இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும், எப்போது தூங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தபோது டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய அன்னா ஹசாரே கடந்த ஆறு வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாரே அதுபோலத்தான் இந்தியாவின் பொது சமூகமும் இருக்கிறது.
மாட்டுக்காக பல உயிர்கள் பசுத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது தூங்கிக் கொண்டிருந்தது. ரமளான் பண்டிகைக்காக புதுத் துணி வாங்கச் சென்ற ஜூனைத் என்ற சிறுவன் ஹரியானா ரயில் நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டபோது உறக்கம் களைத்து எழுந்து நாடு முழுவதும் NotInMyName போராட்டங்களை நடத்தியது. பிறகு மறுபடியும் உறங்கச் சென்றுவிட்டது. ஆனால் கொலைகள் நின்றபாடில்லை.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போது உறங்கிக் கொண்டிருந்த பொதுச் சமூகத்தை தட்டியெழுப்ப ஜம்முவில் ஒரு எட்டு வயது சிறுமி தேவைப்பட்டாள். அவளது கொடூரமான படுகொலைக்கு பிறகு தற்காலிகமாக உறக்கம் களைத்த பொதுச் சமூகம் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டது.
ஜாமியாவில் டிசம்பர் 15ஆம் தேதி நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின்போது, அலிகரில் மாணவர்கள் கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, பிறகு உத்திரபிரதேசத்தில், மங்களூரில் முஸ்லிம்கள் குறிவைத்து கொல்லப்பட்டபோது, அவர்கள் சொத்துகள் அரசாலேயே சூறையாடப்பட்டபோது, டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த அரசின் குண்டர்படை வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டபோது பொதுச் சமூகத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை.
விளைவு இப்போது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையில் வந்து முடிந்திருக்கிறது. மால்கம் எக்ஸ் என்ற அமெரிக்காவின் நிறவெறி விடுதலைப் போராளி சொன்னது போல எங்கள் எதிரிகளின் செயல்களால் ஏற்பட்ட காயங்களை விட எங்கள் நண்பர்களின் அமைதியே எங்களைக் கொல்கிறது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்துவரும் அனைத்து நிகழ்வுகளும் அரசின் அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் அடையாளங்களாகும். முஸ்லிம்கள் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக கடந்த நூறு வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின், விதைத்த விதைகளின் அறுவடைக்காலமாக இன்றைய நாட்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களின் திருமண உரிமையில் கை வைத்தார்கள், பொது சமூகம் வரவில்லை. ஒரு பள்ளிவாசலை இடித்து அங்கே ராமர் கோவில் கட்டச் சொன்னார்கள், பொது சமூகம் முஸ்லிம்களை அமைதி காக்கச் சொன்னது. காஷ்மீரை முடக்கினார்கள், காஷ்மீரின் சிகப்புத் தோல் பெண்களும், ஆப்பிள் விளையும் நிலங்களையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று குதூகலித்தது பொது சமூகம். குடியுரிமைத் திருத்த சட்டம், NPR, NRC மூலம் முஸ்லிம்களை அகதிகளாக்க முயற்சிக்கிறார்கள், பாகிஸ்தான்காரனுக்காக ஏன் போராடுகிறீர்கள், ஏன் அல்லாஹ் அக்பர் சொல்கிறீர்கள், ஏன் காவல்துறையை தாக்குகிறீர்கள், ஏன் இன்னும் உணர்வுகளை உயிருடன் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது பொது சமூகம்.
இந்தியாவின் சோ கால்டு பொதுசமூகத்திலும் இஸ்லாமிய வெறுப்பினைக் கடத்துவதில் கடந்த ஆறு வருடங்களில் அவர்கள் பெருமளவு வெற்றியை அடைந்திருக்கிறார்கள் என்பதையே கடந்த இரண்டு மாத நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இன்னும் என்ன நடந்தால் இந்தியாவின் பொது சமூகம் உறக்கம் கலைக்கும்? உறக்கம் கலைத்து எழுச்சி ஏற்படுமா இல்லை ரஜினிகாந்த் எதிர்பார்க்கும் எழுச்சியைப் போல் தான் பொது சமூகத்தின் எழுச்சியுமா.?
தங்கள் வாழ்வின் முக்கியமான அத்தியாயத்தை முஸ்லிம் சமூகம் எழுதிக் கொண்டிருக்கும்போது அதில் பங்குகொள்ள இப்போது வரவில்லை என்றால் இனி எப்போதும் அந்த பொது சமூகம் தேவையில்லை. உண்மையில் அப்படி ஒன்று இருந்தால் இப்போது வரட்டும். முஸ்லிம்களுடன் தோளோடுதோள் நின்று பாசிசத்தை எதிர்த்து போரிடட்டும்.
அபுல் ஹசன்