பெண்கள் தினம் அனுசரிக்க ஆரம்பித்து நூறு வருடங்களை கடந்தாகிவிட்டது. இந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அவர்களுக்குரிய இடத்தை சமுதாயத்தில் அடைந்துவிட்டனரா என்ற கேள்வியை கட்டாயம் நாம் கேட்கத்தான் வேண்டும். பெண்கள் சமுதாயத்தின் பிரிக்க முடியா அங்கங்கள். ஒரு சமுதாயம் மாற்றம் காண வேண்டும் என்றால் அச்சமுதாயத்தில் உள்ள ஆண், பெண் என தனிநபர்களிடத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம். அதிலும் குறிப்பாக ஆணிடம் ஏற்படும் மாற்றம் அந்த ஆணுடனேயே அடங்கிவிடும். ஆனால் ஒரு பெண்ணிடம் ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுகின்றது என்றால் அவளுக்கு அடுத்து வரும் தலைமுறையினையே அம்மாற்றம் கவ்விப்பிடித்துக் கொள்ளும் என்பதுதான் நிதர்சனம்.
இன்று நாம் ஆண்களை மையமாகக் கொண்ட சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக்கூட பெறவிடாமல் தடுக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்துள்ளனர். அவற்றை மீட்பதற்காக பெண்களும், பெரியார் போன்ற போராளிகளும் நிறைய உழைத்துள்ளனர். விளைவு நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களை, உரிமைகளைப் பெற்றுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக அசுர வளர்ச்சியினை பெண்கள் அடைந்துள்ளதை மறுக்க முடியாது. கல்வி கற்பதிலிருந்து காமிரா பிடிப்பது வரை எல்லா வகையிலும் சமுதாயத்தில் பெண்கள் கோலோச்சியுள்ளனர்.
ஆனால் இன்றும் பாரத தேசத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்க வன்முறை வக்கிரங்கள் குறையவில்லை. இத்தகைய அத்துமீறல்களுக்கு உடனடி கடுமையான தண்டனைகளும் நம் சட்டத்தால் வழங்கமுடியவில்லை என்பது சோகத்திலும் சோகம். நியாயமாக கிடைக்க வேண்டிய இட ஒதுக்கிட்டிற்காக கால் நூற்றாண்டாய் கத்திக்கொண்டிருக்கிறோம்.குறைந்தபட்சம் வாக்குறுதிகளிலாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லை. பாரதப் பிரதமரின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா செயல்படுத்ப்படும் அதே வேளையில் 90% அரசு பெண்கள் பள்ளியில் சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லை. மாநில முதல்வர்களாக பெண்கள் உள்ள மாநிலங்களில் கூட பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக பெண்களை வியாபார பண்டங்களாக்க முயலும் ஊடகங்கள் அதன் மூலம் வக்கிர புத்தியுள்ள ஆண்களுக்கு தூபம் இடுகின்றன.
அதே வேளையில் பெண்கள் பெற்றுள்ள இந்த உரிமைகள் நியாயமாக பெண்களிடமிருந்து சமூகம் வைக்கும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்திருக்கின்றனவா என்ற கேள்வி நம்முன் எழாமல் இல்லை.
கல்வி கற்பதன் மூலம் தனது சந்ததியினை அறிவுடையவர்களாக உருவாக்க முடிகின்றது. சொத்துரிமை மூலம் தனது முதிய வயதில் பாதுகாப்பாக வாழ முடிகின்றது. வேலைக்கு செல்வதன் மூலம் சமூகத்தில் சொந்தக் காலில் நிற்க முடிகின்றது. பேச்சுரிமை எழுத்துரிமை மூலம் தன் கருத்தை சமூகத்தின் மத்தியில் பதிய வைக்கமுடிகின்றது. எல்லாமே ஒப்புக்கொள்ளப்பட வேண்டியவை.
இவையெல்லாம் பெண்ணை மதிப்பிற்குரியவளாய் காட்டும் வேளையில் மறுபுறம் அந்த மதிப்பைக் குலைக்கும் செயல்களும் அரங்கேறத்தான் செய்கின்றன.
