எதிர்கொள்வது பொருளாதாரச் சுணக்கம் அல்ல சிக்கல்! நிதியமைச்சரின் அறிவிப்புகள் தேற்றுமா? பதில் கிட்டாத சில கேள்விகள்.
இந்தியாவின் பெருளாதாரம் சந்தித்து வரும் சரிவை தடுத்து நிறுத்தவும் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் 10 முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான அளவிற்கு கடன் வசதியை அளிக்கத் தேவைப்படும் முதலீட்டுச் செலுத்தலுக்கு நிதி நிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட ரூ.70,000 கோடியை பொதுத் துறை வங்கிகளுக்கு உடனடியாக வழங்கப்படும், கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்க வீட்டு வசதிக் கடன் தரும் நிதியமைப்புக்களுக்கு மேலும் ரூ.30,000 கோடி அளிக்கப்படும், சிறு குறு நடுத்தரத் தொழிலகங்கள் செலுத்திய ஜிஎஸ்டியில் திரும்ப அளிக்க வேண்டிய தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்பன நிதியமைச்சரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய, அவசியமான நடவடிக்கைகள் ஆகும்.
வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் உருவாகியுள்ள தேக்க நிலையை நீக்கிட உதவிடும் வகையில் அரசுத்துறைகள் தங்கள் பயன்பாட்டிலுள்ள பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு இருந்து வரும் தடையை நீக்குவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்கவில்லை. இது எதிர்பார்த்ததுதான். பொருளாதாரச் சுணக்கத்தால் வரி வருவாய் குறையும் நிலையில் அதில் மேலும் துண்டுவிழும் அளவிற்கான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி – ஜிடிபி) 6.8% ஆக இருக்கும் என்று கூறப்பட்டது, அது திருத்தியமைக்கப்பட்டு 6.2% ஆக மட்டுமே இருக்கும் என்று கடன் தகுதி நிர்ணய நிறுவனமான கிரைசில் கூறியுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சுணக்கத்தில் (slow down) இருந்து மீட்கவும் வளர்ச்சியை உந்தவும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுணக்கத்தை நீக்க முடியுமா? என்கிற கேள்வி முக்கியமானதாகும். இது ஒரு முதற்கட்ட நடவடிக்கைதான் என்றும் மேலும் இரண்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
ஆனால் நாட்டின் பொருளாதார நிலையில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும் பொருளாதார வளர்ச்சி உலக அளவில் மதிப்பிடப்பட்டுள்ள 3.2 விழுக்காட்டை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6% விழுக்காட்டிற்கும் அதிகமான இருப்பதாகவும், இப்படிப்பட்ட மந்த நிலையிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமானதாகவே இருக்கிறது என்றும் புன்னகையுடன் கூறியிருப்பதை ஏற்க முடியுமா? உலக அளவில் வேகமான வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது என்றால் பிறகு வளர்ச்சியை உந்தித்தள்ள ஊக்கமளிக்கும் நடவடிக்கைகள் ஏன்? என்கிற கேள்வி எழுகிறதல்லவா?
நிதியமைச்சர் ஒப்பிடும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் – அவைகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் – இந்தியாவோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகமானவை! பொருளாதார பலத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா வேண்டாம், அண்டை நாடான சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நமது நாட்டை விட 5 மடங்கு அதிகமானது. அதன் ஜிடிபியில் அந்நாடு காணும் வளர்ச்சி – இப்போது 6% என்று கூறப்படுகிறது. இந்த 6% வளர்ச்சியின் மதிப்போடு ஒப்பிட வேண்டுமெனில் இந்தியா தனது ஜிடிபியின் மீது 30 விழுக்காடு வளர்ச்சியை எட்ட வேண்டுமே சாத்தியமா? எனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் குறைந்த விழுக்காடு வளர்ச்சியை வெறும் எண்ணில் மட்டும் கணக்கில் கொண்டு பேசுவது உண்மையை மறைப்பதும் பாதிப்பை திட்டமிட்டுக் குறைத்து கூறுவதாகும்.
மற்றொரு முக்கிய உண்மையையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரச் சுணக்கம் அல்லது பின்னடைவு ஏற்படும்போது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தத் தேவையான நிதிப் பலம் உடையவையாகும்.
இந்நாடுகளில் பெரும் நிதிப் பலம் கொண்ட (அரசு) முதலீட்டு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் தங்களிடமுள்ள நிதிப் பலத்தை இப்படிப்பட்ட சூழல்களில் பெருமளவிற்கு முதலீடுகளாகச் செலுத்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வேலை வாய்ப்பு குறைந்திடா வண்ணம் காத்திடக் கூடியவை. இப்படியான ஒரு முதலீட்டு வங்கி இந்தியாவிடம் இல்லை. அதேபோல் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் தேவைக்கு நிதியைத் திரட்டக் கூடிய பத்திரச் சந்தை (Bond market) இந்நாடுகளில் பலமாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் இந்தச் சந்தை முதிர்ச்சி பெறவில்லை.
