அப்பாவி மாணவர்களை நக்சலைட் தீவிரவாதிகள், காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றெல்லாம் முத்திரை குத்துபவர்கள், இந்தப் பதிவு போட்டதற்காக என்னையும் பயங்கரவாதி என்று சொல்லி, என் வாழ்வைக் கேள்விக்குறியாக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர் போராட்டம் பற்றி
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி ஜர்னலிசம் மாணவர்களின் போராட்டம் போய்க்கொண்டுள்ளது. துறைத் தலைவர் (HOD) கோ.ரவீந்திரன் அவர்களின் பாடங்களுக்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவேண்டும், விசாரணை கமிட்டி ஒன்று அமைத்து இதழியல் துறையிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்பனவே மாணவர்களின் கோரிக்கைகள். இந்த இரண்டு கோரிக்கைகளில் விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதித்துள்ளது. விசாரணை கமிட்டி அமைப்பதற்கு இன்னும் முன்வரவில்லை.
இதழியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மூவர் மட்டுமே போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இங்கு குறிப்பிடவேண்டியது, போராடும் மாணவர்களில் ஒருவர் துறைத் தலைவர் ரவீந்திரன் சாரின் பாடங்களில் 47 மற்றும் 48 பெற்று தோல்வி அடைந்தவர். அவர்களில் இன்னொருவர் ஒரு பாடத்தில் 47 எடுத்தவர். 50 எடுத்தால் பாஸ் என்கிற நிலையில் இந்த மாதிரி இரண்டு, மூன்று மதிப்பெண் இடைவெளியில் Fail ஆக்கியதை திட்டமிட்டு அவர் செய்ததாகவே போராடும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடைபெற்றுவரும் போராட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களில் (நான் உட்பட) யாரும் நேற்றுவரை கலந்துகொள்ளவில்லை. நிலைமைகள் மோசமாகிக் கொண்டே போகின்றன. அதில் எங்களையும் இணைத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. பேரா. ரவீந்திரன் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள முற்றம் கலைக்குழுவினர் போராடும் மாணவர்களை முதலில் ஒழுக்கங்கெட்ட மாணவர்கள், நக்சலைட் தீவிரவாதிகள் என்று துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்கள். அதில் பல்கலைக்கழகத்துக்கே ஆபத்து என்றெல்லாம் அபத்தமாகக் குறிப்பிட்டிருந்தனர்.
பிறகு ரவீந்திரன் சாரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயலும் வெளி அமைப்பினர் என்று நோட்டீஸ் வெளியிட்டார்கள். இப்போது பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள Syndicate தேர்தலை முன்னிட்டு சில ஆசிரியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இவைதான் பதில்கள்.
இது தவிர, போராடும் மாணவரில் ஒருவர் விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக இருப்பதால், விகடனுக்கு துறைத் தலைவர் ரவீந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். “Anti-Social Protest”ல் அந்த மாணவன் கலந்துகொள்வதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் ‘முற்போக்காளரின்’ செயலா என்று கேட்கத் தோன்றுகிறது. அவரின் மேல் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் சமூக விரோத போராட்டமா?
ஊடகத்தில் இனி இந்தப் போராட்டம் குறித்த செய்தி வெளியாகாதவாறு தனது செல்வாக்கையும் நற்பெயரையும் பயன்படுத்தி பேரா. ரவீந்திரன் பார்த்துக்கொள்கிறார். போராடும் மாணவர்களோ என்னைப் போன்றோரோ அவரைப் போல எவ்வித செல்வாக்கும் அதிகாரமும் இல்லாத சாமானியர்கள்.
