Bapsa- Fraternity கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடந்த பல்கலைகழக மாணவர் சங்க தேர்தலில் 25% வாக்குகள் பெற்றுள்ளோம். மேலும் Bapsa – Fraternity சார்பாக School of Language துறையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டுயிட்டு வென்ற மாணவி ஆஃப்ரீண் ஃபாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாணவி ஆஃப்ரீன் ஃபாத்திமா தன்னை இஸ்லாமிய பெண்ணாக முன்னிறுத்தி தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றி Bapsa Fraternity இயக்கங்களின் மேல் சுமத்தப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தை தவடுபொடி ஆக்கியுள்ளது. ஒடுக்கபட்ட மக்கள் தங்களுக்காக முன்னெடுக்கும் அரசியலில் குறிப்பாக இஸ்லாமிய அரசியல் ஆணாதிக்கம் நிறைந்தது, பெண்கள் அடக்குமுறையை போதிக்கக்கூடியது போன்ற தேய்ந்து போன முஸ்லிம் வன்ம கருத்துக்களுக்கு பதிலடியாக அமைந்தது ஆஃப்ரீன் ஃபாத்திமா வின் அபார வெற்றி.
JNU பல்கலைகழகத்தில் இஸ்லாமிய பெண்களின் அரசியல் எழுச்சி தவிர்க்க முடியாத யதார்த்தம் ஆகிவிட்டது. தங்களை இஸ்லாமிய பெண்ணாக முன்னிறுத்தி போராட்டங்களில் தலைமை தாங்கும் பல முஸ்லிம் பெண் சிந்தனையாளர்களும்,ஆளுமைகளும் பல்கலைகழகத்தில் உருவாகி வருவது பெண்ணிய கருத்தியலின் மீது ஒடுக்கபட்ட மக்களின் தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற முன்னேற்றமே ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை முன்னெடுத்து செல்லும்.
தேர்தலில் நாம் அடைந்து வரும் எழுச்சி JNU பல்கலைகழகத்தில் நடந்து வரும் பல அரசியல் மாறுதலை எதிரொலிக்கிறது.
ஒடுக்கபட்ட மக்களின் ஒற்றுமை/ ஒடுக்கபட்ட மக்களின் ஒருங்கிணைவு என்ற அரசியல் கோட்பாடு ஒடுக்கபட்ட பல்வேறு தரப்பு மக்களை ஒன்று இணையச் செய்து சாதிய ஹிந்துக்கள் பின்புலத்தில் அமைப்பாக திரண்ட வலதுசாரி இடதுசாரி ஆதிக்க அரசியலை எதிர்கொள்ளும் வல்லமை உடையது.
இருப்பினும் தேர்தல் களத்தில் நாம் ஈடுபடும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆஃப்ரீன் ஃபாத்திமா வின் வெற்றி இந்த சவால்களை முறியடித்து JNU வில் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் படிகல்லாக அமைந்துள்ளது.
JNU வில் சமீப காலமாக தொடர்ந்து ABVP(ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு) யின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது, இடதுசாரி அமைப்புகளின் ஒன்று பட்ட எழுச்சி ( அரசியல் கூட்டணியாக ஒன்றிணையாமல் வெறும் தொகுதி உடன்பாட்(டிற்கு)டில் மட்டும் ஒன்று கூடினர்) போன்றவை அடிப்படையில் அம்பேத்கரிய மாணவர் அமைப்பான BAPSA வின் எழுச்சியை மறைக்க உருவாக்கபட்ட கருத்துகள் ஆகும். இது போன்ற போலி வேடத்தினால் தான் சமூக அறிவியல் துறையில் இடதுசாரிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றனர். (JNU வின் சமூக அறிவியல் துறை இடது சாரி சித்தாந்தத்தின் ஊற்றாக கருதபடுகிறது) இடதுசாரி மாணவ அமைப்புகளான SFI,AISA,AISF,DSF போன்றவை ஒன்றுபட்டு எழுச்சி பெற்றுள்ளது என்று தொடர்ந்து கூறி வந்தாலும் இடது சாரி அமைப்புகளை புறந்தள்ளி உருவாக்கபட்ட விளிம்பு நிலை மக்களின் ஒன்றிணைந்த தன்னிச்சையான அரசியல் எழுச்சியை சமூக அறிவியல் துறையில் தடுக்க முடியவில்லை. இது சமூக அறிவியல் துறையில் நாம் முன்வைக்கும் அரசியலுக்கு ஆதரவு பெருகி வருவதை தெரியபடுத்தி JNU வளாகத்தில் வலதுசாரி, இடதுசாரி அரசியல் என்பது வெற்று கோஷங்களாக இருப்பதை வெளிக்காட்டுகிறது. JNU வில் இடது சாரி அமைப்புகள் ஒன்று கூடியது வலது சாரிய அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காக இல்லாமல் மாறாக தங்கள் ஒடுக்கபட்ட அடையாளத்தை முன்னிறுத்தி (இடதுசாரிய இயக்கங்களின் அடிப்படை புரிதலான வர்க்க அடையாளம் மட்டுமே தேவையானது என்பதை மாற்றி வரும்) எழுச்சி பெறும் விளிம்பு நிலை மக்களின் அரசியலை சமாளிக்கவே என்ற உண்மை மாணவர்கள் மத்தியில் அங்கீகரிக்க படுகிறது. ABVP தொடர் தோல்வியை தழுவி வரும் நிலை தெரிவிப்பது யாதெனில் JNU வில் மாறி வரும் அரசியல் களம் இடது சாரி விட்டு வலது சாரியாக மாறாமல் இடதுசாரிய அமைப்புகளின் (தேர்தலுக்காக உருவான) அடையாள ஒற்றுமை அரசியல் விலகி ஒடுக்கபட்ட மக்களின் ஒன்றிணைந்த எழுச்சி என்ற அரசியல் கோட்பாட்டை முன்னோக்கி செல்கிறது என்பதாகும்.
