அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு
சட்டப்பூர்வமான இனப்படுகொலை.
————————————————- ——-
சங்பரிவாருக்கு ஆதரவான சமூக சூழ்நிலையை உருவாக்குவதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கும் பல நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள், உடனடியாக தயாரிக்கப்படும் குற்றவாளிகளின் பட்டியல், கைதுகள், பயங்கரவாதச் சட்டங்களைத் திணித்தல், நீண்ட விசாரணைகள், ஜாமீன் மறுப்பு போன்ற விஷயங்கள் மிகத் திறமையான திரைக்கதைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அவற்றிற்கான உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லாமலேயே.
இறுதியில் தீர்ப்பு வரும்போது, சிலர் தண்டிக்கப்படுவார்கள், பலர் விடுவிக்கப்படுவார்கள். இதுதான் காலா காலமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பாசிச விளையாட்டில் அப்பாவி கைதிகளும், அவர்களது உறவினர்களும், பாசிசத்தின் அதிகார பசிக்காக பலியான அப்பாவி மக்களும், அவர்களது உறவினர்களது வாழ்க்கையும்தான் இறுதியில் சீரழிந்து போகும்.
எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் சங்பரிவார் உருவாக்கிய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு முதல் எத்தனை, எத்தனை மனிதர்கள் இவ்வாறு பலி செய்யப்பட்டுள்ளனர். மதானியும், ஜக்கரியாவும், சித்திக் காப்பனும், உமர் காலிதும், ஷர்ஜீல் உஸ்மானியும்… இன்னும் பெயர் அறியாத அனேகம் பேர்கள் பலியாக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.
அதிகாரத்தை அடையவதற்காகவும் அதை தக்க வைப்பதற்காகவும் சங்பரிவார் உருவாக்கிய எரி குழிகளில் விழுந்து அழிந்தவர்கள் அனேகர்கள். மாலேகாவ் தீவிரவாத தாக்குதல், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தீவிரவாத தாக்குதல், பட்லா ஹவுஸ் துப்பாக்கி சூடு, மக்கா மசூதி தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களின் உண்மையான பின்னணியை ஆய்வு செய்தவர்களுக்கு இது தெரியும்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே உட்பட பலர் கொல்லப்பட்டது குறித்து மகாராஷ்டிர காவல்துறையின் மூத்த அதிகாரியான ஐஜி எஸ்எம் முஷ்ரிப் வெளியிட்டுள்ள தகவல்களும். ஊடகவியலாளர்கள் ராணா அய்யூப், ஏ. ரஷிதுதீன் ஆகியோர் எழுதிய புத்தகங்களும், பல உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் தீர்ப்பு இப்போது வந்துள்ளது. 38 பேர்களுக்கு தூக்கு தண்டனையும், 11 பேர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பேருக்கு ஒன்றாக மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
முஸ்லிம் இனப்படுகொலை சித்தாந்தத்தின் ஆதரவாளர்களின் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்களை தொடர்ந்து வேட்டையாடி வரும் நிலையில் , அவர்களுக்கு இனப்படுகொலைக்கான சட்டபூர்வமான வழிகளை வகுத்துக் கொடுத்துள்ளது இந்தத் தீர்ப்பு. ஆம், இது ஒரு சட்டப்பூர்வமான இனப்படுகொலை. இதற்கு மேல் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இருந்தாலும், பாசிச காலத்தில் நமது நீதி அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதற்கான சான்றாகவே இந்தத் தீர்ப்பு உள்ளது.
விசாரணை நீதிமன்றங்களால் மரண தண்டனை அளிக்கப்படும் 100 வழக்குகளில், 4.5 சதவீதம் மட்டுமே உயர் நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. 30 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அல்லது வேறு தண்டனை வழங்கியுள்ளனர். 4.5 சதவீதம் பேர் மட்டுமே மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றமே சொல்லும் போது, ஏன் இத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் 4.5% தண்டனைக்காக 95.5% மக்கள் தேவையில்லாமல் சிரமத்திற்கு ஆளாவதை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருந்தால் நாம் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் இவ்வேளையில், ஒரே வழக்கில் 38 பேரை தூக்கிலிட வேண்டும் என்ற இந்த தீர்ப்பு குறித்து, ஜனநாயக சமுதாயம் என்று கூறிக் கொள்பவர்களிடம் இருந்து எந்த சலனமும் இதுவரையும் எழவில்லை . பாசிச ஆட்சியில் இவர்கள் அனுபவிக்கும் மௌன சுகத்தையே இது காட்டுகிறது.
ஒடுக்கப்பட வேண்டியவர்களை ஒடுக்குவதற்கு அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்திற்கு பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவும் தேவை. அத்தகைய ஆதரவைக் கட்டியெழுப்ப முஸ்லிம் இளைஞர்களை பலியிட வேண்டும் என்று பாசிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். இது எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியை சரியான பார்வையோடு அணுக வேண்டிய பொறுப்பு சங்பரிவார் தவிர்த்த இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கும் நீதி மறுப்புகளுக்கும் முன்னால் பலரது குரல்களும் அடைத்துக்கொள்ளும் வழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக எழாத சத்தமின்மையை சமூக கருத்தாகவும் தங்களுக்கு ஆதரவாகவும் மாற்றியமைப்பதன் மூலம் சங்பரிவார் அரசியல் வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. அதை தடுத்த நிறுத்த முடியாமலும் செய்வதறியாமலும் திகைத்து நிற்கின்றன பாரம்பரிய அரசியல் இயக்கங்கள். இதன் காரணத்தால், பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்திற்கும் தேச விரோதச் சாயம் பூசுவது சங்பரிவார்களுக்கு எளிதாகிவிட்டது.
அகமதாபாத் தீர்ப்பு நீதியையே கொன்று விட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்