கொரோனா வைரஸ் பெயரைச் சொல்லி முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – தி கார்டியன்
(ஏப்ரல் 13 ம் நாளன்று தி கார்டியன் இதழ் ‘Conspiracy theories targeting Muslims spread in India’ என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. Hannah Ellis Peterson, Shaik Azizur Rahman என்ற பத்திரிக்கையாளர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)
வட மேற்கு தில்லியின் விளிம்பில் இருக்கும் ஹரேவாலி (Harewali) என்ற கிராமத்தைச் சார்ந்த மெகபூப் அலி என்ற 22 வயது இளைஞனை வெளியில் இழுத்து கம்பாலும்,செருப்பாலும் ஒரு கும்பல் மூக்கிலும், காதுகளிலிலும் இரத்தம் வரும்வரை அடித்தது. சில வாரங்களுக்கு முன்னதாக போபாலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் அந்த இளைஞன் கலந்து கொண்டதுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று காவல்துறை சொல்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசை இந்துக்களுக்கு பரப்பும் ‘சதியைச்’ செய்ததாகச் சொல்லி, வேறு யாரெல்லாம் இந்தச் ‘சதியின்’ பின்னால் இருக்கிறார்கள் என்று கேட்டு, அவரை அந்தக் கும்பல் ஏப்ரல் 5 ம் நாள் கோவிலுக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்திற்கு மாறும்படி சொன்னது. அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் நடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும், பாதிக்கப்பட்ட குடும்பமானது அச்சத்தில் இருந்து விடுபடவில்லை. “காவல்துறையில் வழக்கு பதிவு செய்தால் இந்தக் கிராமத்தில் உள்ள இந்துக்கள் எங்களை வாழவிடமாட்டார்கள்” என்று பெயரைச் சொல்ல விரும்பாத ஒரு குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டார். தில்லியில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் “கொரோனாவால் சந்தேகப்படுவர்” என்ற பெயரில் எந்த அறிகுறிகளும் இல்லாத போதும் தனியான வார்டில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல், கோவிட் -19 ஐ முஸ்லிம்கள் பரப்புகிறார்கள் என்று வஞ்சகமான எண்ணத்தோடு குற்றம் சாட்டப்படுகிறார்கள்.அலியின் மீது நடந்துள்ள தாக்குதல் என்பது ஒரு குறியீடுதான்; இது முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்துவரும் அரக்கத்தனத்தை காட்டுகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் மதக் கலவரத்தினால் தில்லி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது இந்தியா முழுவதும் அவர்களுடைய வியாபாரம் புறக்கணிக்கப்படுகிறது; உணவுப் பொருட்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள் “கொரோனா வைரஸ் தீவிரவாதிகள்” என்று அழைக்கப்படுகிறார்கள்; மற்றவர்கள் உணவில் எச்சியைத் துப்பியும், குடிநீரில் வைரசை சேர்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் வரலாம் என்று சொல்லும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
மார்ச் மாத மத்தியில்,தெற்கு தில்லியில் தப்ளிக் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பு ஒரு மாநாட்டை நடத்தியது. அரசு அமைப்புகளின் அனுமதியோடு நடந்த இந்த மாநாட்டில் 8000 பேர் கலந்து கொண்டனர்; இதில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் அடங்கும். இந்த மாநாட்டால்தான் (singled out) இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக காவல்துறையும்,அரசும் சொன்னது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தங்களை அறியாமலேயே பல நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் வைரசை எடுத்துச் சென்றனர்.
நாடு முழுவதும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட யாவரையும் பிடிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதுவரை 15 மாநிலங்களில் 27,000 க்கும் மேற்பட்ட தப்ளிக் ஜமாத் உறுப்பினர்களும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் தருவதாக காவல்துறை தெரிவித்தது.
