பழ நூறு வருடங்களாக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்து நமது முன்னோர்களின் பலவேறு போராட்டங்களுக்கும், துயாயங்களுக்குப் பின்னால் சுதந்திரம் பெற்றதை நாம் எல்லாம் அறிவோம். அவ்வாறு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு நேற்றைய தினத்துடன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கின்றோம்.
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று பாடுவார் நாகூர் அனிபா அவர்கள். இத்தகைய சுதந்திர இந்தியா எனறவுடன் நம் அனைவருக்கும் நம் மணக்கண்முன் வருவது இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இந்த நாடு அதன் குடிமக்களுக்கு சில அடிப்படை உரிமைளை வழங்கியிருக்கிறது. அதன் மூலமாக மக்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டும் என அரசு சில அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது எனபதுதான். அவை சம உரிமை (Right to equality), நமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக எழுத்து மற்றும் பேச்சுரிமை (Right to freedom), சுரண்டலுக்கு எதிரான உரிமை (Right against exploitation), சமய சுதந்திர உரிமை (Right to freedom of religion), கலாச்சார மற்றும் கல்வி உரிமை (Cultural and educational rights).
இந்நிலையில் இக்கட்டுரையின் மூலம் நாம் விவாதிக்க விரும்புவது அரசியலமைப்பு சட்டம் வாங்கியுள்ள அனைத்து உரிமைகளும் சரியான முறையில் மக்களை சென்றடைகிறதா, இதன் மூலமாக மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.
சம உரிமை (Right to equality) : இந்தியா நாட்டின் ஒவ்வொரு மக்களும் மத இன மொழி என எந்த வகையான பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை. இங்கு அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகிறார்களா என்று வரலாற்றை சற்று திரும்பி பார்க்கையில் அவ்வாறு வரலாறு ஒருபோதும் இருந்ததில்லை. குறிப்பிட்ட சில இன, மத மக்கள் மீதான வெறுப்பும் அவர்களுக்கு எதிரான கொடுமைகளும் வரலாறு முழுவதும் நிறைந்திருப்பதை நம்மால் காண முடிகிறது.
பெரிய சம்பவங்கள் பலவற்றுள் 1946 ஆம் ஆண்டில் கிரேட் கல்கத்தா கொலைகள், பீகார் மற்றும் கர்முக்தேஷ்வர், நவகாளி படுகொலைகள், 1947 ஆம் ஆண்டில் ஜம்முவில் படுகொலை செய்யபட்ட முஸ்லிம்கள், பின் முஸ்லிம்கள் பெரிய அளவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் போலோ நடவடிக்கை, பின்னர் கொல்கத்தாவில் முஸ்லிம் எதிரான கலவரம், 1950 ஆம் ஆண்டின் பாரிசல் கலவரங்கள், 1964 ஆம் ஆண்டின் கிழக்கு-பாக்கிஸ்தான் கலவரம், 1969 ஆம் ஆண்டின் குஜராத் கலவரம், 1984 பேவண்டி கலவரம், 1985 குஜராத் கலவரம், 1989 பாகல்பூர் கலவரம், பம்பாய் கலவரம், 1983 ஆம் ஆண்டில் நெல்லி கலவரம் மற்றும் 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் மற்றும் 2013 ஆம் ஆண்டில் முசாபர்நகர் கலவரம் .
பிரிவினைக்கு பின்பான இந்த வன்முறைகளின் முறைகள் நன்கு நிறுவப்பட்டவையாகும். இதை பல ஆய்வுகள் விளக்குகின்றன. 1950 ஆம் ஆண்டு முதல் இந்து-முஸ்லிம் வகுப்புவாத வன்முறையில் 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1954 ஆம் ஆண்டு மற்றும் 1982 ஆம் ஆண்டுக்கு இடையில் 6,933 இனவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. 1968 ஆம் ஆண்டு மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு இடையில் மொத்தம் 3,949 சம்பவங்களில் 530 இந்துக்கள் மற்றும் 1,598 முஸ்லிம்கள் தாக்குதல்கள் மத இன அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அர்சிலயமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள நாட்டில் தான் குறிப்பிட்ட மக்கள் மட்டும் கலவரங்களால் ஏனைய பெயர்களால் கொல்லபடுகிறார்கள். இதானல்தானோ என்னவோ இது அசாதாரண இந்தியா.
