ஒரு சமூகத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது வரலாற்றில் அவர்களின் பங்களிப்பை நீக்கி, துரோகிகளாகவும் எதிரிகளாகவும் சித்திரிப்பது, அவர்களின் இலக்கிய ஆக்கங்களை அழித்து அவர்களைப் பற்றிய பொய்யைப் பரப்புவது, அவர்களின் பண்பாட்டுப் பின்னணியில் இருக்கும் பெயர்களை மாற்றுவது ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் அண்மைக் காலமாக எவ்வித தங்குதடையுமின்றி முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்புக்குப் பகிரங்க அறைகூவல்கள் விடுக்கப்படுவது கண்கூடு.
குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய உண்மைகளை அழித்தல் அல்லது மதிப்பிழக்கச் செய்யப்படுவதை ‘அறிவாதாரப் படுகொலை’ (Epistemicide) என்று குறிப்பிடுவர். இந்த எபிஸ்டெமிசைட் என்பது குறிப்பிட்ட வழிகளில் ஒழுங்கமைக்கப்பட்டு நிலையாக, முறையாக அறிவுத்தளத்தில் ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
மேலாதிக்க சக்தி கல்வி, அறிவுத்தளங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த எபிஸ்டெமிசைட் (அறிவாதாரப் படுகொலை) நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைவாக உண்மைகள் அழிக்க, மௌனிக்கப்படுகின்றன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த எபிஸ்டெமிசைட் தொன்று தொட்டே நிகழ்த்தப்படுவது என்றாலும் இப்போக்கு அண்மைக் காலத்தில் அதிதீவிரம் அடைந்துள்ளது.
இந்துத்துவவாதிகள் இதனைச் சரிவரச் செய்து இந்திய வரலாற்றில் நடைபெறாத, இல்லாத வேதகாலப் புனை கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை அரக்கத்தனமானதாகவும் இந்தியாவின் இருண்ட காலமாகவும் சித்திரிக்கின்றனர். அவர்கள் கட்டமைக்கும் புனை வேதகாலத்தை இந்தியாவின் பழமையான தூணாகச் சித்திரிப்பதன் மூலம் தங்களின் அரசியல் நோக்கங்களை அடைகின்றனர். இதனால் இந்தியாவில் முஸ்லிம்களின் வரலாறு சிக்கலான விவரிப்புகளுக்கு ஆளாகி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
17ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா செழிப்பான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த இந்தியா இஸ்லாமிய பண்பாட்டுக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இந்துத்துவவாதிகள் தங்களின் புனை வரலாற்றுக் கூற்றுக்களை கல்வித்துறை, பள்ளிப் பாடப் புத்தகங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் முஸ்லிம்கள் அறிவியலுக்கு ஆற்றிய பணிகளைக் குறைமதிப்பிற்கு ஆளாக்கியுள்ளனர். பாடப் புத்தகங்களில் செய்யப்படும் இது போன்ற நீக்கல் திரித்தல்களானது குழந்தைகள் தவறாக வழிநடத்தப்படவும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
பாடப் புத்தகங்களிலிருந்து முகலாய, சுல்தானிய ஆட்சிக் காலங்களை நீக்குவது இந்தியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்வதிலே போதாமையை ஏற்படுத்துகிறது. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியா உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கையும், உலக அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முதலிடத்திலும் இருந்தது. இந்துத்துவ கருத்தாக்கத்திற்கு எதிரான வரலாற்று, அறிவியல் உண்மைகளைப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்குவதன் மூலம் இந்துப் பெரும்பான்மையையும் அவர்களின் தலைவர்களையும் உயர்த்திப் பிடிக்கும் ஓர் ஒத்திசைவான கதையாடல்களை உருவாக்கி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலிருந்த இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா மௌதூதியின் 100 புத்தகங்களும் செய்யது குதுபின் 40 புத்தகங்களும் நீக்கப்பட்டுள்ளது. இந்துத்துவ பின்னணியுடைய 25 பேர்களைக் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அலிகர் முஸ்லிம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆய்வு பாடத்திட்டத்திலிருந்து மௌலானா மௌதூதி, சைய்யது குத்ப் ஆகியோரின் (Intellectual Properties) பங்களிப்புகள் வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் தனது இளங்கலை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தின் ஆறாவது செமஸ்டரில் இருந்து முகமது இக்பாலை நீக்க முடிவு செய்துள்ளது. அண்மையில் NCERT பதினொன்றாம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தின் தொடக்கப் பகுதியான ‘அரசியலமைப்பு – ஏன், எப்படி?’ (Constitution – Why and How?) எனும் பாடத்திலிருந்து மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பெயரை நீக்கியுள்ளதை தற்செயல் நிகழ்வாகப் பார்த்துவிடக் கூடாது.