இந்நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தே கடனாகப் பெற்றன. அப்படி வாங்கிய கடன்களின் மீதான வட்டியைக் கூட திரும்பச் செலுத்த இயலாத நிலையிலேயே வாராக் கடன்களில் நமது வங்கி அமைப்பு மூழ்கியுள்ளது. இந்த வாராக் கடன்களின் விகிதம் வங்கிகள் அளித்த ஒட்டுமொத்தக் கடன் தொகையில் 12% மேல்! இது மிக மிக அதிகமாகும். அண்டை நாடான சீனாவில் வாராக் கடன்களின் விகிதம் 2% மட்டுமே. இந்தியாவில் மட்டுமே இந்த அளவிற்கு வாராக் கடன் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
வாராக் கடன்களை மீட்க திவால் மற்றும் கடன் முறிச் சட்டம் (ஐபிசி) இயற்றப்பட்டு அதன் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அதனால் வாராக் கடன்களை முழுமையாக மீட்க முடியாத நிலையில் வங்கிகளுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் மூலதன செலுத்தலாக ரூ.70,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதுவரை ரூ.3.50 இலட்சம் கோடி மூலதனத்தை (capital infusion) நிதியமைச்சகம் செலுத்தியுள்ளது. அதாவது இந்நாட்டின் குடிமக்கள் வங்கிகளில் வைத்த நிதியை பெரு நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுத்துவிட்டு அது வாராக் கடன்களான நிலையில் அந்த இழப்பை ஈடுகட்ட மக்களிடம் இருந்து ஈட்டப்பட்ட வரி வருவாயின் ஒரு பகுதியை மூலதனமாக செலுத்துகிறது!
எனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பிடுவது நேர்மையான செயல் அல்ல. வேலை வாய்ப்பு இழப்பு குறித்து பேசிய நிதியமைச்சர், தங்களது நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டவாறு ரூ.100 இலட்சம் கோடி உள்கட்டமைப்பிற்கு செலவிடப்படும் என்றும் அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதற்கான நிதி எங்கிருக்கிறது?
அரசின் செலவீனங்களுக்கு இந்த நிதியாண்டில் கடன் பந்திரங்களை வெளியிட்டு சந்தையில் இருந்து ஏழு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக திரட்ட திட்டமிட்டுள்ள அரசால் ரூ.100 இலட்சம் கோடிக்கு ஏது வழி? ஒரு வேளை அமெரிக்க டாலர்களில் பத்திரங்களை வெளியிட்டு அயல் நாட்டுச் சந்தைகளில் இருந்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதா? அந்த அளவிற்கு இந்நாட்டின் கடன் வாங்குத் திறன் உள்ளதா? அது இருந்தால் அல்லவா அரசின் பத்திரங்களில் முதலீடு செய்ய முன் வருவார்கள்?
எனவே உருவாகியுள்ள பொருளாதாரச் சிக்கலை (crisis) எதிர்கொள்ள என்னென்ன வழிகள் இந்த அரசிற்கு உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. உள்நாட்டில் மூலதனத் திரட்சி (Capital formation), சேமிப்பு ஆகியன குறைந்து வருகிறது. இதனை எப்படி அரசால் மாற்றிட முடியும்?
எல்லா குறீயிடுகளும் எதிர்மறையாகவே (negative) உள்ளன. இதனை தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சுணக்கம் என்று கூறிக் கடந்து விட முயற்சிக்கிறது அரசு. ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் போது அது பேரதிர்ச்சியாக இருக்கும்.
ஆனால் பொருளாதாரச் சீர்த்திருத்தம் தொடரும் என்று கூறுகிறார். சர்வதேச நிதியமும் (ஐஎம்எஃப்) உலக வங்கியும் செய்யும் பரிந்துரைகள் இந்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திட முடியும் என்றால் அது நடந்திருக்க வேண்டுமே? எது தடுத்தது?
நிதியமைச்சரின் அறிவிப்புகளில் விவசாயம் தொடர்பான சிக்கல்கள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லையே? இந்திய அரசின் இப்போக்கு கவலையளிக்கிறது. இந்த அளவிற்கு பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தும் இந்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடும் வேளாண் பெருமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மீது பாரா முகம் ஏன்?
எனவே இந்நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கலிற்கு குறைந்தக் கால திட்டங்களோ, ஊக்கச் சலுகைகளோ தீர்வைத் தந்திடாது. 1991 முதல் இந்நாடு கடைபிடித்து வரும் சீர்த்திருத்தப் பாதை உண்மையில் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளதா? என்பதை ஆழ்ந்து ஆராய வேண்டும். அதன் முடிவுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
உழைத்துப் பங்களிக்கும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்மைகளை எடுத்துக் கூற வேண்டும். அவர்களின் பங்கேற்போடுதான் இந்நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற முடியும். அவர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு இதற்கு மேலும் அயல் முதலீகளையும் தாராளமயமாக்கலையும் தொடர்வது எதிர்கொண்டுள்ள சிக்கலுக்குத் தீர்வைக் தராது, மேலும் எதிர் விளைவுகளையே உருவாக்கும்.
கா. ஐயநாதன், சென்னை.