எழுத்து மற்றும் பேச்சுரிமை (Right to freedom)
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தனது கருத்தை வெளிப்படையாக கூறி வந்த கௌரி லங்கேஷ் அவர்கள் செப்டம்பர் 5, 2017 அன்று தனது வீட்டின் முன்னாள் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதும், கேரளாவை சேர்ந்த சித்திக்கப்பான் இன்று வரை உத்திரப்பிரதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் இந்தியாவில் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்திற்கு இருக்கும் நிலையை நமக்கு முன்னாள் தோலுரித்து காட்டுகிறது.
பொது ஊடகங்களுக்கு மட்டுமல்லாது முகநூல், நெட் ப்ளிக்ஸ் போன்ற இணைய தளங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது மத்திய பா ஜ க அரசு. Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021 என்ற வழிகாட்டுதல்களின்படி, முதல் முறையாக மின்னணு ஊடக நிறுவனங்கள், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் எப்படி செயல்பட வேண்டுமென்ற வரைமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.
“தீங்கிழைக்கும் தகவலை “முதலில் வெளியிட்டவரின்” விவரங்களை சமூக ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தீங்கிழைக்கும் தகவலை பகிர்வோருக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்”. இந்த ஒரு விதிமுறையை கொண்டு ஒட்டுமொத்த சட்டத்தின் கடும் நிலையை நாம் கண்டுகொள்ள முடியும்.
180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், ஊடக ஒடுக்கு முறைகளை அடிப்படையாக கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) 2017-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீண்டும் சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் பின்தங்கி 138 வது இடத்திற்கு இறங்கி உள்ளது. இவ்வாறாக நமது நாட்டின் ஊடக சுதந்திரம் சர்வதேச அளவில் பின்தங்கியிருப்பது நமது தேசம் இன்னும் இன்னும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தில் பின் தங்கியிருப்பதை நம்மை தவிர எல்லா நாடுகளும் அறிந்த உண்மையாக இருக்கிறது.
பேச்சு மற்றும் எழுத்துரிமை இல்லாத நிலையிலும் கூட நாம் இது போன்ற கட்டுரைகளும் எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பதால்தான் என்னவோ இது அசாதாரண இந்தியாவாக இருக்கிறது.
மத உரிமை (Right to freedom of religion)
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டம்தான் CAA சட்டத்தை எதிர்த்து இந்தியா முழவதும் நடைபெற்ற சாஹின்பாக் போராட்டம். இந்த ஒற்றைப் போராட்டம் இந்தியாவில் தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் எந்த அளவிற்கு உள்ளதை என்பதை நமக்கு உணர்த்த்திவிடுகிறது.
மதத்தை வைத்து மக்களை துண்டுபோடும் வேலை என்பது நேற்று இன்றல்ல வரலாறு முழுவதும் மக்களை மதத்தை வைத்து பிரிப்பதும் அதனை கொண்டு அரசியல் ஆதாயம் பெறுவதும் நாம் கண்டுவருவதுதான். நாட்டின் முன்மாதிரி மாநிலம் என தற்போதைய பிரதமர் மோடி அவர்களால் மார்த்தட்டிக் கொள்ளப்படும் குஜராத் மதக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததுதான். அங்கு முஸ்லீம்களுக்கு நடந்த அனைத்து கொடுமைகளும் அனைவரும் அறிந்த ரகசியமகாக இருப்பதால்தான் இது அசாதரமான இந்தியா (INCREDIBLE INDIA)
எந்த மதத்தை வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுத்து அதனை பின்பற்றி வாழ்ந்துகொள்ளலாம் என்பது சட்ட உரிமையாக இருக்கிறது, ஆனால் சமூகத்தில் முற்றிலும் வேறான நிலையே இங்கு காணப்படுகிறது.
இந்தியாவில் இருக்கவேண்டுமானால் இந்து மதத்திற்கு திரும்புங்கள் இல்லையேல் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று மத்திய அமைச்சர் வெளிப்படையாக கூறும் நிலையில்தான் இந்தியாவின் மதச்சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் இது மத சுதந்திரம் உள்ள நாடு என நாம் நம்புவதால்தான் இது அசாதரமான இந்தியாவாக (INCREDIBLE INDIA) இருக்கிறது.
கலாச்சார மற்றும் கல்வி உரிமை (Cultural and educational rights)
குறிப்பிட்ட மதத்தை சார்ந்த மக்கள் மட்டும் குறிவைத்து தாக்கப்படுவதும் அவர்களின் கலாச்சாரங்கள் தொடர்ந்து ஆபத்துக்குள்ளாகி வருவதையும் நாம் காண முடியும். அதற்கான மிகசிறந்த எடுத்துகாட்டு பல்வேறு பலங்குடியின மக்களின் மொழி, பண்பாடு மட்டுமல்லாது பல பலங்குடியின மக்களே காணாமல் ஆக்கபட்ட்டிருப்பதுதான் அசாதாரண இந்தியா என நாம் கூறுகின்ற தற்போதைய இந்தியாவின் நிலை.
