2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாடு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டை அச்சறுத்தும் வகையில் அதிகரித்து வரும் மக்கள்தொகை ‘பெருவெடிப்பை’ குறித்து சில கருத்துக்களைச் சொன்னப் பிறகுதான் இந்த அறிவிப்பு வந்தது. உண்மையில் அப்படியொரு ‘பெருவெடிப்பு’ இந்தியாவில் இல்லை; எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நமது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (மொத்த கருவுறுதல் விகிதம்) குறைந்து வருவதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகை ஒருநிலைப்பட்டு கட்டுப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புள்ளி விவரக் கணக்குகளும் ஆவணங்களும் அல்ல, பெரும்பாலும் இன பேதங்கள்தான் சங்பரிவார்களின் இன வெறி அரசியலின் முதுகெலும்புகள் . இயல்பாகவே, இந்துத்துவா வாதிகள் இந்தச் சொற்பொழிவுக்கு பெரும் விளம்பரம் கொடுத்தனர். சங்பரிவார தலைவர்கள் பலர் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை உயர்த்தவும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் இதே பிரச்சினையை மோடி வேறு விதமாக எழுப்பினார். பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்துவது பற்றியும் இருந்தது. எது எப்படியாயினும், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சுதந்திர தின உரைகள் நடைபெற்று வரும் சூழலில், பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இது தொடர்பான சட்டத் திருத்தத்தை எதிர்பார்க்கலாம்.
ஜூன் 2020 இல், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு சில மாதங்களுக்கு முன்பு நிதி ஆணையத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அமைச்சரவை அத்தகைய முடிவை எடுத்தது. சமதா கட்சியின் முன்னாள் தலைவரான ஜெயா ஜேட்லியின் தலைமையிலான குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் கலந்தாலோசனை செய்து, பிறகு ஒரு ஆய்வு அறிக்கையை தயார் செய்தார்கள். இதற்காக நம் நாட்டில் உள்ள பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு இவர்கள் சென்றார்கள். பதினைந்து தன்னார்வ அமைப்புகளுடனும் ஆலோசனை செய்தார்கள். பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தை இறப்புக் குறைப்பு, தொழிற்கல்விக்கான அணுகல் மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை ஆராய இக்குழு அமைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொதுவாக நம் நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விரிவான மற்றும் முழுமையான ஆய்வையே இந்த குழு நோக்கமாகக் கொண்டிருந்தது. பெண்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் வளமான வாழ்க்கையை நடத்துவதற்கும் பல பரிந்துரைகள் அடங்கிய தனது அறிக்கையை இக்குழு சமர்ப்பித்தது. அதில் சில பரிந்துரைகளை ஜெயா ஜெட்லியே நேற்று வெளியிட்டார். அதில் ஒன்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் சம வாய்ப்பை உறுதி செய்வது. இதற்காக நாடு முழுவதும் பெண்களுக்கென பிரத்யேகமாக பாலிடெக்னிக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் பெண்கள் பருவ வயதை எட்டும் போது பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவார்கள். இப்படி பொருளாதார தன்னிறைவு பெற்ற பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும். அதாவது, பெண்களுக்கான கல்வியை உறுதிசெய்து அதன் மூலம் வேலைவாய்ப்பையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் அக்குழுவின் முக்கிய பரிந்துரை. அதனால் திருமணத்தை 22 வயதில் நடத்தினாலும் பிரச்சனை இல்லை. மேலும், ஊட்டச் சத்து நிறைந்த உணவு வழங்குதல், பாலியல் கல்வியை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கான முன்மொழிவுகளையும் இக்குழு முன்வைத்துள்ளது. இந்த ஆலோசனைகளை எல்லாம் விடுத்து திருமண வயதை உயர்த்தி பிரச்சனையை தீர்க்கவும் மறைக்கவும் திசை திருப்பவுமே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
திருமணத்திற்கு முன்பே பெண்களுக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை அரசு எவ்வளவு சாதுர்யமாகத் தகர்த்ததுள்ளது என்பதைப் பாருங்கள். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்தின் முறையான வளர்ச்சியே பொருளாதார தன்னிறைவுக்கான பாதையாகும். பெண்கள் விஷயத்தில் ஜெயா ஜெட்லி குழு அதைத்தான் வலியுறுத்தியது. உண்மையில், தற்போதைய திருமண வயதான 18 வயதுக்கு முன்பே இவை அனைத்தையும் உறுதி செய்ய வேண்டியது ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வளவு காலமாக மேற்படி விஷயங்களில் படுதோல்வி அடைந்ததால்தான், நிதிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரையாவது திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்ற பரிந்துரையை இக்குழு செய்தது. ஆனால், எவ்வளவு லாவகமாக இந்த பரிந்துரைகளை எல்லாம் புறக்கணித்தும் தலைகீழாக்கியும் திருமண வயதை உயர்த்துவது மட்டுமே பெண்கள் முன்னேற்றத்திற்கான ‘ஒற்றைத் தீர்வு’ என ஒன்றிய அரசு தற்போது சொல்லிக் கொண்டு வருகிறது . ‘பேடி பச்சாவோ., பேடி படாவோ’ என்ற முழக்கத்தின் ஆதரவாளர்கள், அந்த இலட்சியத்தை அடைய இனியும் காத்திருங்கள் என்றுதான் அந்த பெண் குழந்தைகளோடு இதன் மூலம் இப்போது சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்டதால்தான் ஜனநாயக மகளிர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. நாட்டில் குழந்தைத் திருமணம் குறைந்து வருகிறது என்றத் தேசிய குடும்ப நலத் துறையின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 18 ஆகவே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுருக்கமாக, வேலையின்மையையும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையும் மட்டுமே மக்களுக்கு பரிசாகக் கொடுத்த அரசாங்கத்திற்கு, தங்களுடைய தோல்விகளையும் திறமையின்மையையும் மறைப்பதற்கான ஒரு குறுக்கு வழிதான் திருமண வயதை உயர்த்துவது என்று முடிவு. இந்த குறுக்குவழியில் மற்றொரு பாதை உள்ளது; அது எப்போதும் போல பாசிசத்தினுடையது. சிறப்புத் திருமணச் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் போன்றவைகளுடன் தனிநபர் சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டால் மட்டுமே புதிய முடிவு நடைமுறைக்கு வரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நடவடிக்கை இந்துத்துவாவின் அறிவிக்கப்பட்ட கொள்கையான பொது சிவில் சட்டத்தை நோக்கிய அடியாகும். பட்டுத் துணி போர்த்தி முற்போக்கு மனிதநேயத்துடன் வரும் பாசிசத்தின் உத்தியை உணர வேண்டும். அதற்கு பிறகு, , திருமண வயது பற்றிய விவாதங்களை செய்யலாம்.