தமிழக தேர்தல் முடிவை ஒட்டி திமுக-அதிமுக இருகட்சிகளுக்கான சாதி ரீதியான வாக்குப்பதிவை ‘கருத்துக் கணிப்பின்’ ரீதியாக வெளியிட்டது இந்து இதழ். இது சமீபத்தில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. அதில், திமுகவிற்கு அதிகம் வாக்களித்த சமூகமாக இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் மற்றும் தலித்துகள் இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டது. இவர்களின் கடந்தகால அதிமுக வாக்கு வெகுவாக சரிந்துள்ளது. அதை வெறும் அதிமுக என்று காணாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்த மதவாத அரசியலுக்கு எதிரான சமூக நீதி அரசியலின் வெளிப்பாடாகவே காண வேண்டும்.
இஸ்லாமியர்கள்;
திமுக கூட்டணிக்கு அதிக வாக்களித்த முதல் சமூகமாக இஸ்லாமியர்கள் (69%) உள்ளார்கள். அதேநேரத்தில் அதிமுகவிற்குக் குறைவான அளவில் வாக்களித்தவர்களிலும் இஸ்லாமியர்கள்தான் முதலிடம் (24%). அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமியர்கள் இயல்பாக திமுக கூட்டணிக்கு வாக்களித்திருக்கலாம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அவற்றையும் கடந்து இஸ்லாமியர்களின் சமூக ஒருங்கிணைவின் வெளிப்பாடாகவே இதை நடத்திக் காட்ட முடிந்திருக்கிறது. மேலும், பாஜகவின் அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஆபத்தானது, ஆதலால் அவர்கள் கண்டிப்பாக அதை எதிர்க்க வேண்டும் என்று மொத்த பொறுப்பையும் இஸ்லாமியர்கள் தலையில் கட்டுவது ஒருவித நழுவல் அரசியல்.
இஸ்லாமியர்களுக்கு இணையான வன்முறை அரசியலைத் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதும் பாஜக நிகழ்த்துகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களின் பாஜகவிற்கு எதிரான அரசியல் இன்னும் போதாமையாக உள்ளது. இதற்கு, பெரும்பான்மைவாத உணர்வை வெகுஜன மக்கள் மீது கட்டமைத்த கட்சிகளுக்கும் பங்குண்டு. மக்களை அரசியல்படுத்துவதைத் தேர்தல் ஜனநாயக கட்சிகள் உள்நோக்கத்தோடு தவிர்த்தே வந்துள்ளன. ஆனால், இன்று பாஜகவின் அச்சுறுத்தல் ஒருவிதத்தில் இஸ்லாமியச் சமூக உணர்வைச் சாத்தியப்படுத்தி அவர்களை மதவாத வைரஸிற்கு எதிரான முன்களப் பணியாளர்களாக்கியுள்ளது. இதைப் பிற சமூகங்களும் உணரும் காலம் விரைவில் வரும்.
தமக்குப் பெருவாரியாக வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு திமுக அளித்த பிரதிநிதித்துவ அங்கீகாரம் குறைவுதான் எனும் ஆற்றாமையைப் பதிவு செய்தாக வேண்டும். ஏனெனில், மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்களுக்கு அளித்த பிரதிநிதித்துவத்தில் பாதிகூட இஸ்லாமியர்களுக்கு திமுக வழங்கவில்லை. கிறிஸ்தவர்களுக்குப் பின் சாதி என்ற தேர்தல் கணக்கு உள்ளது, இஸ்லாமியர்களுக்கு அது இல்லை என்ற பெரும்பான்மை மனநிலையை விட இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. ஆதலால், சமூக ஒருங்கிணைவுகளைக் கோரும் திராவிட அரசியலே தம் வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்ந்து திமுக செயல்படுவது அவசியம்.
தலித்துகள்;
தலித்துகளும் பாஜகவை ஆதரிக்கச் செய்கிறார்கள் என்றுகூறி ஆதிக்கச் சாதிகள் தம் நிலைப்பாட்டை நியாயம் கற்பிப்பதை மற்றொருமுறை தகர்த்துள்ளது தமிழகம். தலித்துகள் மத்தியில் இந்துத்துவ அரசியலை பாஜக விதைக்க முயல்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், உயர்சாதி மற்றும் ஆதிக்கச் சாதிகளை ஒப்பிடுகையில் அது குறைவு. தலித்தா அல்லது ஒரு ஆதிக்கச் சாதியா என்று வருகையில் பாஜக ஆதிக்கச் சாதியின் பக்கமே நிற்கும் என்பதை ஹாத்ராஸ் பயங்கரவாதம் வரை காணலாம். அப்படியிருக்கையில் ஒடுக்கப்படும் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் தலித் இயக்கங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வெகுஜன திராவிட அரசியலை மேற்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் சமூகநீதி அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலித் மக்களை அரசியல்படுத்துவதிலும், இந்துத்துவத்திற்கு எதிரான வலிமையான அரசியலை முன்னகர்த்தி செல்வதிலும் முனைவர் திருமாவளவனின் ஈடுபாடு முதன்மையானது. பல தேர்தல் தலித் பிரதிநிதிகள் பாஜகவின் சூழ்ச்சி அரசியலால் சிதறுண்ட நிலையில், திருமாவளவன் மட்டுமே வலிமையான தலைவராகக் களத்தில் நிற்கிறார். திமுகவின் வெற்றியில் அதிக வாக்குகளை அளித்த தலித்து மக்களுக்கும் திருமாவளவனிற்கும் பங்குண்டு. ஏனெனில், பாஜக அரசியலை விரும்பாத ஆதிக்க சாதியினர் கூட தலித் அரசியலைச் சுலபமாக அங்கீகரித்துவிடுவதில்லை. உதாரணமாக, இத்தேர்தலில் அதிக தனித்தொகுதிகளில் பொம்மை வேட்பாளர்களான அதிமுக தலித் வேட்பாளர்கள் வென்றதைக் குறிப்பிடலாம். திமுக அல்லது இடதுசாரிகள் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தலித் பிரதிநிதிகளின் அரசியலுக்கு எதிரான மனநிலையாகவும் இதனைச் சந்தேகிக்க முடிகிறது. தலித் அரசியலில் பெரிதும் பேசப்படும், அம்பேத்கர் இயக்கங்கள் அதிகம் கொண்ட அரக்கோணத்தில் கூட விசிகவின் கௌதம சன்னாவால் வெல்ல முடியவில்லை. உதயசூரியனில் நின்றாலும் அருந்ததியர்களின் தலைவர் அதியமான் தோற்கடிக்கப்பட்டார். அப்படியிருக்கையில், பொதுத் தொகுதிகளில் கூட மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களைத் தலித்துகள் ஆதரித்ததைக் குறிப்பிட வேண்டும். அந்தவகையில், மதவாதத்திற்கு எதிரான முதல் வரிசையில் நிற்பவர்களாக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளே இருந்துள்ளனர்.
அப்துல்லா.மு