தற்போது நடந்த தேர்தலில் இரண்டு விதமான சாதிய மற்றும் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தை இடது சாரிய இயக்கங்கள் மேற்கொண்டனர். ஒரு பக்கம் முஸ்லிம் மாணவர்களிடம் BAPSA அமைப்பு BSP கட்சியால் உருவாக்கபட்டது. BSP கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் இன்னொரு பக்கம் Fraternity சாதிய, இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்களின் கட்சி என்றும் அவர்களுக்கு வாக்கு செலுத்தினால் ABVP யை வெல்ல முடியாது என்றும் பிரச்சாரம் செய்தனர். இவ்விரண்டு வாதங்களிலும் தங்களை சாதிக்கு எதிராக, முஸ்லிம் விரோத அரசியலுக்கு எதிராக இருப்பது போல் காண்பித்து கொள்ளும் JNU இடது சாரிகள் இவ்விரண்டு பிரச்சனைகளை அனுபவிக்கும் மக்களை அரசியல் உள்ளுணர்வாளர்களாக (political subjectivity) முன்னிலைப் படுத்தும் உரிமையை ஏற்க மறுப்பதன் மூலம் இவர்களின் அரசியல் புரிதல் சாதிய, முஸ்லிம் விரோத சிந்தனையில் இருப்பதை தெளிவு செய்கிறது. சமூக அறிவியல் துறையில் நாம் அடைந்து வரும் தொடர் தேர்தல் உயர்வு இடது சாரிகளின் சாதிய,முஸ்லிம் விரோத கருத்து திணிப்பு முடிவுக்கு வருவதை சுட்டிக்காட்டுகிறது.
JNU வின் கடந்த காலங்களில் ஒரு சில முறை தான் ஒடுக்கபட்ட மக்கள் தங்கள் அரசியல் உணர்வை தன்னாட்சி (பிற கட்சியின் கைப்பாவையாக இல்லாமல்) அரசியல் அமைப்பாக உருவாக்கி வெற்றிகரமாக அணி திரண்டனர். All india bahujan students federation(AIBSF), கேம்பஸ் ஃப்ரண்ட் போன்ற இயக்கங்களின் தேர்தல் சந்திப்புகள் JNU வளாகத்தில் ஒடுக்கபட்ட மக்களின் அரசியலை முதன்முதலாக பதிவு செய்தது. ஆனால் தொடர்ந்து அவர்களால் செயல் பட முடியாமல் போனது. புரட்சிகர அரசியல் குறிக்கோள்களுடன் களம் கண்டும் அரசியல் ஆளுமை மற்றும் நிலைத்தன்மையை தக்க வைக்க தேவைபடும் மனித,பொருளாதார வளம் உருவாக்குவது போன்றவை அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. BAPSA – Fraternity கூட்டணி மேற்கண்ட அனுபவங்களை படிப்பினையாக ஏற்று கொண்டால் வரும் காலங்களில் தற்போது அடைந்து வரும் அரசியல் கருத்துருவாக்க வெற்றியை தேர்தலில் பிரதிபலிக்க செய்ய முடியும்.
