தப்லீக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமைப்பு. ‘வானத்திற்கு மேலே இருப்பவற்றையும், பூமிக்குக் கீழே இருப்பவற்றையும் மட்டுமே பேசுவோம்’ என்ற கொள்கையின் கீழ், உலகக் கண்ணோட்டத்தை வைத்திருப்பவர்கள் தப்லீக் ஜமாத்தினர்; உலகம் முழுவதும் ‘வழிகேட்டிற்கு’ சென்ற முஸ்லிம்களை மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வரவழைப்பதே எங்கள் பணி என்று இயங்குபவர்கள். எந்த வித உலக அரசியலையும் இந்த மனிதர்களிடம் பேச முடியாது. பாபர் மசூதியை இடித்தது அநியாயம் என்று அவர்களிடம் ஒருமுறை வாதிட்ட போது, ‘பொறுமையைக் கடைபிடியுங்கள் பாய்’ என்று அறிவுறுத்தினார்கள். தப்லீக் ஜமாத்காரர்கள் தொழுகைக்கு அழைக்க தெருக்களில் நுழைந்தாலே, ’அல்லாஹ் போலீஸ் வர்றாங்க’ என்று சிறுவர்கள் எல்லாம் தெறித்து ஓடுவோம். இந்த அப்பாவிகள் மீது ‘கொரோனா ஜிஹாத்தில்’ ஈடுபட்டதாகத் தண்டனைக் கணக்கு எழுதியிருக்கிறது இந்தியாவின் இந்துப் பெரும்பான்மை கூட்டு மனசாட்சி.
இரு நபர்கள் சந்தித்தாலே, கைகுலுக்குவதும், கட்டியணைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தவிர்க்க இயலாத பண்பு. தப்லீக் ஜமாத்தினர் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒரே தட்டில் 5, 6 பேர் வரை உணவருந்துவார்கள். சகோதரத்துவம் என்ற பண்பைத் தொடர்ந்து வலியுறுத்துவோரின் பழக்க, வழக்கங்கள் தற்போது கொரோனா காலத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினரை முறையாக பரிசோதனை செய்யத் தவறிய, அரசுக் கட்டமைப்பு தற்போது இந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீது போடுகிறது.
இந்துப் பெருமை மீட்பு, இஸ்லாமிய வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது இந்துப் பெரும்பான்மை கூட்டு மனசாட்சி. கூட்டு மனசாட்சிக்குத் தீனி போடும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றன, பெரும்பாலான வட இந்திய ஊடகங்களும், மொழிபெயர்ப்பையும் நம்பியே வாழும் தென்னிந்திய ஊடகங்களும். கொரோனாவினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், மீண்டும் ‘ராமாயண்’ ஒளிபரப்பு செய்யப்படும் என்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மறுபக்கம், மற்றொரு இந்து சூப்பர்ஹீரோ ‘சக்திமான்’ மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. இந்து கலாச்சார வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு இவையெல்லாம் கொரோனா காலத்தில் நாஸ்டால்ஜியாவை உற்பத்தி செய்கிறது.
ராமாயண் என்பது வெறும் தொலைக்காட்சித் தொடர் அல்ல. அரசு செலவில் ஒளிபரப்பட்ட இந்தத் தொடர் வட இந்திய மக்களிடையே பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவதற்கு உதவியது என்பதையும், 1987 முதல் 1988 வரை, இந்துப் பெருமை மீட்புக்கு வலுசேர்த்தது என்பதையும் ஆனந்த் பட்வர்தனின் ‘In the Name of God’ ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது. ராமாயணத் தொடரால் பெருமையை மீட்க எண்ணிய இந்துக்களிடம், 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், “ராம ராஜ்ஜியம் அமைப்போம்” என்றார் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி. காங்கிரஸ் அன்று வெல்ல விரும்பிய இந்துப் பெரும்பான்மை கூட்டு மனசாட்சியை, இன்று ’ராமர்’ மோடியிடம் இருந்து வெல்ல முயன்று கொண்டிருக்கிறார் ‘அனுமார்’ அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி மார்லெனா ( இவர் ராஜ்புத் என்றாலும், இவர் மார்க்சிஸ்டாம்; மார்க்ஸ் + லெனின் = ’மார்லெனா’ என்று பெயர் சூட்டியுள்ளனர் இவரது பெற்றோர்) நிஜாமுத்தீன் மர்கஸ் பொறுப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்த போது, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருந்த டெல்லி காவல்துறை, ஜே.என்.யூ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், நிஜாமுத்தீன் மர்கஸ் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆணைகளுக்குப் பணிகிறது.
இன்று முஸ்லிம்கள் மீது கொரோனா பழியைப் போட்டிருப்பது போல, அடுத்து ஆனந்த் விகாரில் இருந்து உண்ண உணவு இல்லாமல், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களால் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொரோனா கொண்டு செல்லப்பட்டது என்று பழிபோடும் இந்து நாஜி அரசு. பி.ஜே.பி சொன்னபடி, ராமாயணம் பார்த்துக் கொண்டே, ஆம் ஆத்மி சொன்னபடி பகவத் கீதை படித்துக் கொண்டே, பால்கனியில் கைத்தட்டியபடி, அதையும் ஆமோதிக்கும் இந்துப் பெரும்பான்மை கூட்டு மனசாட்சி. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செய்துவிட்டு, கொரோனாவை இந்தியாவுக்குள் கொண்டு வந்த உயர்சாதி இந்துக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயிர் பிழைப்பர். இந்து கூட்டு மனசாட்சிக்கும், கொரோனாவுக்கும் முஸ்லிம்களும், தலித்களும், பிற உழைக்கும் மக்களும் பலியாவோம்.
- ர. முகமது இல்யாஸ்.