எழுதியவர் : V.S. முகமது அமீன், துணை ஆசிரியர் – சமரசம் மாதமிரு முறை இதழ்
1968 டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இரவு 9 மணிக்கு கீழவெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பின் சூடு 50 ஆண்டைத் தொட்டு நிற்கும் இந்த நாளிலும் நம் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கிறது. நிலவுடைமை ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக, சாதிய ஏற்றத்தாழ்வின் விளைவாக எழுந்த ஆதிக்கத் தீயின் நாக்கு 44 உயிர்களை கருக்கியது.
தமிழகத்தின் 30 விழுக்காட்டு நெல் உற்பத்தியின் களமான பழைய தஞ்சைப் பகுதியின், (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின்) கீழவேளூர் வட்டத்திலுள்ள சிறு கிராமம்தான் கீழ வெண்மணி. வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்த அடித்தட்டு மக்களை நில பிரபுத்துவத்தின் பண்ணைக்கயிறு கட்டிப்போட்டிருந்தது. 5 விழுக்காட்டினரிடம் 30 விழுக்காடு நிலம் சிறைப்பட்டிருந்தது. சூரியன் உதிக்கும் முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைந்த பிறகு வேலை முடிக்க வேண்டும் என்பது குத்தகை விவசாயிகளின் தலைவிதியாக எழுதி வைத்தனர் பண்ணை முதலாளிகள்.
அழுகின்ற பிள்ளைக்கு பாலூட்டுவத்ற்குக்கூட ஓய்வின்றி உழைக்கும் வர்க்கத்திற்கான கூலி ஒரு களத்திற்கு ஐந்து படி நெல். அதுவும் முறையாக அளக்கப்படுவதில்லை. அப்படி அளக்கப்பவதையும் மரக்காலில் அளந்து போடுவதை துண்டை விரித்து எட்டி நின்று பெற்றுக் கொள்ளவேண்டும். வெள்ளை வேட்டி கட்டக்கூடாது,கோவணம் மட்டுமே கட்ட வேண்டும். மாட்டுக்கு புல் அறுக்கக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, முடிவெட்டிக் கொள்ளக்கூடாது என்ற ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறைக்குத் தள்ளப்பட்டவர்களின் குரல்களை கம்யூனிசக் கட்சியின் பி.சீனிவாசராவும், மணியம்மையும் ஒன்று திரட்டுகிறார்கள்.
ஜமீன்களை எதிர்க்கும் ஒரு அடித்தளத்தை முளையிலேயே கிள்ளி எறிய பண்ணையார்களால் உருவாக்கப்பட்டது நெல் உற்பத்தியாளர் சங்கம். உள்ளூரில் வேலைக்கு ஆள்கள் இருக்கும்போது வெளியூரில் இருந்து ஆள்களைக் கொண்டுவரக்கூடாது என்ற அரசின் சட்டத்தை மீறி பண்ணையார்கள் வெளியூரிலிருந்து ஆள்களைக் கொண்டு வந்ததுடன் உள்ளூர்க்காரர்களுக்கு நெல்லையும், வெளியூர்காரார்களுக்கு அரிசியையும் கூலியாகக் கொடுத்தனர். பண்ணை முதலளிகளைப் பாதுகாத்தது அரசும், காவல்துறையும்.
1952 ஆம் ஆண்டு பண்ணைப் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்றியதும் முதலாளிகள் இன்னும் வீரியமுடன் எழுந்தார்கள். சாணிப்பாலும், சாட்டையடியும் உயர்ந்தன. மரத்தில் ஏறி கொடி அசைத்தாலோ, தம்பட்டம் அடித்தாலோ, எக்காளம் ஊதினாலோ வேலை நேரம் முடிந்துவிட்டது. எல்லோரும் வயலிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உரிமைக்குரல் மெல்ல எழுந்தது. 1960 இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் கூலிஉயர்வும் இணைந்து கொண்டது. ஜமீன்களை கூலித் தொளிலார்கள் எதிர்ப்பது எந்த ஊர் நியாயம்? பிரச்னை வெடித்தது.
1967 இல் அறுவடைக் கூலி உயர்வு கேட்டு நடந்த நிகழ்வில் பூந்தாழங்குடி பக்ரியை கொன்றுவீசினார்கள். மன்னார்குடியில் பேச்சுவார்த்தை நடந்தது. அரசும், காவல்துறையும் பண்ணையின் பக்கமே நின்றன. தொடர்ந்து குறிஞ்சியூர் சின்னப்பிள்ளை கடத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய இரத்தம் தோய்ந்த சட்டையை அன்றைய சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். தனுஷ்கோடி சட்டமன்றத்தில் எடுத்து வந்து காட்டியும் கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கேக்கரை ராமச்சந்திரன் கொல்லப்பட்டார். நெல் உற்பத்தியாளர் சங்க அவசரக் கூட்டம் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு தலைமையில் நடந்தது. ‘கீழவெண்மணியை எரிப்போம்’என்று எச்சரித்தது அன்றைய தீக்கதிரில் வெளியானது.