தப்ளிக் ஜமாத் என்கிற அமைப்புதான் இந்த வியாதி இந்தியாவில் பரவ முக்கியமான காரணம் என்ற குற்றச்சாட்டு குறித்து, ‘இந்திய விஞ்ஞானிகளின் எதிர்வினை – கோவிட்-19′(Indian Scientists’ Response to Covid- 19) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்’இப்போது கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் இந்த ஊகத்தை ஆதரிக்கவில்லை ” என்று கூறுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறிவதற்கான சோதனை மிகக் குறைவாகவே நடைபெறுவதாக கூறியுள்ள அந்த விஞ்ஞானிகள், அரசு ஆணையின் படி விகிதமற்ற எண்ணிக்கையில் (disproportionate number) தப்ளிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் சோதனை நடப்பதால், கிடைக்கிற எண்ணிக்கை தவறாக கணிக்கப்பட்டுள்ளதாக (skewing) தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் சோதனை முடிவுகளை வைத்து, பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள், தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வைரசை பரப்பும் ‘கொரோனா தீவிரவாதத்தை’ செய்துவருகின்றனர் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர். மூத்த பாஜக தலைவர்கள் ‘கொரோனா வைரஸ் நோயாளிகள் வடிவில் வரும் மனித குண்டுகள்’ என்றும் எனவே தப்ளிக் தலைவர்களை தூக்கில் போட வேண்டும்; சுட்டுவிட வேண்டும் என்றும் பேசினார்கள். “தப்ளிக் ஜமாத் மக்கள் மருத்துவர்கள் மீதும் சுகாதார பணியாளர்கள் மீதும் துப்புகிறார்கள்.எனவே அவர்கள் நோக்கம் என்பது முடிந்த அளவு மக்களை நோயாளிகளாக்கி கொலை செய்வது என்பது தெளிவாகிறது” என்று கபில் மிஸ்ரா என்ற பாஜக தலைவர் பேசுகிறார். வழக்கமாக இவர் வெறுப்பை உமிழும் பேச்சுகளை பேசுபவர்தான்.
உடனடியாக அவர் சொன்னதை மறுத்து விட்டார்.ஆனாலும் தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தபடுவதற்கு உட்பட மறுக்கிறார்கள், மருத்துவமனை ஊழியர்களை தாக்குகிறார்கள், மூத்திர சீசாக்களை இந்துக்கள் மீது வீசுகிறார்கள் என்ற வதந்தி வேகமாக பரவியது.
‘கொரோனா ஜிகாத்’ ‘கொரோனா தீவிரவாதம்”கொரோனா குண்டு தப்ளிக்’ போன்ற வார்த்தைகள்(hastag) டிவிட்டரில் வரத் தொடங்கின.இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்கள் தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள்தான் அதீதமாக கொரோனா வைரசை பரப்புவதாக திரும்பத் திரும்ப தெரிவித்தன.தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் டாக்டர்.சபாருல் இஸ்லாம் கான் (Dr.Zafarul- Islam Khan) தப்ளிக் ஜமாத் அமைப்பு மாநாட்டை நடத்தியது தவறானாதாக (short sighted) இருக்கலாம். ஆனால் “அரசு,அரசியல் கட்சிகள், இதர மத குழுக்கள் கொரோனா வைரஸ் பற்றிய விதிகளை மீறி நடத்திய பல நிகழ்ச்சிகளில் வெகுமக்கள் பங்கேற்றுள்ளனர். ” என்று கூறுகிறார்.
“ஆனால் ஒட்டுமொத்த கவனமும் முஸ்லிம்கள் மீதுதான் இருந்தது” என்றும் ” கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீதான புதுவிதமான தாக்குதல் நடைபெறுகிறது.முஸ்லிம்களை சமூக புறக்கணிப்பு செய்வது, இந்துத்துவா குழுக்கள் முஸ்லிம்களை துன்புறுத்துவது நடைபெறுகிறது; பல பகுதிகளில் முஸ்லிம்களை காவல்துறை துன்புறுத்துவதும் நடக்கிறது” என்று கூறுகிறார்.
கர்நாடகாவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கணிசமாக உள்ளது.அங்குதான் ஆனந்த் குமார் ஹெக்டே என்ற பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தப்ளிக் ஜமாத்தை தீவிரவாதிகள் என்று கண்டித்தார். அதன் பிறகு முஸ்லிம் காய்கறி,பழ வியாபாரிகளை அவர்கள் பகுதிகளுக்கு அனுமதிக்க கூடாது , அதன் மூலம்தான் வைரசை பரப்புகிறார்கள் என்று சொல்லும் ஆடியோ செய்தி ஒன்று பரவலாக வாட்ஸ் அப் மூலமாக பரப்பப் பட்டது.
