இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் கொத்து கொத்தாக வீசப்பட்ட பல ஆயிரம் கிலோக் கணக்கான குண்டுகள் இன்னும் வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன. பல நேரங்களில் அவை வெடித்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. ஒவ்வொரு இரண்டு வாரத்திலும் ஒரு முறையாவது வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்படுவதாகவும், வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 குண்டுகளாவது அப்படி கண்டெடுக்கப்படுவதாகவும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழுவின் தலைவர் சொல்கிறார். புதிதாக ஏதேனும் கட்டுமானத்திற்காக அனுமதி பெறும்போது பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் எதுவும் இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பிறகே கட்டுமானத்திற்கான அனுமதி ஜெர்மனியில் வழங்கப்படுகிறது. அப்படி ஏதேனும் குண்டு கண்டெடுக்கப்படும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்ட பிறகு அவை செயலிழக்கச் செய்யப்படுகிறது. ஜப்பானின் ஒகினாவாவிலும் இன்னும் பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் அதிகமாக புதைந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஜெர்மனி, ஜப்பான் மட்டுமல்லாது போரால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து உயிர்ப்பலி வாங்க காத்திருக்கின்றது. இவையெல்லாம் இரத்தமும் சதையுமான உண்மைகள்.
இந்தியாவில் பெரிதாக போர்கள் எதுவும் நடைபெறாத சூழலில் அப்படிப்பட்ட பாதிப்புகள் நடந்ததாக செய்திகள் இல்லை. ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலின் குளத்தில் குண்டு போன்ற பொருட்கள் கிடைத்ததாகவும், அது வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் செய்தி வந்திருக்கிறது. வழக்கம்போல நமது பத்திரிகை புலனாய்வுப் புலிகள் இந்து அடையாளத்துடன் வந்த லஷ்கர் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று ஊத்தி மூடிவிட்டதாக தெரிகிறது. பெரிய அளவில் அந்த சம்பவத்தைப் பற்றி செய்திகள் இல்லை. பொக்ரானில் இந்திய இராணுவத்தின் குண்டுவெடிப்பு சோதனைகளுக்கு பிறகு மீதமிருக்கும் பாகங்களை பழைய இரும்பிற்கு விற்கலாம் என்று உள்ளூர்வாசிகள் எடுத்துச் சென்று விற்பது ஆபத்தை ஏற்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர இந்தியாவில் வெடிக்காத குண்டுகள் பற்றிய பெரிய செய்திகள் இருப்பதாகத் தெரியவில்லை.
உயிரிழப்பை ஏற்படுத்தும் வெடிக்காத குண்டுகள் என்ற கருவை எடுத்துக்கொண்டு, அந்த குண்டை கைப்பற்ற நினைக்கும் பாதுகாப்புத் துறை மந்திரி, ஆயுத இடைத்தரகர், காவல்துறை கூட்டணி, அந்த குண்டைப் பற்றி மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தத் துடிக்கும் இடதுசாரி தோழர்கள், குண்டு பயணம் செய்யும் பழைய இரும்புக் கடைகள், பழைய இரும்புக்கடைகளில் வேலை செய்பவர்களின் வாழ்நிலை, தலித் ஆண்-இடைநிலை சாதிப் பெண் காதல், கௌரவக் கொலை முயற்சி என்று பரபரப்பான திரைக்கதையுடன் வெளிவந்துள்ளது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம்.
இறுதிக்காட்சியில் சொல்லப்படும் 1000 Cranes நிகழ்வு ஹிரோஷிமா உலக அமைதி அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆயிரக்கணக்கான உயிரை உருக்கும் உண்மைச் சம்பவங்களில் ஒன்று. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டதில் இருந்து அதற்குப் பிறகான நாட்களில் நடந்த சம்பவங்களை மெழுகு பொம்மைகளாகவும், உயிரிழந்தவர்களின் எஞ்சிய உடைமைகளை காட்சிப்படுத்தி அவற்றிற்கு கீழே விவரணைகளாகவும் வரிசைப்படுத்தியிருப்பார்கள். அந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று வெளியே வரும்போது போர் இல்லா உலகம் வேண்டும் என்று ஒவ்வொருவரும் சூளுரைத்துவிட்டே வருவோம். அப்படி ஒரு அனுபவத்தை தரும். அங்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் பங்கிற்கு க்ரேன்ஸ் செய்து அங்கே வைத்துவிட்டு வருவார்கள்.
போர் இல்லா உலகு என்ற செய்தியைத் தாங்கியுள்ள திரைக்கதை அதனை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பா. ரஞ்சித்தின் நடிகர்கள் பட்டறை படம் முழுவதையும் ஆக்ரமித்திருப்பதுடன் பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். இசை, பாடல்கள், வரிகள், வசனங்கள் என்று அனைத்துமே ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். தேவையில்லாத காட்சி என்று ஒன்றுகூட திரைக்கதையில் இடம்பெறவில்லை.
முதல் திரைப்படத்தை ஒரு மிகச் சிறந்த கருவுடன் தேர்ந்தெடுத்ததுடன், அதை பார்ப்பவர்களுக்கு புரியும் காட்சி மொழிகளில் தந்திருக்கும் இயக்குனர் அதியன் ஆதிரை மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்..
ஆர்.அபுல் ஹசன்