அவர் பெயர் சையத் இம்ரான். ஆந்திர மாநிலம் செகந்த்ராபத்தைச் சேர்ந்தவர். அப்பொழுது வயது 30. பிடெக், கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் ஐசிஐசிஐ வங்கியில் நல்ல வேலையிலிருந்தார். தந்தை முன்னாள் மத்திய அரசு ஊழியர். ஒரு சாதாரண மனிதனுக்குரிய தன்குறிப்புதான் இம்ரானுக்கும் இருந்தது. அப்படிப்பட்ட இம்ரானின் வீட்டை ஒரு நாள் 200 போலீஸ் 4 பெரிய வாகனங்கள் சுற்றி வளைக்கிறது. இம்ரானுக்கும் குடும்பத்தாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உங்களை விசாரிக்க வேண்டும் என்று அழைக்கிறது போலீஸ். என்ன காரணம் புரியவில்லை. வலுக்கட்டாயமாக இம்ரானை பிடித்துச் சென்ற போலீஸ் வீட்டிற்கு வெளியே வந்தவுடன் ஊடகங்கள் மற்றும் மக்கள் திரளுக்கு மத்தியில் அவரது முகத்தைக் கருப்புத் துணியால் மூடுகிறது. இம்ரானின் அதிர்ச்சி அதிகரிக்கிறது.
போலீஸால் இழுத்துச் செல்லப்படும் இம்ரான் சட்ட விரோத காவலில் துன்புறுத்தப்படுகிறார். தினசரி அடி. மின்சார ஷாக்குகள். இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுகிறார். அவர் தூங்கக் கூடாது என்பதற்காகவே இமைகளில் க்ளிப் போடப்படுகிறது. உலகின் உச்சபட்ச கொடுமை இதுவாகத்தான் இருக்கும். லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருக்கிறதா, பாகிஸ்தானிற்கு பயிற்சிக்குச் சென்றாயா போன்ற புரியாத கேள்விகள் கேட்கப்படுகிறது.
இரண்டு முறை நார்கோ அனாலிஸிஸ் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார் இம்ரான். உண்மையை அறிகிறேன் என்ற பெயரில் மூளைக்குள் போதையைச் செலுத்திக் கட்டுப்படுத்தும் இச்சோதனை மனப்பிறழ்வை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மோசமானது. நார்கோ சோதனைக்காக ‘லேடி போரிங்’ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் இம்ரான். வரவேற்பறையில் ஓடும் டிவியில் தன் படத்தைக் காட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ அனாலிஸிஸ் டெஸ்ட்டில் அனைத்தையும் ஒப்புக்கொண்டாய் எனச் செய்தி வெளியாகிறது’ என்று கேட்டதற்கு நர்ஸ் சொல்கிறார். நார்கோ அனாலிஸிஸ் செய்வதற்கு முன்பே தான் ஒப்புக்கொண்டதாகச் செய்தி வெளியானதை இம்ரானால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
மொத்தம் 17 மாதங்கள் 24 நாட்கள் (10 நாட்கள் சட்டவிரோதமாக) சிறையிலிருந்த இம்ரான் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுகிறார். போலீஸ் செய்த குற்றத்தை நீதிமன்றத்தில் அவர் கூறவில்லை. அப்படிச் செய்தால் விடுதலை அளிக்கிறோம் என்று காவல்துறை மிரட்டியது. சிபிஐ இம்ரானை முழுவதுமாக விடுத்தாலும் ஆந்திர போலீஸ் விடுவதாயில்லை. வழக்கிலிருந்து விடுதலையான இம்ரானின் வாழ்வில் 17 மாதங்கள் மட்டும் போகவில்லை. அதன் பிறகான வாழ்வே அடியோடு ஒழிந்தது. இம்ரானை யாராவது வேலைக்குச் சேர்த்தாலும், அவ்வப்பொழுது விசாரணை என்று அழைத்துச் செல்லும் காவல்துறை அதன் மூலம் வேலைக்கு சேர்ப்பவர்களை அச்சுறுத்துகிறது. வேலைப்போய், சமூக அங்கீகாரம் போய், அடிக்கடி காவல்துறை விசாரணை எனத் துயரில் கழிகிறது இம்ரானின் வாழ்க்கை.
2007ம் ஆண்டு மே 25 அன்று நடந்த ஐதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு இந்துத்துவர்களின் பயங்கரவாதம் என்று இன்று சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலத்தில் அறியலாம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஐதராபாத்தின் இணக்கத்தைச் சிதைக்க மேற்கொண்ட பரிசோதனை முயற்சி அது. அதில் தொடர்புடையவர் என்றுக் கூறிதான் இம்ரான் கைது செய்யப்பட்டார். மேற்கூறியப்படி ஒரு சாதாரண தனிநபருக்குரிய பின்னணிதான் இம்ரானுக்கும் இருந்தது. ஆனால், அவரின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது இந்த குற்றச்சாட்டு. ஆம், ஒரு இந்திய முஸ்லிமின் வாழ்வைச் சிதைக்க அர்த்தமற்ற ஒரு குற்றச்சாட்டு போதும்.
அ. மார்க்சின் ‘சட்டப்பூர்வ பாசிசம்’ நூலிலிருந்து சுருக்கமாக…
எழுதியவர் : அப்துல்லா . மு