பதினேழு மாதம் கடும் சிறைவாசம், பக்கவாதம் உட்பட உடல்நிலை துன்பியல் அனைத்தையும் கடந்து மனைவியையும் தனது மூன்று பிள்ளைகளையும் காண 90 நாள் இடைக்கால பெயிலில் வந்தார் முகமது சஹித். தோள்பட்டையில் குண்டடிபட்டு சிறையில் உடல்நலம் முற்றிலும் சீர்கெட்ட சஹிதின் மருத்துவ உதவிக்காகவே அவரும் அவர் மனைவி சஜியா பர்வீனும் மாதக்கணக்கில் போராட வேண்டியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி பக்கவாத தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே சஹிதுக்கு இடைக்கால பெயில் கிடைத்தது.
கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 16 பிரிவுகளின் கீழ் சஹித் மீது வழக்குப் போடப்பட்டது. வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பங்கேற்றவர்கள் என்று கைது செய்த முஸ்லிம்களில் ஒருவர். நம்பகமற்ற குற்றச்சாட்டில் கைதான இவர்கள் விசாரணையின்றி சிறையில் கழிக்கிறார்கள். 53 உயிரிழப்பு (அவர்களில் 75% பேர் முஸ்லிம்கள்), 581 பேர் படுகாயம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் உடைமை இழப்பிற்குக் காரணமான இக்கலவரத்தை சிஏஏ போராட்டக்காரர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியதாக போலீஸ் கூறியது. ஆனால் கீழ்த்தரமான வஞ்சக நோக்கத்துடன் விசாரணையை நடத்துவதாக காவல்துறையைக் கண்டித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஒரு குடும்பத்தின் ஆதார வருவாயை அளிக்கும் உறுப்பினரைச் சிறையிலடைத்த பிறகு, வறிய அவர்களின் தாய்மார்களும் மனைவிகளும் நீதிமன்ற அறைக்கும் வழக்கறிஞர் அலுவலகங்களுக்கும் அலைந்து திரிந்தனர். இதற்கான, கட்டுக்கடங்காத செலவுடன் மன உளைச்சலுக்கும் அதிக விலை கொடுக்க நேரிட்டது.
வடகிழக்கு டெல்லி ஜாப்ராபாத் ஜன்தா காலணியின் தனது இல்லத்திலிருந்து 2020ம் ஆண்டு பிப்.25ம் தேதி கலவரத்தின்போது வெளியே வந்த சஹித், வீட்டில் மற்றவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஒரு ஆட்டோவை கண்டடைந்து தப்பிவிட எண்ணினார். முகத்தை மூடி கையில் கத்தி மற்றும் பெட்ரோல் குண்டுடன் ‘ஹரஹர மஹாதேவ்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கியபடியே ஜந்தா காலணியை நோக்கி விரைந்தது ஒரு கும்பல். சஹித்தின் பின்புறத்திலிருந்து வந்த புல்லட் அவரது வலது தோள்பட்டையைத் தாக்கியது. போலீஸ் மற்றும் காலவரகாரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததால் சஹிதை சுட்டது யாரெனத் தெரியவில்லை. அலை மோதும் கூட்டத்தால் தாக்கப்பட்ட சஹித் சாலையில் விழுந்துகிடந்தார். யாரோயொருவர் அவரை 5 கிமீ தொலைவில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் சேர்த்தார். 9 நாட்கள் சஹித் அங்கே இருந்தார். எலும்புகளில் ஆழமாகத் துளைத்த புல்லட் துகள் அதிகம் ரத்த பெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆப்பரேஷன் செய்யத் தயங்கிய மருத்துவர்கள் புல்லட்டுடனே கூட வாழ வேண்டிய நிலையிருக்கலாம் என்று கூறினர்.
வீடு திரும்பியவர் வலியின் அவஸ்தை தாங்க முடியாமல் ஓக்லாவில் உள்ள அல் சிஃபா மருத்துவனமையில் சேர்க்கப்பட்டு பின் தோளில் கட்டுடன் ஏப்.5 வீடு திரும்பினார். இரண்டு நாளுக்குப் பிறகு சஹிதின் சகோதரர் தெருவில் நடக்கும்போது சஹிதின் பேரைச்சொல்லி ஒருசிலர் அக்கம்பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடையில் இல்லையென்றாலும் போலீசைப் போலவே இருந்தனர். இறுதியாக, 16 பேர் தங்கள் வீட்டின் கதவைத் தட்டி சஹிதை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர், ஜாப்ராபாத் காவல்நிலையத்திருக்கு வந்து அழைத்துச் செல்ல கூறினர்’ என்கிறார் சஹித் தாயார் புஷ்ரா. காவல்நிலையம் சென்றால் அவரை காணவில்லை. பின்னர் அழைக்கப்பட்ட சஜியா, அவரது சகோதரர் ரவூப் மற்றும் நசீம் அங்கிருந்து 2 கிமீ தொலைவிற்கும், பிறகு, 40 கிமீ தொலைவிலுள்ள வர்கா குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கும் வரச்சொல்லி அலைக்கழிக்கப்பட்டனர். இரவு 7 மணி வேளையில் தனது மனைவிக்கு போன் செய்த சஹித், ஆர்கே புரம் குற்றப்புலனாய்வு மையத்தில் இருப்பதாகவும் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றிருக்கிறார். ஆனால், அவர் மோசமான பிரச்சனையிலேயே இருப்பதாக நினைத்தார் சஜியா.