விவசாயக்கூலிகள் கொடி பிடிக்கக்கூடாது. சங்கம் சேரக்கூடாது. போராடக்கூடாது. எதிர்த்துப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு 125 ரூபாயும், இந்தச் சங்கத்தில் இணைவதற்கு 125 ரூபாயும் 250 ரூபாய் தண்டம் கட்ட வேண்டும் என தேநீர் கடையிலிருந்த முத்துச்சாமியையும், முனியனையும் இழுத்துக் கொண்டு சென்றார்கள். முத்துச்சாமி ஊர்த்தலைவர், முனியன் நாட்டாண்மை.இருவரும் சொன்னால் ஊர் கேட்கும் எனவே இருவரையும் ராமானுஜம் வீட்டிற்குள் கட்டிவைத்து அடித்துப் பூட்டினார்கள். பூட்டை உடைத்து இருவரையும் ஊர்மக்கள் மீட்டார்கள்.
கொல்லைப்புறத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டவர்கள் வீடு நுழைந்து கட்டவிழ்க்கின்றார்களா? இவர்களை இப்படியே விட்டால் சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றங்களை நோக்கி அணியமாகிவிடுவார்கள். பெருமுதாளிகளின் கோபத்தீ கீழவெண்மணியை நோக்கிப் புறப்பட்டது. ஊர் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டபோது இருதரப்பு மோதல் நிகழ்ந்தது. பண்ணை தரப்பில் சென்ற இருக்கை பக்கிரிசாமியைக் கொன்றார்கள். இதைச் சாக்காக வைத்து1968 டிசம்பர் 25 ஆம் நாள் இரவு துப்பாக்கிகளுடன் ஊருக்குள் நுழைந்தது பண்ணையின் ஆதிக்கக் கூட்டம்.
கற்களுடன் தாக்குவதற்கு ஊரில் காத்திருந்தார்கள். துப்பாக்கியால் சுட்டுத்தள்ள, ஓட்டம் பிடித்தது கூட்டம். இருள் நிரம்பிய பதற்றம். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறி அடித்து ஓடுகின்றார்கள். ஊரின் முதலில் இருந்த சற்றே பெரிய வீடானா ராமய்யனின் வீட்டிற்குள் தஞ்சமடைகின்றார்கள். வெளியே வீட்டை இழுத்துப் பூட்டி தீயிட்டது ஆதிக்க கும்பல். 28 பேர் என்றார்கள். பிரேத பரிசோதனையில் 42 என்றார்கள். எரித்துக் கொல்லப்பட்டது 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகள் என மொத்தம் 44 உயிர்கள் கருகின. தன் குழந்தை பிழைக்கட்டும் என குடிசையிலிருந்து வயலில் தூக்கிவீசினாள் ஒரு தாய். அந்தக் குழந்தையையும் சேர்த்தே எரித்தார்கள். சாம்பலாகக்கூட சிலர் மிஞ்சவில்லை எனவேதான் எண்ணிக்கைக் குழப்பம் என்கிறார்கள்.
வழக்கு, விசாரணை வந்தது. தாக்கவந்த கூட்டத்தில் கொல்லப்பட்ட இரிக்கை பக்கிரிசாமியைக் கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைத்தது. எரித்துக் கொன்றவர்கள் குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். அதற்கான காரணமாக நீதிமன்றம் சொன்னது என்ன தெரியுமா ‘வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’என்பதுபோலத்தான். ஆம்.. ‘ நிலக்கிழார்களும், சமூகப் பொறுப்புள்ளவர்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இக்குற்றத்தை இவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என நம்புகிறோம். எனவே விடுதலை செய்கிறோம்’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
ராமய்யனின் குடிசை இருந்த வீட்டில் எஞ்சிய எலும்புகளையும், சாம்பலையும் உள்ளே போட்டு நினைவிடம் கட்டியாயிற்று. அந்த நாளின் துயரத்தை மிகச்சிறப்பாக ராமய்யாவின் குடிசை என்ற பெயரில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்படம் எடுத்துவிட்டார். ஆனால் 50 ஆண்டுகள் ஆகியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. சாதி ஒழியாதவரை, சமத்துவம் நிலவுவதில்லை. ஏகாதிபத்தியத்திற்குச் சாமரம் வீசும் காலம் வரைக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு உயர்வில்லை. கீழவெண்மணியில் உயிர்த்தியாகம் செய்த 44 உயிர்களின் கோரிக்கையும், சமத்துவ வேட்கையும் இன்னும் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் எப்போதுதான் பதில் சொல்லப் போகிறோம்?
(இன்று கீழவெண்மணி படுகொலையின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்)
– வி.எஸ். முஹம்மத் அமீன்