ஒரு சமூகம் எந்த அளவுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதற்கு அதன் எழுத்தறிவு, கல்வி தொடர்பான புள்ளிவிவரங்கள், அட்டவணைகள்தாம் அதிமுக்கியமான வழிவகைகளாய்க் கருதப்படுகின்றன.
முன்னேறிய நாடுகளில் இப்போதெல்லாம் இன்னும் ஒரு படி மேலாக மற்றுமோர் அளவுகோலை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இதனை “ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டிருத்தல் அட்டவணை’ Index of Life long learning என்றே அவர்கள் அழைக்கின்றார்கள்.
ஒரு பக்கம் அறிவு வெடிப்பும் மறுபக்கம் அறிவியலின் வியத்தகு வளர்ச்சியுமாக அறிவுக் களம் உச்சத்தை அடைந்து விட்ட நிலையில் இப்போது வெறுமனே உயர் கல்வி கற்றிருப்பது போதுமானதாகக் கருதப்படுவதில்லை. அதற்கும் மேலாக வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருந்தாக வேண்டிய அவசியம் உருவாகியிருக்கின்றது.
இவ்வாறாக ஒருவர் என்னதான் தம்முடைய துறையில் ஆராய்ச்சிகள் பல செய்து முத்திரை பதித்திருந்தாலும், மிகப் பெரும் அளவில் அறிவியலை கரைத்துக் குடித்திருந்தாலும் தினம் தினம் புதுப் புது திறமைகளைக் கற்றுக் கொள்வதிலும், புதுப் புதுப் பாடங்களைப் பயில்வதிலும் ஆர்வமோ, திறனோ அவருக்கு இல்லாமல் போனால் அவர் இந்த நவீன யுகத்தில் “தற்குறியாக – கல்லாதவராகத்’ தான் கருதப்படுவார். இந்த யதார்த்தம் தான் இந்தப் புதிய அளவுகோலுக்கு உந்துதலாக அமைந்திருக்கின்றது.
இந்தத் தொடரில் The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn “இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர்தாம் தற்குறி எனக் கருத்ப்பட மாட்டார். அதற்கு மாறாக பயின்று, பயின்றதைத் துறந்து, மறுபடியும் பயில்கின்ற திறன் அற்றவர்கள்தாம் 21 ஆம் நூற்றாண்டில் தற்குறிகளாகக் கருதப்படுவார்கள்’ என்கிற ஆல்வின் டாஃபளரின் புகழ்பெற்ற வாசகங்கள் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்ட வாழ்நாள் முழுவதும் பயின்றுகொண்டே இருத்தலுக்கான அட்டவணை தொடர்பான புள்ளிவிவரங்களை ஆய்ந்து பார்க்கின்ற போது அந்த அட்டவணையின் அடிப்படையில் நார்வே, ஸ்வீடன் ஆகியநாடுகள் தாம் உலகத்திலேயே மிக மிக அதிகமாக முன்னேறிய நாடுகள் என்கிற சிறப்பைப் பெறுகின்றன. அதாவது அந்த நாட்டு மக்கள் வாழ்நாள் முழுவதும் புதுப் புதுப் பாடங்களையும் கலைகளையும் கற்றுக் கொண்டே இருக்கின்றார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பதும் அவசியமாகும். என்னுடைய கணிப்பின் படி நம்மில் – அதாவது இந்திய முஸ்லிம்களில் – உயர் கல்வியில் முத்திரை பதித்துள்ள சமூகக் குழுக்களும் மனிதர்களும் கூட இந்த அட்டவணையின் படி மதிப்பிடுகின்ற போது மிக மிக பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
வளர்ச்சியின் சில படிக்கட்டுகளில் ஏறியதுமே நமக்குள் பெருமித உணர்வு பொங்கிவிடுகின்றது. நம்மை நாமே பயிற்சி, கல்வி ஆகியவற்றின் தேவையே இல்லாதவர்களாய் நினைக்கத் தொடங்கிவிடுகின்றோம். நம்மில் “பயில்பவர்களும் சரி, பயிற்றுபவர்களும் சரி இருவேறு வகையினராய், ஒருவர் மற்றவருடன் எந்தத் தொடர்பும் உறவும் அறவே இல்லாதவர்களாய் mutually exclusive ஆகிவிட்டிருக்கின்றார்கள்.
