சென்னை ஐஐடியில் சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பல்வேறு பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், அதனை முற்றிலும் மறுத்துள்ளார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஜூலை 19 அன்று மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு, ‘சென்னை ஐஐடியில் சாதி மத ரீதியாக எந்த பாகுபாடும் நிலவவில்லை’ என்றார் அமைச்சர்.
2019ம் ஆண்டு பல்கலைக்கழக ஹாஸ்டலில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடிக்குள் நிகழும் அடக்குமுறைகள் முக்கிய பேசுபொருளானது. இதனைக் குறிப்பிட்டு டிஆர் பாலு எழுப்பிய கேள்விக்குப் பொறுப்பற்ற பதிலைத் தெரிவித்துள்ளார் அமைச்சர். ‘மாணவர்கள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனையைத் தீர்க்க மேலதிக வகுப்புகள் மெட்ராஸ் ஐஐடியில் செயல்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் 24 மணிநேர ஆலோசனை மையமும் பயன்பாட்டில் உள்ளது’ என்றார். பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக நேரடியாகப் பதிலளிக்க மறுத்த அமைச்சர், ‘மாணவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க அங்கு முழுநேர மருத்துவமனை உள்ளது. புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு புதிய சூழலை ஏதுவாக அமைத்துதர ஆலோசனைக் குழுக்களும் உள்ளது’ என்று கூறுவதோடு நிறுத்திக்கொண்டார்.
சமீபத்தில் சாதிய ஏற்றத்தாழ்வைக் காரணம் காட்டி பணிவிலகிய பேராசிரியரைப் பற்றிக் குறிப்பிட்ட பாலு, மாணவர்கள் ஆசிரியர்கள் தொடங்கிப் பிற பணியாளர்கள் வரை பட்டியல் இனத்தவர்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் குறிவைத்து அடக்கும் வன்மமான பல்கலைக்கழக சூழலைக் கருத்தில் கொள்ளவும் இதுகுறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரினார்.
ஐஐடி சட்டம் 1961, பிரிவு 7 (1) ‘எந்த பாலினத்தவராயினும் சாதி, மதம், நம்பிக்கை, கொள்கை, வர்க்க நிலையுடையவராயினும் அவர்களுடைய தனிப்பட்ட பண்பு நலன்களைக் காரணம் காட்டி, எவ்வித ஏற்றதாழ்வும் இன்றி அனைவரும் அனுமதிக்கப்படுவர்’ என்பதை மேற்கோள் காட்டிய அமைச்சர் நிழவும் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டேங்கிறார். அகில இந்திய பிற்படுத்தபடுத்தப்பட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கிரண் குமார் இதற்குப் பதிலளிக்கையில் ‘ஐஐடியில் சாதி மத ஏற்றத்தாழ்வு இல்லையெனில் ஏன் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டும் குறைவாக இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்று எனில் எது எங்களை ஏற்றதாழ்வின் அடிப்படையில் துண்டாடுகிறது’ எனக் கேட்டார்.
கடந்த மாதம் மெட்ராஸ் ஐஐடியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த விபின் என்பவர் சாதி ஏற்றத்தாழ்வைக் காரணம் காட்டி பணியிலிருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதவியல் பேராசிரியர் விபின் கடந்த 2019ம் ஆண்டு ஐஐடியில் பணியில் சேர்ந்தார். பட்டியலின மற்றும் ஓபிசி பேராசிரியர்கள் மீதான பாரபட்சத்தைக் கூறிய விபின் ஒருசில தனிநபர்கள் அதிகாரத்தின் மேலே இருந்துகொண்டு ஆட்டுவிப்பதாக’ தனது கடிதத்தில் எழுதினார். முஸ்லீம் என்பதால் துன்புறுத்தப்பட்டு தற்கொலைக்குப் பலியான பாத்திமா லத்திப்பும் இதே மனிதவியல் துறை மாணவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தற்கொலை தொடர்பான சிபிஐ விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. அதேநேரத்தில், மெட்ராஸ் ஐஐடிக்கு வருகை தந்து ஆய்வுப்புரிந்த தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் அருண் ஹால்டர், ‘மெட்ராஸ் ஐஐடியில் சாதிய பாகுபாடு நிலவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறியதுதான் காலத்தின் துயர்.
Source: English Madhyamam
தமிழில் – அஜ்மீ