பதினாறு பிரிவுகளில் சஹித் மீது எப்ஐஆர் தாக்கல் செய்த போலீஸ், அவரை 14 நாட்கள் மண்டோலி சிறையில் அடைத்தது. சஹித் மீது போடப்பட்ட கொலைக்குற்ற வழக்கு, டென்ட் வாலா பள்ளி அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த அமான் அஹமது என்ற 18 வயது நபரை அவர் கொன்றார் என்பது. சம்பவத்தின் போது டென்ட் வாலா பள்ளியிலிருந்து 700 மீட்டர் ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே இருந்த சஹித், கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் அருகிலிருந்ததாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோவை மட்டுமே எப்ஐஆரில் காட்டியது போலீஸ். அமான் அஹமது கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரும் முஸ்லிம்கள். டெல்லி கலவரமே முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை என்றது டெல்லி சிறுபான்மையினர் கமிஷன்.
எட்டாவது வரை பயின்ற சஹிதின் மனைவி சஜியா முன்புவரை வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. ஆனால், இன்று போலீஸ் விசாரணையின் தன்மைகளை எடுத்துரைக்கிறார், தன் கணவர் கைதான வழக்குகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார். தானும் தனது மூன்று குழந்தைகளும் இன்று பிறர் கருணையினாலேயே உயிர் வாழ்வதாகக் கூறுகிறார். மகனின் அறுவை சிகிச்சை, மகளின் டைபாய்டு காய்ச்சல், தனக்கு சிறுநீர்ப்பையில் கட்டி என்று சஹித் கைதுக்குப் பிறகு சொல்லொண்ணா துயரைச் சந்தித்து வருகிறார் சஜியா.
மண்டோலி சிறையில் சரியான சிகிச்சையாக்காமல், வலி நிவாரணி கொடுத்தே உறங்க வைத்தார்கள் என்கிறார் சஹித். மருத்துவ குறைபாட்டால் தான் இறக்கப்போவதாகவும் அதை குடும்பத்திடம் சொல்லாமல் மறைப்பதாகவும் கூறுகிறார். சிறையில் இரண்டு முறை மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் சஹித். சீலாம்பூர் அருகே நடந்த ஒரு படுகொலைக்குக் காரணமானவர் என்று ரயீஸ் அஹமது என்பவரை போலீஸ் கைது செய்தது. அவர் சஹிதுடன் சிறையிலிருந்தவர். ‘ரயீசுக்கு எதிரான எவ்வித முதற்கட்ட ஆதாரமுமில்லை என்று கூறிய டெல்லி நீதிமன்றம் 11 மாதம் கழித்து அவருக்கு பெயில் வழங்கியது. டெல்லி கலவர வழக்கை காவல்துறை கையாண்ட விதத்தை ‘முழுக்க தட்டிகளிக்கும் போக்கு’, ‘உள்நோக்க வன்மம் கொண்டது’, ‘வழக்கமற்றது’, ‘காண்பதற்கே வேதனையாக உள்ளது’, சட்ட விதிகளையே முறைத்தவறி நடத்துவது’ என்று கண்டித்தது நீதிமன்றம்.
சிறையில் சஹிதின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. திடீர் மருத்துவ சிகிச்சைக்கும், கழிவறை உதவிக்கும் சக கைதிகள் உறுதுணையாக அழைத்துச் செல்கிறார்கள். சஹித் ஏதும் இறக்க நேரிட்டால் அவரது ரத்தக்கறை இந்த அரசின் கரங்களில் உள்ளது’ என்கிறார் ரயீஸ் அஹமது. முஸ்லிம்களை கொல்வதில் தொடங்கி, அவர்களில் அப்பாவிகளைச் சிறையிலடைப்பதில் இந்த கலவரம் முடிந்துள்ளாது என்கிறார் சஜியா.
தோள்பட்டையில் துப்பாக்கி குண்டுடன் சிறை வாழ்வையும் பரிசளித்த இந்த அரசின் சபிக்கப்பட்ட குடிமகனாயிருக்கிறார் சஹித். அவர் கூறும்போது, டெல்லி கலவரம் இரண்டு விஷயங்களை மட்டுமே செய்துள்ளது. முஸ்லிம்களைக் கொன்று குவித்தது. அதற்காக, முஸ்லிம்களையே சிறை வைத்தது.
Translation from Article 14.
தமிழில் – அஜ்மீ