பயிற்றுவிப்பவர்களாய், கற்பிப்பவர்களாய் இருப்பவர்களோ கற்றலையும் பயிற்சியையும் தம்முடைய தகுதிக்கும், உயர்நிலைக்கும் உகந்த செயலே அல்ல என்று இறுமாந்திருக்கின்றார்கள்.
புதியவற்றைக் கற்றுக்கொள்ளுகின்ற, புதிய பாடங்களைப் பயிலுகின்ற கட்டத்தைக் கடந்து விட்டோம் என்றே நம்முடைய ஆலிம்களும், தலைவர்களும், அறிவுஜீவிகளும் நினைக்கின்றார்கள். எங்கேனும் எவரேனும் விதிவிலக்குகளாய் இருக்கலாம். மற்றபடி புதியவற்றைக் கற்றுக்கொள்கின்ற அவசியமும் இல்லை, தேவையும் இல்லை அதற்கான சாத்தியமும் இல்லை என்கிற எண்ணம்தான் எல்லாரையும் ஆக்கிரமித்திருக்கின்றது.
ஆக, வளர்ச்சி அடைந்த நாடுகளில் துறைசார் வல்லுநர்களும், தத்தமது துறைகளிலும் சுடர் விடும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றவர்களும் கூட விதவிதமான டிரெயினிங் கோர்ஸ்களில் சேர்ந்து தம்மைத்தாமே மெருகூட்டிக் கொண்டே இருக்கின்ற இன்றையக் காலத்தில் நம்முடைய தலைவர்களும் டிரெயினிங் கோர்ஸ்களில் சேர்ந்து தம்மைத் தாமே மெருகூட்டிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படும் என்றால் அது மிகையல்ல.
இதே முகநூலில் இயங்குபவர்களில் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், அய்ம்பது வயதுக்கு மேலானவர்கள் ஆகியோரின் விகிதத்தைக் கணக்கிட்டோமெனில் முஸ்லிம்களின் விகிதத்துக்கும் முஸ்லிம் அல்லாதவர்களின் விகிதத்துக்கும் இடையிலான வித்தியாசம் மிகப் பெரும் செய்தியைத் தரும். புதியவற்றைக் கற்றுக்கொள்ளுவதிலும் புதிய களங்களில் முத்திரை பதிப்பதிலும் நம்முடைய சமுதாயம் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருக்கின்றது என்பதை அது வெளிப்படுத்தும்.
பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களில் எழுபது வயது, எண்பது வயது முதியவர்கள் கூட சமூக ஊடகங்களில் (வாட்ஸ் அப் சமூக ஊடகத்தில் சேராது என்பதைக் கருத்தில் கொள்க) மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இவர்கள் முகநூலில் மட்டுமல்லாமல் சிட்டுரையிலும் ட்விட்டரிலும் இயங்குவதைப் பார்க்க முடியும். நம்ம தரப்பில், குறிப்பாக மார்க்க உணர்வும் தெளிவும் கொண்டவர்கள் மத்தியில் சமூக ஊடகச் செயல்பாடுகளை மருந்துக்கும் கூட பார்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.
இதனை ஒரு எடுத்துக்காட்டாகத்தான் குறிப்பிட்டேன். இதே போன்று எந்தவொரு புதிய திறமை, புதிய ஆற்றலைக் கற்றுக்கொள்கின்ற விஷயத்திலும் இதே போன்ற வித்தியாசத்தைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மலைக்கச் செய்கின்ற முன்னேற்றங்கள் நாள்தோறும் நடந்து வருகின்ற இன்றையக் காலத்தில் இதனை ஒரு சாதாரணமான பிரச்னையாகக் கடந்து சென்றுவிட முடியாது. கல்லாமை, அறியாமையைப் போன்று இன்றையக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொள்கின்ற திறனும் ஈடுபாடும் இல்லாமையும் மிகப் பெரும் ஊனமாகத்தான் பார்க்கப்படும். ஒட்டுமொத்த சமுதாயத்திலும் இந்தப் பலவீனம் பரவிவிடுகின்ற போது சமுதாயமே முடங்கிப் போன சமுதாயமாக சுருங்கி, தேங்கி நின்றுவிடும். இன்னும் சொல்லப்போனால் நம்முடைய சமுதாயம் இன்று சந்தித்து நிற்கின்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருப்பதும் இந்தப் பலவீனமும் ஊனமும்தாம்.
- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
அகில இந்தியத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்