கர்நாடகாவில் சையது தப்ரிஸ்,23 வயது அவரது தாய் சரீன் தாஜ்,39 வயது ஆகிய இருவரும் உள்ளூர் பாஜக உறுப்பினர்களால் ஏப்ரல் 4, 6 தேதிகளில் தாக்கப்பட்ட ஏழு பேரில் அடக்கம். மராத்தாஹல்லி (Marathahalli), தசராஹல்லி (Dasarahalli) மாவட்டங்களில் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு உணவு அளிக்கச் செல்லும்போது அவர்கள் தாக்கப்பட்டனர்.
” நீங்கள் உணவு கொடுக்க கூடாது,நீங்கள் தீவிரவாதிகள் நோயை பரப்புகிறீர்கள், தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்த நீங்கள் உணவில் துப்பி வைரசை பரப்புகிறீர்கள்” என்று இரு சக்கிர வாகனத்தில் 20 பாஜக உறுப்பினர்கள் சொன்னார்கள் என்கிறார் தப்ரீஸ். இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு 25 பாஜக உறுப்பினர்கள் அவரையும் ,அவரது தாயையும்,மற்ற தன்னார்வலர்களையும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கினார்கள். அதில் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இது எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வு அல்ல.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிவரும் NGO சுவராஜ் அபியான்( NGO Swaraj Abhiyan) என்ற அமைப்பைச் சார்ந்த மனோகர் இளவர்த்தி ( Manohar Elavarthy) ‘கடந்த சில நாட்களாக பல முஸ்லிம் தன்னார்வலர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.சில இடங்களில் காவல் துறையினரும் தாக்கியுள்ளனர்” என்கிறார்.
மங்களூரில் ,இந்த வாரம் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை என்ற சுவரொட்டிகள் தென்பட்டன. அலப்பேயில் ( Alape) ‘முழுமையாக கொரோனா போகும் வரை, எந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும் அனுமதி இல்லை’ என்ற தட்டி வைக்கப்பட்டிருந்த்து. இந்துக்கள் அதிகமாக வசிக்கும் அங்கனஹல்லி கிராமத்தில், அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் மகேஷ், ‘இந்தக் கிராமத்தில் யாராவது முஸ்லிம்களோடு நட்பாக இருப்பதாக கண்டால் அவர்களுக்கு 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று சொல்லும் காணொளியை கார்டியன் பார்த்தது.
முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக்க விரும்பும் பாஜகவின் நோக்கத்திற்கு இசைவாக இருப்பதால், கொரானா வைரசை ஒரு சாக்காக (excuse) பயன்படுத்திக் கொள்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் இயல்பாக இந்தியாவில் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு விரோதமானதாக உள்ளதைக் கண்டித்து இலட்சக்கணக்கான மக்கள் வீதிகிளில் இறங்கிப் போராடினர்.
நிலமை மோசமானதாக போனதால், அமெரிக்காவைச் சார்ந்த தெற்காசிய மனித உரிமையில் ஈடுபட்டுள்ள Equality Labs என்ற அமைப்பு ” கோவிட்- 19 க்கு எதிரான வெறுப்பு பேச்சு குறித்து நெறிமுறைகள் வெளியிட வேண்டும்; மதக் குழுக்களோடு இதனைத் தொடர்பு படுத்த கூடாது” என்று உலக சுகாதார அமைப்பை (WHO) அது கேட்டுக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு குறித்து ஆய்வு செய்துவரும் அமைப்பாகும்.
” தில்லி கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்; கடைகள் நாசமாயின. தவறான பிரச்சாரமும்,கேடு விளையும் வகுப்புவாத வார்த்தைகளுமே இந்த வன்முறைக்கு காரணம்” என்று கூறும் Equality Labs ன் நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தர ராஜன். “அடுத்த இனப்படுகொலை நடைபெறும் அபாயம் இன்னமும் தெரிகிறது” என்கிறார்.
மொழிபெயர்ப்பு: பீட்டர் துரைராஜ்.