இதழியல் துறையிலுள்ள பிரச்னைகள் தொடர்பாக ஒரு மாதத்துக்கு முன்பே முதலாம் ஆண்டு மாணவர்கள் ஏழு பேர் துணை வேந்தருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். இதை துறைத் தலைவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியிலோ அவரை எதிரியாகக் கருதியோ காசு வாங்கிகொண்டோ செய்யவில்லை. நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு சுமூகமாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே செய்தோம். அப்போதே எங்களை அழைத்து HOD பேசியிருக்கவேண்டும். இது போராட்டமாக உருமாற அவரே முழுமுதற் காரணம்.
சென்னைப் பல்கலை ஜர்னலிசம் துறையில் நிலவும் பிரச்னைகளில் சிலவற்றை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவர நினைக்கிறேன். எங்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
* கடந்த செமஸ்டரில் எங்களின் துறைத் தலைவர் கோ. ரவீந்திரன் அவர்கள் News editing and writing பாடமும், Print Journalism I பாடத்தின் ஒரு பகுதியும் எடுத்தார். இந்த இரண்டு பாடங்களுக்கும் சேர்த்து, வெறும் 7 வகுப்புகள் மட்டுமே நடந்தன. இது முதல் சிக்கல். வகுப்புக்கு வெளியே அவர் ஜர்னலிசம் கற்றுத் தருவதாக சிலர் கருதுகின்றனர். அப்படி செய்தால் வரவேற்கவேண்டிய நல்ல விஷயம். ஆனால் ரவீந்திரன் சாரின் Presenceகூட இல்லை என்பதே நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அவர் வழிநடத்தும் முற்றம் கலைக்குழுவில் இணையும் மாணவர்களுக்கு நாட்டார் கலைகள் சொல்லித் தருவார்கள். அது Non Academic. என்னைப் போன்ற பலர் அதில் இல்லை. சிலர் அதை வகுப்பாகக் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.
* அடுத்து, பாடத்திட்டம் சார்ந்து மிகவும் சொற்பமான அளவில்தான் அவர் வகுப்பெடுத்தார். அதே சமயம், Internal & Semester தேர்வுகளின் கேள்வித்தாள்கள் பாடத்திட்டத்துக்கு உட்பட்டோ அல்லது அவரின் வகுப்புகளை ஒட்டியோ தயாரிக்கப்படவில்லை. தேர்வுக்குப் பின் கேள்வித்தாள்கள் திரும்பப்பெறப்பட்டன. அதற்கு என்ன காரணம்?
* செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் சுமார் ஒன்னரை மணி நேரம் தாமதமாக வந்தது. அதுவரை மாணவர்கள் அனைவரும் தேர்வறையில் காத்திருந்தோம். இதை நாங்கள் கேள்வி கேட்பது மாபாதகச் செயலா?
* Internal தேர்வுகளின் விடைத்தாள்கள் எங்களிடம் காண்பிக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி. ஆனால் அவை காண்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால், எங்களின் மதிப்பெண் பட்டியலைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. Internal மற்றும் செமஸ்டர் விடைத்தாள்களையும் மதிப்பெண்களையும் பார்ப்பதற்கு பலமுறை அலைக்கழிக்கப்பட்டோம். கடைசியில், News editing and writing பாடத்துக்கான விடைத்தாள்களை மட்டும் பார்த்தோம். நானும் எனது நண்பரும் மதிப்பீட்டில் திருப்தியில்லை என்று அதில் எழுதிக் கொடுத்து வந்துவிட்டோம்.
இப்போது இவ்வளவு அக்கப்போர் நடந்துகொண்டுள்ளது. இந்த நிமிடம்வரை, ரவீந்திரன் சாரின் Print Journalism I பாடத்தில் தங்களின் மதிப்பெண் என்ன என்பது என் வகுப்பில் யாருக்கும் தெரியாது. விடைத்தாளும் இப்போதுவரை காண்பிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்?
எங்கள் துறையிலுள்ள பிரச்னைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து எங்களுக்குத் தீர்வு கிடைக்க வழிவகை செய்யவேண்டும். எங்களின் அச்சம் நீக்கி, படிப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தரவேண்டும்.
Ahamed Rizwan