மக்களுக்கான சித்தாந்தங்கள் என கூறிக்கொண்டு இந்த உலகில் தோன்றியவை எல்லாம் மக்களை வஞ்சிக்கின்றன. அந்த சித்தாந்தங்களால் குறிப்பிட்ட சில வர்க்கங்களே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்களுக்கான விடுதலையை, விடியலைத்தான் என்பதை இன்று நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மக்களுக்கான விடியலைத் தருகிற ஒரே சிந்தனையாக இறைவன் வழங்கிய இஸ்லாமால் இருக்க முடியும்.
இன்று மக்களிடம் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியாக வழங்கிட முடியுமானால் அது இஸ்லாமால்தான் முடியும் என்பதை புரிந்துகொண்ட ஆதிக்கவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். அதனைத் தான் இஸ்லாமோஃபோபியா என்கிறோம்.
இந்த இஸ்லாமோஃபோபியா எவ்வளவு ஆபத்தானது, அதனை எதிர்த்து வலுவானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏன் அவசியமாகிறது. அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்த வேண்டிய அவசியம் என்ன? போன்றவற்றைக் குறித்து மிகவும் எளிமையாக மக்களிடம் விளக்கிட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழகத்தின் சார்பாக அறிமுகக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற எஸ்.ஐ.ஓ வின் மாநில உறுப்பினர்கள் மாநாட்டில் “இஸ்லாமோஃபோபியா: சில அடிப்படை புரிதல்கள்!” எனும் தலைப்பில் அறிமுகக் கையேடு வெளியிடப்பட்டது. புத்தகத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழகத்தின் முதல் மாநிலத் தலைவர் ஜனாப்.அப்துர் ரவூஃப் காலித் சாஹிப் அவர்களும், எழுத்தாளரும் எஸ்.ஐ.ஓ வின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினருமான சகோ.அஹமது ரிஸ்வான் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். நிகழ்வில் எஸ்.ஐ.ஓ தமிழகத் தலைவர் சகோ.சபீர் அஹமது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், வாணியம்பாடி கிளைத் தலைவர் ஜனாப். துஃபைல் அஹமது சாஹிப் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்வில் தமிழகத்தின் முதல் மாநிலத் தலைவரான ஜனாப்.அப்துர் ரவூஃப் காலித் அவர்கள் பேசும்பொழுது “இஸ்லாமோஃபோபியா இன்றைய உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தி இருக்கிறது என்பதை நமது அருகில் உள்ள அண்டைவீட்டார், பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் உரையாடும்போதே நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். சிறிது, பெரிது என இச்சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் இஸ்லாமிய வெறுப்பு திட்டமிட்டு புகுத்தப்படுவதும், அது ஏதாவதொரு சமயத்தில் வெளிப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனை சரியான முறையில் எதிர்த்து களமாட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதனை எஸ்.ஐ.ஓ சரியான முறையில் கையாண்டு வருகிறது. முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து சட்டம் கொண்டுவரக் கோரியது எஸ்.ஐ.ஓ தான். இந்தியா முழுவதும் இஸ்லாமோஃபோபியாவைக் குறித்து உரையாடல்களை மாணவர்கள் மத்தியில் எஸ்.ஐ.ஓ உருவாக்கி இருக்கிறது. தற்போது தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிமுகக் கையேடு தமிழகத்தில் பல்வேறு மக்களிடம் இஸ்லாமோபோபியா குறித்து தெளிவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கிறேன். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்திட எஸ்.ஐ.ஓ வினை வாழ்த்துகிறேன்.” என கூறினார்.