ரஜினியை சந்தித்த உலமாக்களை மிகக் கேவலமாகவும் தரம் குறைந்தும் திட்டி ஏராளமான பதிவுகள் பார்க்க முடிகிறது. தரக்குறைவான வார்த்தைகள் தெளிக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.
ரஜினியைச் சந்திப்பதில் எந்தப் பயனும் பெரிதாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் சந்தித்தவர்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்கவில்லை. உலமாக்கள் சிலர் அவரைச் சந்தித்துள்ளனர்.
ரஜினி அரசியலில் வரப்போகும் செய்தி ஒரு மாமாங்க காலமாக ஓடிக் கொண்டுள்ளது. இன்று அது அதிகம் பேசப்படுகிறது நமது ஊடகங்கள் அவரது கருத்துக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்த நிலையில் மிகப்பெரிய அரசியல் ஆபத்தொன்றால் சூழப்பட்டுள்ள முஸ்லிம் மதத் தலைவர்கள் சென்று பார்த்ததை இவ்வளவு ஆபாசமான சொற்களில் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
முஸ்லிம்கள் இப்போது நம்பத் தகுந்த அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் என்ன மாதிரி அறிவுரையை தி.மு.கவிற்கு அளிப்பார்கள் என்பது யாரும் ஊகிக்கத் தக்கதே. ஏற்கனவே அவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன மாதிரி அறிவுரை பகிர்ந்தார்” என்பது கவனத்துக்குரிய ஒன்று.
” எந்தக்காரணம் கொண்டும் முஸ்லிம் ஆதரவை நீங்கள் காட்டிக் கொள்ளக் கூடாது ” என்பது அவரது அறிவுரைகளில் முக்கியமானது. அதை கெஜ்ரிவால் அப்படியே பின்பற்றினார். ஸாஹின் பாக்கிற்குப் போகக் கூடாது என்பதும் அவரது அறிவுரைகளில் ஒன்று. அதையும் கெஜ்ரிவால் சிரமேற்கொண்டு செயல்பட்டார்.
அவர்களின் ‘லாஜிக்’ இதுதான். முஸ்லிம் களுக்கு வேறு வழியே இல்லை. இருக்கும் கட்சிகளில் அவர்கள் பாஜக வுக்கு ஓட்டுப் போட முடியாது. காங்கிரசுக்கோ வாய்ப்பே இல்லை. எனவே முஸ்லிம்கள் கெஜ்ரிவாலுக்குத்தான் வாக்களித்தாக வேண்டும் என முஸ்லிம்களின் இன்றைய கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றியும் பெற்றனர் கெஜ்ரிவாலும் கிஷோரும்.
இங்கும் அதுதான் அவர்களின் தேர்தல் ‘ஸ்ட் ராடஜி’ யாக முன்வைக்கப் படுகிறது என்பதை திமுகவின் இன்றைய நடவடிக்கைகளைப் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும். ராஜ்ய சபா தேர்தலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, திமுக தலைவர் ஸ்டாலின் வாண்ணாரப் பேட்டைக்கு ஒரு முறை கூடச் செல்ல முடியாது எனப் பிடிவாதம் பிடிப்பது முதலானவை இதற்குச் சான்றுகள்.
இந்நிலையில் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அவரைச் சந்திக்காதே, இவரைச் சந்திக்காதே, அதைப் பேசாதே, இதை விமர்சிக்காதே என்றெல்லாம் அறிவுரைப்பது ஆபாசமாக எழுதுவது என்பதெல்லாம் மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று.
எல்லாச் சாத்தியங்களையும் பயன்படுத்தி இன்று மோடி அரசின் இந்தக் குடியுரிமை அழிப்புச் சட்ட ஆபத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதே இன்றைய முக்கிய நோக்கமாக இருப்பது அவசியம்.
அ.தி.மு.க தலைமை தம்மைச் சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளை NPR இல் தவிர்ப்பதற்காக மத்திய அரசிடம் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளதாக அறிகிறோம். மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால் அதை மீறி சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்ப்பதாகவும் சொல்லி வருவதாகக் கேள்வி. ஆனால் மத்திய அரசு மறுத்தால் அதை மீறும் துணிவு அதிமுக வுக்கு இருக்கும் என நான் நம்பவில்லை. எனினும் எல்லாச் சாத்தியங்களையும் நாம் கணக்கில் கொள்வது அவசியம்.
நமக்கு வேறு வழியே இல்லை என்கிற ஒரு பிம்பத்தை ஏற்படுதற்கு நாமும் ஒத்துழைப்பதில் பயனில்லை.
-அ.மார்க்ஸ்,எழுத்தாளர்