கலையின் தோற்றம் மக்களின் கூட்டுப் பங்களிப்பால் உருவம் பெற்றது. அது அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது. மனிதனின் அறிதல் திறனின் வளர்ச்சி அறிவியலானது போல், உணர்ச்சித் திறனின் வளர்ச்சி கலையாகியது. ஆதலால், இரண்டும் அதனளவில் மக்களுக்காகச் செயல்படுவதே அடிப்படை இயக்கம். இன்று, சில முற்போக்கு இயக்குநர்கள் அல்லது எழுத்தாளர்களே, ‘என் படைப்பைக் குறிப்பிட்டவர்களுக்குத்தான் எடுத்தேன். அவர்களிடம் அது சென்றடைந்தால் போதுமானது. அந்த சிலர் அதனை அறிந்து என்னைப் பாராட்டினாலே எனக்கு போதும்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். தமிழில் மிஷ்கின் முதல் விசாரணை பட வேளையில் வெற்றிமாறன் வரை இதைச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியலை எப்படி அனைவருக்குமானதாக விளிம்புநிலை மக்கள் வரை கொண்டு சேர்ப்பது அவசியமோ, அந்தளவிற்குக் கலையையும் சேர்ப்பது தேவை. மக்களிடமிருந்து உருவாகிய கலை அதைத் தவறும்பட்சத்தில் தனது உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்கிறது. அதனை உருவாக்கியவனும் கலைஞன் என்ற சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் குறிப்பிட்ட வணிக தேவையை நிறைவு செய்பவனாகிறான். எஸ்.பி. ஜனநாதன் தனது படைப்புகள் மக்களுக்கானவை என்று முழங்கியவர். அதன் அரசியலைத் தாங்கி நின்ற அவரது சினிமாக்கள் சமூகத்தின் பிரதிநிதி ஒருவனின் பங்களிப்பாக வெளிப்பட்டது.
தமிழ் சினிமாவில் இடதுசாரிய அரசியல் பேசியவர் என்பது எஸ்பி ஜனநாதனின் அடையாளம். அவரின் பின்னிரண்டு படங்களான பேராண்மையிலும் புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்திலும் அதன் பிரச்சாரம் வெளிப்படையாக இருக்கும். முதலிரண்டு படங்களான இயற்கையும் ஈயும் எதார்த்த நீரோட்டத்தோடு பயணிப்பவை. அழகியல் தன்மையிலும் கூடுதல் சிறப்பை பெற்றவை. அதே நிலையில் தமிழ் சினிமாவின் பொது ஒழுங்கை மறுத்தவை.
தமிழ் சினிமா பார்ப்பனிய மரபையும் காலனிய அறத்தையும் கொண்டது. ஆரம்பக்கால சில திராவிட இயக்க சினிமாக்கள் இதற்கு விதிவிலக்கு என்றாலும் பின்னாட்களில் அவையும் முழுவதுமாக உடன்பட்டன. தேசியவாதம், ஆண் மையவாதம், கலாச்சார மேட்டிமைவாதம் போன்றவைதான் தமிழ் சினிமாவின் அடித்தளம். மேற்கத்தியக் காலனிய சிந்தனையைக் கொண்டதால் அரசியல், வன்முறை, சமூக உறவுகள் போன்றவற்றில் ஹாலிவுட்டை முன்மாதிரியாகக் கொண்டது. உதாரணத்திற்கு ஒரு திருடன் கொடூரமானவனாகவும், வர்க்க அடிப்படையில் அடித்தளத்தைச் சார்ந்தவன் மட்டுமல்லாமல் கலாச்சாரத் தளத்தில் கீழ்நிலையிலும், வட்டாரப் பெயர்களைக் கொண்டவனாகவும் இருப்பான். இதுபோன்ற ஒவ்வொரு விஷயத்திலும் சில வழமையான மாதிரிகளை பொது ஒழுங்காகக் கடைப்பிடித்தது தமிழ் சினிமா.
பெண் மற்றும் அவள் சார்ந்த சமூக உறவுகள் என்பதில் தமிழ் சினிமாவின் சித்திரம் பார்ப்பனிய கலாச்சாரத்தையும் நிலவுடைமை கண்ணோட்டத்தையும் கொண்டவை. பெண் பண்டமாகவும் முற்றிலும் ஆணுக்கு அடிபணிந்தவளாகவும் இருப்பதே இங்கு அறம். சிறந்த உதாரணம் படையப்பா படம். ஒரு பெண் பற்றிய உரையாடல் காதலுக்கு மரியாதை காலத்திலிருந்து சந்தானம் காலம் வரை அபத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். காதலுக்கான வரையறைகளும் அப்படித்தான். மேலும், காதல், திருமணம், பிற தனிமனித உறவுகளில் பல புனித கட்டமைப்புகள் புகுத்தப்பட்டன. நாயகன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவன் நாயகன் என்பதற்காகவே காதல் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்திய இங்கு, சமூக உறவுகள் செயற்கைத் தன்மையில் வடிவமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு மௌனராகம் படத்தை எடுத்துக்கொள்ளலாம். மோகன் செய்யும் அனைத்து தியாகங்களும் பார்வையாளனின் சோக கழிவிரக்கத்தைக் கோரும். அவனைப்போல் ஒரு நல்லவன் இல்லை என்ற உடன்பாடு அவர்களின் இணைவதற்கான நிபந்தனையாக உள்ளது. அதேபோல் கதாபாத்திரம் ஒருவரை நிராகரிக்க அவரை பார்வையாளர்களின் வெறுப்பிற்குரியவனாக மாற்ற வேண்டியுள்ளது.
