நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
இந்த வருடம் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வின் தமிழ் வினாத்தாள்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியிருந்தது. 49 கேள்விகள் தவறானதாகவும், மொழிபெயர்ப்பு குறைபாடு கொண்டிருந்ததும் தமிழக மாணவர்களை குழப்பமடையச செய்தது. பல்வேறு அமைப்புகளும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் சிபிஎஸ்இக்கு எதிராக கண்டனங்களையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தியிருந்த நிலையில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அமர்வு தவறான கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள், ஒட்டுமொத்தமாக 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாராட்டி வரவேற்பதுடன், இதன் மூலம் தமிழக மாணவர்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த சிபிஎஸ்இ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக்கூடாது. தமிழக அரசு இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு தேர்வையே ஒழுங்காக பிழைகள் இன்றி நடத்த முடியாத சிபிஎஸ்இ நிறுவனத்தின் நம்பகத்தன்மை இந்த சம்பவம் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி தரமான மருத்துவர்களை நீட் தேர்வு மூலம் உருவாக்கப் போகிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. நீட் முழுதாக ஒழிக்கப்பட்டு சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கே பதிய வைக்க விரும்புகிறோம்.
சரியான நேரத்தில் சட்டப் போராட்டம் மூலம் மாணவர்களின் நலன் காக்க துணைநின்ற மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.