மேற்கூறிய அனைத்து உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக அடக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது மத்தியில் இருக்கும் பா ஜ க அரசு அனைத்து வகையிலும் ஏழை எளிய மக்கள் கல்வி பெறுவதை தடுத்து வருகிறது. அது 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதில் தொடங்கி, நீட் வரையும் நீண்டுள்ளது. அதனையும் தாண்டி மத்திய பல்கலைக்கழகங்கள் உயர் சாதியினருக்கான உறைவிடமாகவே மாறிவிட்ட அளவிற்கு ஏழை எளிய மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜே என் யு மத்திய பல்கலைகழகத்தில் நஜீப் என்கிற மாணவன் காணமல் ஆக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முழுமையாக முடிந்த நிலையிலும். அவருக்காக வேண்டி அவரது தாய் இந்தியா முழுவது தொடர்ந்து போராடி வந்தும் கூட அவரை பற்றிய எந்த ஒரு சிறு செய்தியும் இன்றுவரை காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.
சென்னை ஐ ஐ டியில் பாத்தீமா லத்தீப் எனும் மாணவி தான் முஸ்லீம் என்கிற ஒரே காரணத்திற்காக பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகிறார். அதனால் தனது ஹாஸ்டல் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு செய்து கொள்கிறார். தான் முஸ்லீம் என்கிற ஒற்றைக் காரணத்தால்தான் தனக்கு இத்தகைய கொடுமைகள் நடைபெற்றது என தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதை தொடர்ந்து சில நாட்களில் அதே துறையை விபின் என்னும் பேராசிரியர் தன்மீது ஆதிக்க சாதியினரின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறி தனது பேராசிரியர் பதவியை ராஜினமா செய்கிறார். இவ்வாறாக தொடக்கக் கல்வி முதல் மத்திய பல்கலைக் கழகங்கள் வரை ஏழை எளிய மாணவர்களின் கல்வி முற்றாக பாதிப்புக்குள்ளாயிருக்கும் நிலைதான் இந்தியாவில் காணப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பு உரிமை இருப்பதாக நாமெல்லாம் போற்றிக்கொண்டிருப்பதால்தான் இது அசாதரணமான இந்தியாவாக இருக்கிறது.
முடிவுரை
“நாடு என்பது வெறும் நிலம் அல்ல! அங்கு வாழும் மக்கள்தான் நாடு ”என்று கூறுவார் பேரறிஞர் அண்ணா. ஆம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாம் நமது நாட்டின் வளர்சியை வெறுமனே உயர்ந்து நிற்கும் சிலைகளை கொண்டோ, அல்லது நமது ராணுவ வீரர்கள் மற்ற நாட்டு வீரர்களை தாக்கியதைக்கொண்டோ, ஏதேனும் ஒரு சில நபர்கள் தனது வருவாயில் ஆயிரம் கோடி ரூபாய் ஈடியிருபதையோ கொண்டு அளவிட கூடாது. மாறாக நம்மையும் நம்மை சுற்றியுள்ள மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய நிலை இங்கு உள்ளதா என சிந்தித்து பார்பதன் மூலமாகவும். குறைந்தபட்சம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையாவது நமக்கு கிடைக்கிறதா என்பதை வைத்துதான் நாம் இந்தியாவின் வளர்ச்சியை கண்டுபிடிக்க முடியும்.
இறுதியாக இங்கு எந்த ஒரு குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்காமல் இருந்தால், எந்த ஒரு மாணவ மாணவிக்கும் கல்வி மறுக்கப்படாமல் இருந்தால், எந்த ஒரு ஊடகவியாளாளரும் உண்மையை கூறியதற்காக கைது செய்யவோ, கொலை செய்யவோ படாமல் இருந்தால். அடித்தட்டு மக்கள் தங்களது மத இன கலாச்சாரத்தை காக்க இங்கு அமைதியான சூழல் காணப்பட்டால் இன்னும் நீங்களும் நானும் இந்தியன் என்பதை இந்த அரசு ஒப்புக்கொள்ளுமானால் நானும் ஒப்புக்கொள்கிறேன் இது அசாதாரமான இந்தியா என்பதை.
சை. இஹ்சானா