கடந்த மே 3ம் தேதியிலிருந்து பாஜக ஆட்சிபுரியும் மணிப்பூரில் வன்முறை நெருப்பு பற்றியெரிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இப்போது ஹரியானா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களின் உயிர், உடமைகள், வியாபாரம், வழிபாட்டுத் தலங்கள் முதலானவை அழிக்கப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மீதான வன்செயல்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
கடந்த இரு வாரங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளில் சில:
- ஜூலை 22 – குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவிலுள்ள ஒரு கிராமத்தில் பசு விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரு முஸ்லிம் நபரை இந்துத்துவ கும்பல் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
- ஜூலை 25 – மத்திய அசாமில் 6 இளைஞர்கள் மீது பசுக்களைத் திருடியதாக பொய்க் குற்றம் சாட்டி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் சதாம் உசேன் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்; ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களைக் காப்பாற்றச் சென்ற காவலர்களும் இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
- ஜூலை 29 – ஹிஜாப் அணிந்த ஒரு சிறுமியை மானபங்கப்படுத்தி வன்புணர்வு செய்துள்ள காவி கும்பல், அந்தக் காணொளியை பெருமை குறியீடாகத் தங்களின் வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
- ஜூலை 30 – மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெயின் மாவட்டத்தில் பிசியோதெரபி மருத்துவரான ஜர்ரின் கான் எனும் பெண்ணை ஜிகாதி எனக் கூறியதோடு, கத்தி, கம்புகளைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளது ஒரு சங்கி கும்பல்.
- ஜூலை 31 – சேத்தன் சிங் என்ற RPF போலிஸ் அதிகாரி ஒருவன், ஜெய்ப்பூரிலிருந்து மும்பை வந்துகொண்டிருந்த ரயிலில் பழங்குடியினத்தைச் சார்ந்த தன் உயர் அதிகாரியை சுட்டுக்கொன்றதோடு, அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த முஹம்மது ஹுசைன், அப்துல் காதிர், அஸ்கர் ஆகிய 3 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்துள்ளான்.
- ஜூலை 31 – ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தை ஒட்டி அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ஏந்திய இந்துத்துவ வன்முறையாளர்கள், நூஹ், குருகிராம் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளையும் வணிகத் தலங்களையும் தாக்கி, தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் மிகப் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
- ஜூலை 31 – ஹரியானாவின் குருகிராம் நகரில் அமைந்துள்ள அஞ்சுமன் ஜாமா மசூதிக்குத் தீ வைக்கப்பட்டிருப்பதுடன், அதன் இமாம் ஹாபிஸ் சாத் கொடூரமான முறையில் இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் உட்பட நாடு முழுவதும் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் இத்தகைய பயங்கரவாத அசம்பாவிதங்கள் யாவும் இந்துத்துவ பாசிஸ்டுகள் விதைக்கும் இஸ்லாமிய வெறுப்பின், வகுப்புவெறியின் அறுவடையே! முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நாசகரத் திட்டத்துடன் அவர்கள் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ரயிலில் RPF காவல் அதிகாரி தன்னால் கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான். மட்டுமல்ல, இந்தியாவில் வாழ நினைப்பவர்கள் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று கூச்சலிட்டிருக்கிறான். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? இந்துப் பெரும்பான்மைவாதக் கருத்தியலும், இஸ்லாமிய வெறுப்பும் சமூக மட்டத்தில், அதிகார மையங்களில் உட்பட, ஆழமாகக் குடிகொண்டுள்ளது என்பதைத்தான்.
ஒரு கலவரத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அரசே இன்றைக்கு அவற்றுக்கு வழியமைத்துக் கொடுத்து அரசியல் லாபம் ஈட்டும் அவலநிலை உள்ளது. தன் பின்னால் பாஜக என்ற ஆளுங்கட்சி இருக்கிறது என்ற எண்ணம் பசு குண்டர்களை, கலவரக்காரர்களை மேலும் கிளர்ச்சியூட்டுவதாக அமைகிறது. ஹரியானா விவகாரத்தில் உட்பட அரசும் காவல்துறையும் பெரும்பான்மைவாதச் சார்புடன்தான் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
இப்படியான சூழலில், பொதுமக்களிடமிருந்து பலமான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அநீதி இழைக்கப்படும் மக்களுடன் நின்று நீதிக்கான முழக்கத்தை அவர்கள் எழுப்ப வேண்டும். அதுவே இந்நாட்டில் நிலவும் சூழலை மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக அமையும்.
- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), தமிழ்நாடு