்கின்றார்கள். ஆங்கிலம் மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கும் இந்த மொபைல் செயலி வரலாற்றின் பொக்கிஷமாக தயார் செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளாமார்களின் தியாக வரலாற்றை இன்னும் தெளிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
சபீர் அஹமது – எழுத்தாளர்