மாறாக, இத்தொடர் நிகழ்வுகளை நீண்ட காலமாக இந்துத்துவ சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனமயப்படுத்தப்பட்ட அறிவாதாரப் படுகொலையின் (Epistemicide) தேர்ந்த, மேம்படுத்தப்பட்ட செயல்முறையாகவே பார்க்க வேண்டும்.
கூடுதலாக, வரலாற்றைத் திரித்து எழுதுவதுடன் ஃபாசிஸ பாஜக அரசு முஸ்லிம் பெயர்களைக் கொண்ட தெரு, நகரம், மாவட்டங்களின் பெயரை மாற்றுவது என முஸ்லிம்களுடன் தொடர்புடைய அனைத்து அடையாளங்களையும் துடைத்து வருகின்றனர். இந்தப் பிளவுகளை ஆழப்படுத்தி மெருகூட்டுவதற்காக இஸ்லாமிய அடையாளத்துடன் இருக்கும் அனைத்தையும் இந்தியா, இந்துக்களின் அடையாளத்திற்கு எதிரானவை அல்லது ஆபத்தானவை எனும் பார்வையைக் கட்டமைக்கின்றனர்.
இந்தியாவின் புவியியல், பண்பாட்டை உருவாக்கிய முஸ்லிம்கள், இதர சமூகங்களின் தாக்கங்களின் தடயங்களை அகற்றுவதற்கும், இந்து மேலாதிக்கத்தை வலியுறுத்துவதற்குமான மற்றொரு வழியே இதுபோன்ற பெயர் மாற்று நடவடிக்கைகள்.
NCERT தனது CBSC பாடப் புத்தகங்களில் மூன்று நூற்றாண்டு கால முகலாய வரலாற்றின் பல பகுதிகளை உள்ளடக்கிய வரலாற்றுக் குறிப்புகளை நீக்கியுள்ளது. இச்செயல் வருங்கால இளைய சமூகத்தின் வரலாற்றைப் பற்றிய கண்ணோட்டத்தையே சிதைக்கக் கூடியது என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கண்டனக்குரல் எழுப்பியும் அது திருத்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்துத்துவ தீவிரவாதிகள் பீகார் ஷரீப் பகுதியில் உள்ள அஜீசியா மதரஸா எனும் இஸ்லாமியப் பாடசாலையைத் திட்டமிட்டு இந்து பண்டிகையின்போது தீயிட்டுக் கொளுத்தினர். இந்த வன்முறை நெருப்பிற்கு 4500க்கும் மேற்பட்ட பழமையான இஸ்லாமியச் சிந்தனையின் வேர்களுடன் தொடர்புடைய புத்தகங்கள் இரையாகின.
அஜீசியா மதரஸா நூற்றாண்டு பழமை வாய்ந்த இஸ்லாமியப் பண்பாட்டு மையமாகும். அந்த நெருப்பிலிருந்து சாம்பலைத் தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை. அந்தப் புத்தகங்களில் புதைந்திருந்த ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான இஸ்லாமிய வரலாறுகள் அழித்தொழிக்கப்பட்டன.
இயந்திரங்களும் முஸ்லிம்களின் உண்மை வரலாற்றைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உண்மை வரலாற்றையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லக் காத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய நூலகங்களும் அதன் புத்தகங்களும் கலவரங்களின் வாயிலாகத் திட்டமிட்டு அழிக்கப்படுவது இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாட்டில் முஸ்லிம்களின் பங்களிப்புகளை அழிப்பதன் மூலம் அல்லது ஓரங்கட்டுவதன் மூலம் அவர்களின் மீது பொதுவான தப்பெண்ணத்தை விதைக்கவும், முஸ்லிம்களுக்கு எதிரான சார்புகளை நாட்டின் பொது உடைமையாக மாற்றவும் வழிவகுக்கிறது. இப்படித் தான் இந்த எபிஸ்டெமிசைட் குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கட்டமைப்பதற்கான வளமான நிலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, பொதுச் சேவைகளுக்கான அணுகல்கள் போன்ற அடிப்படை அம்சங்களிலும் இலக்கியம், திரைத்துறை போன்ற துறைகளுக்குள் செல்வதிலும் அரசு, இதர பணிகளுக்குச் செல்வதிலும் கடும் பாகுபாட்டையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த எபிஸ்டெமிசைடிலிருந்து பல தரப்பட்ட சமூகங்களின் அறிவாதார அமைப்புகளையும் பங்களிப்புகளையும் பாதுகாப்பது நாட்டின் பன்முகத்தன்மை, இறையாண்மையைக் காப்பதற்கு இன்றியமையாததாகும். உடனடியாக இந்தியாவில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அறிவாதாரப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.
(மக்தூப் இணையதளத்தில் நபீல் அகமது எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)