காஷ்மீர் தன்னாட்சியின் தந்தை என்று தன் வாழ்க்கை முழுவதும் போற்றப்பெற்றவர் சையத் அலி கிலானி. ‘அவர் ஒருவர் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் ஒருவர் யாருக்கும் விலைபோனதில்லை.. அவர் கிலானி’ என்பதே தன்னாட்சி போராட்டக்காரர்களின் முழக்கமாக இருந்தது. அவர்கள் இன்று கிலானியை இழந்து அனாதையாகியிருக்கிறார்கள்.
உடல்நிலை சரியில்லாமலும் வீட்டுக் காவலிலும் இருந்த 92 வயது கிலானி நீண்ட காலமாகப் பொதுவெளியில் செயல்படாமல் இருந்தார். ஆனால், காஷ்மீர் தன்னாட்சி உரிமையான சட்டவிதி 370 நீக்கியது உட்பட நூற்றுக்கு மேற்பட்ட முறை காஷ்மீரை முடக்கியிருக்கிறார் கிலானி. கடந்த வாரம் கிலானியின் மறைவு ஆகஸ்ட் 4 2019 அன்று காஷ்மீர் தன்னாட்சி உரிமை நாளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தது. பொதுமக்களுக்குத் தடை, தொலைத்தொடர்புகள் ரத்து, முறையான இறுதி சடங்குக்கு அனுமதி மறுப்பு போன்ற நிகழ்வுகள் ஒரு முக்கிய தலைவரின் இறப்பை எப்படிப் பார்க்கின்றன என்பதை விடக் காஷ்மீரின் இன்றைய மோசமான நிலையையே பிரதிபலிக்கிறது.
இன்று கிலானி மறைவுக்குப் பிறகு அடுத்து அவர் இடத்திற்கு வரப்போவது யார்? அவரின் மரபை யாரால் காப்பாற்ற முடியும்? யார் அந்த போராட்டத்தை முன்னெடுக்கப்போகிறார் என்ற கேள்விதான் தன்னாட்சி உரிமையாளர்களிடம் ஆவலாக உள்ளது. தன்னாட்சி உரிமையாளர்களின் கூட்டமைப்பான ஹுரியத் அமைப்பு மற்றொரு கிலானியின் தேடலில் பெரும் சஞ்சலத்தில் உள்ளது.
காஷ்மீர் குறித்து இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகள் மட்டும் உரையாடி வருவதை எதிர்த்து வந்தார் கிலானி. பேச்சுவார்த்தையில் தன்னாட்சி உரிமையாளர்களையும் சேர்க்க வேண்டும் என்றார். அவர்கள் இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் எந்த தீர்மானமான முடிவும் எட்டப்படாது என்பது அவரின் நிலைப்பாடு. போராட்டத்தை விட்டுக்கொடுக்காத உறுதிதான் கிலானியை காஷ்மீரின் வலிமைமிக்க தலைவராக உருவாக்கியது. ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து அவர் ஒரு வார்த்தை கூறினால் மொத்த காஷ்மீரும் முடங்கும்.
தேசிய புலனாய்வு முகமையின் தீவிர செயற்பாட்டால் தன்னாட்சி தலைவர்கள் கடந்த இரண்டாண்டுகளாகச் செயற்படாமல் இருக்கிறார்கள். அதற்கு, மிர்வவைஜ் உமர் பாருக்கை தவிரப் பெரும்பாலானவர்கள் வீட்டுக்காவலில் இருப்பதையும் கூறலாம். கிலானியின் செல்வாக்கைக் காக்க யாரும் இல்லாத வேலையில், மசராத் ஆலம் மற்றும் யாசின் மாலிக் இருவரும் வலிமைமிக்க தலைவராக உருவாவார்கள் எனலாம். இருவரும் தற்போது தடுப்புக்காவலில் இருக்கிறார்கள். கிலானியின் மகன்கள் அடுத்த கிலானியாக உருவாக்க முயல்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான விஷயம். மிர்வைஜ் உமர் பாரூக் தனது ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் நீண்ட கால நோக்கில் நிரூபிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் தன்னாட்சி போராட்டக்காரர்களின் தலைவர் மறைமுகமாகச் செயற்படலாம். ஆனால், நாளைய தலைமுறைகளுக்கு கிலானி எந்தளவிற்கு முன்மாதிரியான தலைவராக இருந்துள்ளார் போன்ற நம்பிக்கை வாதங்களும் எழுந்து வருகிறது. ‘காஷ்மீர் லட்சிய ஈடுபாட்டின் அடையாளம் கிலானி. அது ஒருபோதும் மறையாது’ என்கிறார் காஷ்மீர் பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் சேக் சௌகத். ஹுரியத் தலைவர்கள் கூறிக்கொள்வதாவது, ‘எங்கள் தன்னாட்சி உரிமை எங்கும் போய்விடவில்லை. கிலானி இருந்தபோதும் அவருக்கு பிறகும் அது காஷ்மீரில் ஒலித்துக்கொண்டே இருக்கும்…’
‘மாத்யமம்’ தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது…
தமிழில் அஜ்மீ