BAPSA துவங்கி 5 ஆண்டுகளும், Fraternity இந்த ஆண்டு தனது முதல் பயணத்தையும் தொடங்கியுள்ளது. குறுகிய காலத்திலேயே மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இனி தாங்கள் மட்டும் தான் மக்களின் பிரச்சனைகளைப் பேச முடியும் என்ற மேதாவித்தனத்தை இடது சாரிகளால் வெளிபடுத்த முடியாது. குறிப்பாக ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக விடுதலையை நோக்கி மாற்று மதம், பார்ப்பனிய எதிர்ப்பு வழிபாடு போன்ற யுக்தியை பயன்படுத்தும் போது அதை வறட்டு நாத்திக enlightment தத்துவங்களைக் கொண்டு எதிர்த்து தங்கள் அறிவிலி தன்மையை நிரூபிக்கும் JNU இடதுசாரிகளுக்கு ஒடுக்கப்படும் மக்களின் குரலாக பேச எந்த நியாயமும் இல்லை.
இஸ்லாமிய அரசியல் எதிர்ப்பு பிரச்சாரம் போன்ற புளித்துப் போன சூழியலுக்கு பொருந்தாத மேற்குலக இன வெறியில் தோன்றிய பிரச்சாரத்தை JNU இடது சாரிகள் முன்வைக்கின்றனர். நமது அரசியல் பயணம் இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற இடது சாரிகளின் வன்ம பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும். இஸ்லாமியர்களின் அரசியல் பேசப்படுவதை காட்டிலும் முஸ்லிம்கள் அரசியல் அமைப்பாக திரள்வதையே JNU இடது சாரிகள் பெரும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். இது இந்திய அரசியலில் முஸ்லீம்கள் வாக்காளர், வாக்கு வங்கி என்று சுருங்காமல் அரசியலில் ஆக்கப்பூர்வமாக பங்கு கொள்வதை அச்சுறுதலாக பார்க்கும் மனப்பான்மையின் வெளிப்பாடு ஆகும். இதில் இடது சாரி அரசியலும் அடங்கும். BAPSA, FRATERNITY கூட்டணியின் அரசியல் இந்திய சமூகத்தின் அடிப்படைக் கேள்விகளான சாதி, மதம்,பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எப்படி அணுகுவது என்ற படிப்பினையை JNU வின் இடதுசாரிகளுக்கு கற்றுத்தரட்டும்.
சாதிய, மத ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரளும் BAPSA, Fraternity யின் அரசியலை ஆக்கப்பூர்வ விவாதத்திற்கு உட்படுத்தாமல் இஸ்லாமிய வெறுப்புக் கண்ணோட்டத்தில் அணுகி பல்கலைக்கழக அரசியலை JNU வின் இடதுசாரிகள் தரம் தாழ்த்துகின்றனர். Bapsa, Fraternity க்கு அதிகரித்து வரும் வாக்குகள் இவர்களின் வெறுப்பு வாதங்கள் அனைத்தும் மாணவர்களிடம் தோல்வியை தழுவுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
JNU வில் இருக்கும் பிற மாணவ அமைப்புகள் ஆளும் கட்சிகளின் செல்வாக்கு,பின்புலம் போன்ற பலத்துடன் களமிறங்கியும் BAPSA – Fraternity கூட்டணி அது போன்ற துணை இல்லாமல் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை நடத்தி வருகிறோம். புதிதாக தோன்றினாலும் குறுகிய கால கட்டத்தில் JNU வளாகத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் BAPSA – Fraternity கூட்டணி அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி இலக்கை எட்ட முடியும் என்ற வலிமையான அரசியல் கருத்தை முன்வைக்கிறது. குறிப்பாக இந்த ஒருங்கிணைந்த அரசியல் ஆளும் பார்ப்பனிய சர்வாதிகார அரசுக்கு பெரும் நெருடலாக இருக்கும்.
JNU பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் முதல் மாணவர் தேர்தலில் விளிம்பு நிலை மக்கள் தங்களின் அரசியல் பேசும் தன்னாட்சி அமைப்பின் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகக் கருதபட்டது. அந்த நிலை மாறி விளிம்பு நிலை மக்களின் விடுதலை அரசியல் மாணவர் தேர்தலில் ஒருங்கிணைந்த கூட்டணியாக எழுச்சி பெற்றது என்ற வரலாற்றை பறைசாற்றும் தேர்தலாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளது.
எங்களின் எழுச்சி அரசியலை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஜெய் பீம், ஜெய் மீம், இன்ஷா அல்லாஹ்.
-வாசீம் ஆர்.எஸ்
மொழிபெயர்ப்பு:
உமர் ஃபாரூக்,
ஆய்வு மாணவர்,
JNU