கேரளாவைச் சேர்ந்ந ஃபாத்திமா லத்தீஃப் சென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவியாக பயின்று வந்தார். தனது துறை ஆசிரியர்களின் உளவியல் தாக்குதலால் மனமுடைந்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது மொபைல் ஃபோனில் எழுதி வைத்த வெவ்வேறு குறிப்புகளில் தனது துறையைச் சார்ந்த மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தான் இறந்தால் அதற்கு இவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதிலும் குறிப்பாக சுதர்சன் பத்மநாபன் என்கிற பேராசியரை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அவருடனான உரையாடல்கள் மூலம் மதத்தை வைத்து ஆசிரியர்களால் நிந்தனைக்குள்ளாவதாக தனது குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறார் ஃபாத்திமா.
காவல்துறை அவரது மரணம் தொடர்பான தகவல்களை மறைக்க முயல்வதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அவரது இரட்டை சகோதரி கேரள மாநில காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த ஃபாத்திமாவின் குடும்பத்தினர் தங்கள் மகள் இறப்பிற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து சென்னை ஐ.ஐ.டியில் நேரில் சென்று விசாரணை செய்த சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவி தற்கொலை வழக்கை – மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் இதை விசாரிக்க சி.பி. ஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே தன் மகளின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபாத்திமாவின் தாய்,
என் மகள் நன்றாக படிக்க கூடியவள்.அவளுக்கு பனாரஸில் படிக்க இடம் கிடைத்தும் வட மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்கிற காரணத்தால் தமிழ்நாட்டிற்கு படிக்க அனுப்பினோம்.ஆனால் ஐ.ஐ.டியில் பேராசிரியர்களால் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது.குறிப்பாக என் மகள் மரணத்திற்கு முக்கிய காரணம் சுதர்சன் பத்மநாபன் தான் என கூறியுள்ளார்.
ஃபாத்திமா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதமும்,ஃபாத்திமாவின் தாயார் பேட்டியும் குறிப்பிட்டு சொல்லும் பெயர் சுதர்சன் பத்மநாபன் என்பது தான்.
பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் வலதுசாரி ஆதரவாளர்,பார்ப்பனிய சிந்தனை கொண்ட அவர் ஃபாத்திமா என்கிற இஸ்லாமிய பெண் கல்வி கற்க கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்துள்ளார். அதன் நீட்சியாகவே ஃபாத்திமா மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார் என்பது ஐ.ஐ.டி விசாரிக்கும் போது தெரியவருகிறது.
சென்னை ஐஐடியில் கடந்த பத்து மாதங்களில் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைப் பருவத்தில் இருந்தே ஐஐடி கனவிற்காக பயிற்சி கொடுக்கப்படும் மாணவர்கள் அங்கு படிக்கும்போது இப்படி தங்கள் உயிர்களை இழப்பது வாடிக்கையாகி வருவது வேதனையளிக்கிறது.
இந்தியாவில் இருக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இஸ்லாமோஃபோபியா மலிந்து வருகிறது. பணிபுரியும் பேராசிரியர்களே முஸ்லிம் மாணவர்களிடம் மதம் குறித்த நிந்தனையில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்திற்குரியதும் உடனடியாக தடுக்கப்பட வேண்டியதுமாகும்.அதற்கு அங்கு பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அங்கு உயர்ஜாதியினரின் ஆதிக்கம் குறைந்து ஐ.ஐ.டி எல்லோருக்குமான கல்வி நிறுவனமாக மாறும்.
ஃபாத்திமாவின் மரணம் குறித்தான விசாரணையை வெறும் தற்கொலை வழக்காக மட்டும் விசாரிக்காமல் ஐ.ஐ.டியில் நிலவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமிய மாணவர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்படும் நவீன தீண்டாமையை வெளியே கொண்டு வந்து அதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறுவனப்படுகொலையால் பறிப்போன உயிர்களில் கடைசியாக பறிக்கப்பட்ட உயிர் ஃபாத்திமாவின் உயிராகவே இருக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள் என்பது மாணவர்கள் கல்வி கற்க மட்டுமே என்னும் நிலையை உருவாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
-ஆர்.அபுல் ஹசன்