இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஆதிக்கம் வலிமையாக இருந்த காலம்.கல்கத்தா டெல்லி என வடக்கிலேயே தலைநகரங்களும் ராஜாங்க ரீதியான செயல்பாடுகளும் மையம் கொண்டிருந்தது. 1891ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு செயல் ஆட்சியாளரால் பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு கடிதம் எழுதப்படுகிறது.அந்த கடிதம் இரண்டாயிரமாண்டு கால இந்திய சமூகத்தின் மனசாட்சியை கேள்விக் கேட்கக்கூடியதாக அமைந்தது.தெற்க்கே பரிந்துரைக்கப்பட்ட ஒரு சட்டம் மொத்த இந்தியாவையும் ஆச்சரியமடைய செய்தது.
வர்ணாசிரம முறையில் நால் வர்ணத்திற்கு வெளியே வைத்து பார்க்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.உழைக்கும் மக்களான பெரும்பான்மை சமூகத்தினர் கல்வி,இருப்பிடம்,சமூக அந்தஸ்த்து என அனைத்திலும் ஒதுக்கப்பட்டு தீண்டதாகாதவர்களாகவே பார்க்கப்பட்டனர்.இதுப்பற்றி,
“அவர்கள் மிக மோசமான ஊட்டச்சத்து பற்றாக்குறையோடே எப்போதும் வாழ்கிறார்கள், எதோ கந்தல் துணியையே உடுத்திக்கொண்டு இருக்கிறார்கள், தொழுநோயோ, பிற மோசமான நோய்களோ அவர்களைத் தின்கிறது, அவர்கள் பன்றிகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள், கல்வி மறுக்கப்பட்டு, கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.இந்த மக்கள் சமூகத்தைப் பரம்பரையாகத் தொடரும் அடிமை முறைகளில் இருந்தும், சட்ட ரீதியான தடைகளில் இருந்தும் ஆங்கிலேய அரசு மீட்டிருக்கிறது என்றாலும், இன்னமும் சமூகச் சீர்குலைவில் சிக்கி கடைமட்டத்தில் கிடக்கிறார்கள் .கந்தல் துணியும் சுகாதாரமற்ற உணவும் இருப்பிடமுமே அவர்கள் வாழ்வியலாக உள்ளது.” என்று தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் ‘ஜேம்ஸ் ஹென்றி அப்பீர்லி டெர்மென்ஹீர்’.
நம் இந்திய சூழலில் நிலம் என்பதே ஆதிக்கத்தின் அதிகார முகமாகவே இருந்தது.பண்ணையார்களும் மிராசுதார்களுமே நிலத்தை ஆள்பவர்களாக இருந்தார்கள்.அவர்கள் பெரும்பாலும் ஆதிக்க ஜாதினராக மட்டுமே இருக்க முடியும்.எனவே தனது அறிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் சமூக ரீதியில் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தன் அறிக்கைக்கான நோக்கத்தை பதிவு செய்தார் டெர்மென்ஹீர்.இந்த அறிக்கை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 1892 மே 16 அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிலம் வழங்க வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதன்படி இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு 2 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது Depressed Class Land எனவும்,தமிழில் பஞ்சமர்களுக்காக வழங்கப்பட்ட நிலம் என்பதால் பஞ்சமி நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.இதை பிறர் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பிரிட்டிஷ் வருவாய் துறையினால் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
என்ன விளையாடத் தெரியும் என கேட்கும்பொழுது ஏதும் தெரியாதவர்கள் கூட கிரிக்கெட் என்று சொல்லி தப்பிப்பதுண்டு.அப்படி நம்மோடு ஒன்றிணைந்த பிரிட்டிஷ் கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர் இந்த பிரிட்டிஷ் கலெக்ட்டர். ரைட்-ஹாண்ட் பேட்டிங்,ரைட்- ஆர்ம் பௌலிங் என பள்ளிக்காலம் முதல் ஆட்சி பணியில் அமரும் வரை டெர்மேன்ஹீரின் ஆரம்ப அத்தியாயங்கள் கிரிக்கெட்டால் நிரம்பியவை.1853ம் ஆண்டு பூனாவில் (புனே) பிறந்த இவர் லண்டனில் கல்வி கற்றார்.அப்பொழுது இந்தியர்களே ஆட்சிப்பணி,பாரிஸ்டர் போன்ற கல்விகளுக்கு இங்கிலாந்தில்தான் கற்க வேண்டும். ஆட்சிப்பணி பயிற்சியை முடித்துவிட்டு 1875 ம் ஆண்டு இந்தியா திரும்பும் டெர்மென்ஹீர் மெட்றாஸ்,மைசூரைத் தொடர்ந்து 1891ம் ஆண்டு செங்கல்பட்டு ஜில்லாவின் செயல் ஆட்சியாளராக அமைக்கிறார்.அப்பொழுது அவர் பரிந்துரைத்த அறிக்கை ஆண்டாண்டு கால கருப்பு பக்கங்களின் வெள்ளை புள்ளியாக அமைந்தது.
ஒவ்வொருவனும் தன் வாழ்வின் உச்சபட்ச லட்சியமாக தனெக்கென ஒரு உடைமை.தாம் சுயமாக சுயமரியாதையாக வாழும் வாழ்க்கை.பேராசை அல்ல,பெறவேண்டிய உரிமை.அதில் பிரதானமானது ஒருவனுக்கான நிலம்.இந்த உலகில் தன் இருப்பை,தன் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் அதிகாரம். நிலம் என்பது எப்படி ஒருவனின் வாழ்வியலை மாற்றும் என்பதற்கும் சமீபத்திய உதாரனானங்கள் பல காணலாம்.குறிப்பாக,காலா,மேற்கு தொடர்ச்சி மலை என நிலத்தின் அவசியத்தைப் பேசும் திரைப்படங்கள் இப்பொழுது வர ஆரம்பித்துள்ளனர்.அதிகாரமும் ஆணவமும் கொண்ட நிலவுடைமை சமுதாயத்தில் அதைப் பற்றி நினைத்தாலே பாவம் என்று ஒதுக்கி வைத்திருந்த சமூகத்தின் உரிமையை அடைய முதற்காரணமாய் அமைந்தார் ஜேம்ஸ் டெர்மென்ஹீர்.
அப்துல்லா.மு