ஆனால், இயற்கையில் நாயகிக்கு முன் இரு நல்லவர்கள் இருப்பார்கள். அவள் ஒருவனைத் தேர்ந்தெடுக்க மற்றொருவனின் பாத்திரத்தை இயற்கை சிதைக்கவுமில்லை, அவள் தேர்வின் மீது பார்வையாளர்களை முரண்படவும் வைக்கவில்லை. உணர்ச்சிக் குவியலின் மகத்தான சிந்தனையாளன் தஸ்தாயெவ்ஸ்கி நம் தேர்வுகள் மீது பல விசாரணைகளைப் புரிந்துள்ளார். வெண்ணிற இரவுகளின் கருப்பொருளை அழகியலாகத் திரையில் வடித்ததுதான் இயற்கையைச் சிறந்த இறுதிக் காட்சிகளில் ஒன்றாக நினைகூற வைக்கிறது. அந்தக் காதல் தோல்வியும் கடல் கடந்து பயணிப்பவனின் ஓர் கரைதானே தவிர, அவனின் வாழ்வு கடலைப்போல் எல்லையற்றது. இதனைக் குறிப்பிடும்போது ‘காதலுக்காகவும் சாகக்கூடாது, காதலிக்காமலும் சாகக்கூடாது’ என்பார் ஜனநாதன்.
ஈ படத்தில் நெல்லை மணியை (பசுபதி) முதன்முதலாகக் காண நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் ஜீவாவும் கருணாஸும். அப்பொழுது, திடீரென்று நீதிமன்ற வளாகமே பரபரப்பாகும். வாகனங்கள் வரிசைக்கட்டும். அப்பொழுது ஜீவா கருணாசிடம் இவ்வாறு சொல்வார், ‘ஒரு வேளை சங்கராச்சாரியார் கேஸ் வாய்தாவா இன்னைக்கு…’ வைதிக தர்மத்தைச் சிறிதும் கேள்வி கேட்கத் துணியாத, இன்றும் சங்கராச்சாரி போன்றவர்களைப் புனிதமாக அடிப்பணியும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் இப்படியொரு வசனம் வைத்ததுதான் ஜனாவின் தனித்துவம். ஈ படம் வெளியான சமயத்தில் காஞ்சி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைது செய்யட்டிருந்தார். மிக எளிதாகக் கடந்து சென்ற இந்த வசனம் அவரின் நிலையைத் தோலுரித்தது.
எஸ்பி ஜனநாதனின் சினிமா பிரச்சார பாங்கிலானவை என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், மேற்கூறியது போன்ற மிகவும் எளிய காட்சிகளில் சமூக எதார்த்தத்தைப் போதிக்கும் அவரின் நுட்பம் கவனிக்க வேண்டியது. அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிரான ஜனநாதன் ஈ படத்தில் ஒரு நக்சலைட்டின் கையில் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தைக் கொடுத்திருப்பார். இந்தியாவில் இடதுசாரியமும் காந்தியமும் எந்தளவிற்கு உடன்பட வேண்டியவை என்று இதுகுறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பெரிதும் மேற்கோள் சினிமாவாக உருவான புறம்போக்கு படத்திலும் மெக்காலே பாத்திரம் காலனிய சிந்தனை அதிகாரத்தின் அறமாகவும் விஜய் சேதுபதியின் பாத்திரம் அதன் நுகர்வை மறுக்கும் மூன்றாம் உலகின் பாமரனாகவே இருக்கும். பேராண்மையில் ஐந்து பெண்களில் அஜிதா மட்டும் துருவன் மீது கரிசனம் கொள்வதற்குக் காரணம் ஏதுமில்லாமலில்லை. அவள் மற்ற நால்வரைப்போல் மேனிலை சாதியத் திமிரைக் கொண்டிருக்கவில்லை. காரணம், அவள் இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து வந்த வர்க்க நிலையில் ஒரு டெய்லரின் மகள். இதுதான் இந்திய எதார்த்தம். இஸ்லாமியர்களின் வாழ்வியலையே அடிப்படைவாதமாகவும் அச்சுறுதலாகவும் அணுகும் இதே தமிழ் சினிமாவின் ஈ படத்தின் இஸ்லாமிய-இந்து கலவைக் குடும்பத்தைக் காட்டினார் ஜனநாதன்.
ஜனநாதன் சினிமா சமூகத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அது அரசியல் நிலைப்பாட்டுடன் அதிகாரத்தை நோக்கிக் கேள்வியெழுப்பியது. மாறாக, எந்தவொரு சாமானியனையோ சமூக ஒருங்கிணைவையோ முரண்பட்டு நின்றதில்லை. அந்தவகையில் இந்த சமூகம் தமக்கான பிரதிநிதி ஒருவரை இழந்துள்ளது.
அப்துல்லா.மு