பெண்கள் பெற்றுள்ள இந்த உரிமைகள் அவளை சமூகப் பொறுப்புள்ளவளாக மாற்றுவதற்கு பதிலாக சமூகக் கட்டமைப்புகளை எடுத்தெறிபவளாக மாற்றியுள்ளது. சமுதாயம் பெண் மீது வைத்திருக்கும் நியாயமான எதிர்பார்ப்புகளை அடக்குமுறையாகவும் ஆணாதிக்கமாகவும் கருதும் மனப்பாங்கு இன்று பெருகிவிட்டுள்ளது. தன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருதும் கணவனை ஆதிக்கவெறி பிடித்தவனாக சித்தரிக்க முயல்வதும் பெண்ணின் சமூகக் கடமைகளை வலியுறுத்துபவர்களை அடிப்படைவாதிகளாக காட்டுவதும் இன்று பெருகிவிட்டது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி அறிவு அவள் தன் பிள்ளைகளை சமுதாய துயர்நீக்கிகளாக கட்டமைக்க பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று தான் கற்ற கல்வி மூலம் பெற்ற வேலையைக் காரணம் காட்டி பிள்ளைகள் பெறுவதையே பாரமாகக் கருதும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களின் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான முறையில் பயன்பட வேண்டும் என்பதற்காக. ஆனால் இன்று பெண்ணியம் பேசும் பெரும்பாலானவர்கள் அந்த உரிமைகளை சமுதாயத்தில் நச்சு விதைக்கவே உபயோகப்படுத்துகின்றனர். மிகச்சிறந்த குடும்ப அமைப்பை உருவாக்குவதற்காக வழங்கப்பட்ட உரிமைகளை அந்த குடும்ப அமைப்பையே அறுத்தெறியும் திருமண மறுப்புக்கு போராடுவதற்கு பயன்படுத்துகின்றனர். தாய்மையை புறக்கணிக்கின்றனர். பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் தவறான பழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
புயலாக மாறிவிட்டுள்ள தென்றல்களையும் படிதாண்டி வந்துவிட்ட பாரதியின் புதுமைப் பெண்களையும் பெற்றுவிட்ட சமுகம் பாரதிதாசன் வர்ணித்த குடும்ப விளக்குகளை இழந்துவிட்டோமோ என்ற அச்சம் ஏற்படாமல் இல்லை.
எந்த திரைப்படத்திலாவது அரைகுறை ஆடையுடன் பெண்களைக் காட்டுவதை பெண்ணுரிமை என்று கூறியிருக்கின்றார்களா? படத்திற்கு வியாபாரம் கூட்டவே கவர்ச்சி காட்சிகள் வைக்கப்படுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக நம் பெண்ணியவாதிகள் அதனை பெண்ணுரிமை என்று தூக்கிப்பிடிப்பது நகைமுரணாக உள்ளது. சமூகத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு திரைப்படங்கள் முழுமுதற்காரணமாக இருக்கின்றதென்பதை மறுக்க முடியாது. ஆனால் இதனை எதிர்த்துப் போராட வேண்டிய பெண்கள் எதிர்ப்பவர்களை ஆணாதிக்கவாதிகள் என்று கூறுவது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. பெண்கள் நாட்டின் கண்கள். வலிமையான தேசத்தைக் கட்டமைக்கும் சிற்பிகள். பெண்கள் முக்கியத்துவம் பெறாத சமூகம் பண்பட்ட சமூகமாக விளங்க முடியாது. ஆனால் அந்த முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதுதான் நம் கேள்வி!
ஆரம்பத்தில் கூறியது போல் பெண்களிடத்தில் தோன்றும் மாற்றம் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் புரட்டிப்போடும் கருத்துருவாக்கம். அது சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். புரட்சி என்பது ஆணுக்கு இணையாக தகாத நடத்தையைப் பெறுவதல்ல, பெண்ணுக்கு இணையாக ஒழுக்கமுடையவனாக ஆணை மாற்றுவதே. பாசமுள்ள தாயாக, மரியாதையுள்ள மகளாக, நேசம் வைக்கும் மனைவியாக, சமூக அக்கறையுள்ள குடிமகளாக, ஆணுடன் அனைத்து துறைகளிலும் ஆரோக்கியமான போட்டி போடும் பெண்ணாக வாழும் அனைத்து சகோதரிகளுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள்!
அபுல் ஹசன் R
jeraabu.88@gmail.com